
நாட்டின் உயர்ந்த மருத்துவர்கள் அமைப்பான இந்திய மருத்துவ கூட்டமைப்பு மத்திய அரசு கொரோனாவுக்கு எதிராக போராடி தங்கள் பணியால் மரணம் அடைந்த மருத்துவர்களை கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தான் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறித்து பேசினார். அவருடைய உரையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து அதன் மூலம் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த மருத்துவர்களை பற்றி எந்த விதமான சுட்டலும் இல்லை.
மேலும், சுகாதாரதுறையின் மத்திய இணை அமைச்சர் அஷ்வினி சவுபி சுகாதாரத்துறை மாநில பட்டியலில் வருவதால் இறந்த மருத்துவர்கள் குறித்து மத்திய அரசிடம் எந்த விதமான தரவுகளும் இல்லை என குறிப்பிட்டது இந்திய மருத்துவ கழகத்தினரை இன்னும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

மத்திய அரசு இந்த மருத்துவர்களை அலட்சியப்படுத்தி நிராகரிப்பதாகவும், மேலும் அவர்களை கைவிட்டுவிட்டதாகவும் மருத்துவக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 382 மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் இருந்து மரணம் அடைந்துள்ளதாகவும், அதில் மரணம் அடைந்தவர்களில் இளம் மருத்துவருக்கு 27 வயது எனவும், மூத்தவருக்கு 85 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பணியாளர்களின் பங்களிப்பை சுட்டிக்காட்டும்போது மத்திய அமைச்சர் மருத்துவ பணியாளர்களை மறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாதான் உலகிலேயே அதிக அளவில் மருத்துவர்களையும், சுகாதார பணியாளர்களையும் கொரோனாவால் இழந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் இவர்களை கொரோனா வீரர்கள் என அழைத்துவிட்டு மறுபக்கம் அவர்களின் குடும்பங்களுக்கும் அவர்களுக்கும் வீர மரணம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்காமல் இருப்பது இந்த மத்திய மோடி அரசின் பாசாங்குதனத்தை காட்டுவதாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








