இந்தியா

OBC இடஒதுக்கீடு எத்தனை %?: 3 மாதங்களில் அறிவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு- 170 பக்க தீர்ப்பின் சாராம்சம்!

OBC வகுப்பினருக்கு 50% சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த 170 பக்க தீர்ப்பின் சாராம்சம்.

OBC இடஒதுக்கீடு எத்தனை %?: 3 மாதங்களில் அறிவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு- 170 பக்க தீர்ப்பின் சாராம்சம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோர உரிமை உள்ளது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று சமூக நீதியைக் காக்கும் வகையில் மகத்தான தீர்ப்பை வழங்கியது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த 170 பக்க தீர்ப்பின் சாராம்சம் :

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதைப் பொறுத்தவரை, இடஒதுக்கீடு 50 சதவீதம் என்ற அளவை தாண்டக்கூடாது என்ற நிபந்தனையுடனும், தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டிற்கு இடையூறு செய்யாத வகையில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ஏற்ப அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதிலிருந்து மத்திய அரசு, அகில இந்திய ஒதுக்கீடாக மாநில அரசுகள் ஒப்படைத்த இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க முன்வந்துள்ளதைக் காட்டுகிறது. ஆனால், உச்சநீதிமன்றம் வகுத்த திட்டத்தின் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால் அதில் தலையிட முடியாது என மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகள் அனைத்தும் தற்காலிக ஏற்பாடுகள் தான் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இதுசம்பந்தமாக விரைவில் சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மாணவர் சேர்க்கையின்போது அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என மருத்துவ கவுன்சில் விதிகள் கூறுகின்றன. ஆனால், அது அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களைப் பற்றி குறிப்பிடவில்லை என்றாலும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடவில்லை. அந்த விதிகளில் மாநில இடங்கள் - அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் என தனித்தனியாகக் குறிப்பிடவில்லை.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த போது, அதற்கு மருத்துவ கவுன்சில் எதிர்ப்பு தெரிவிக்காத போது, மாநில அரசு ஒப்படைத்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பதை ஏற்க முடியாது.

OBC இடஒதுக்கீடு எத்தனை %?: 3 மாதங்களில் அறிவிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு- 170 பக்க தீர்ப்பின் சாராம்சம்!

நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்க்கப்படுவதால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்தால் தகுதி சமரசம் செய்து கொள்ளப்படாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்குத் தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அந்த வகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மத்திய அரசு கொள்கை அடிப்படையிலோ அல்லது மாநில அரசின் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலோ இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதால், மாணவர்களின் தகுதி எந்த விதத்திலும் பாதிக்காது.

மாநில அரசுகள் ஒப்படைத்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டு சலுகையை மறுக்க எந்த காரணமும் இல்லை. ஆகவே, உச்சநீதிமன்றம் ஏதும் உத்தரவு பிறப்பிக்கும் வரை, மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு சலுகையை வழங்க சட்டரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் எந்த தடையும் இல்லை.

இடஒதுக்கீடு என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத வரை, அது அடிப்படை உரிமையோ, சட்டப்பூர்வ உரிமையோ அல்ல. அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16வது பிரிவுகள், இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. தமிழக அரசு, 1993ம் ஆண்டே சட்டம் இயற்றியுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2016ம் ஆண்டு முதல் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள போதும், இதுவரை சட்ட வடிவம் பெறவில்லை. இந்த இடஒதுக்கீடு தெளிவான வடிவத்தைப் பெறாத நிலையில், இடஒதுக்கீட்டு சலுகையை வழங்கும்படி நீதிமன்றமும் உத்தரவிட முடியாது. ஆனால், தெளிவாக மாநில அரசு சட்டம் இயற்றியிருக்கும் பட்சத்தில் அதை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதை புறந்தள்ளிவிட முடியாது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ கவுன்சில் அதிகாரிகளும் முடிவெடுக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்த கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய பொது சுகாதார பணிகள் இயக்குனர், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, இறுதி செய்ய வேண்டும்.

இந்த உத்தரவின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories