இந்தியா

மாஸ்க் அணியாததை தட்டிக்கேட்ட சக ஊழியர்: மாற்றுத்திறனாளி பெண்ணை பலமாக தாக்கிய மேலாளர் - நெல்லூரில் பகீர்!

முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் நெல்லூரில் நடந்தேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்க் அணியாததை தட்டிக்கேட்ட சக ஊழியர்: மாற்றுத்திறனாளி பெண்ணை பலமாக தாக்கிய மேலாளர் - நெல்லூரில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் கொரோனா பரவல் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்கள் அணிந்து, சுய பாதுகாப்புடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு, அரசுகள் என பல தரப்பில் இருந்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் மாஸ்க் அணிவதன் மூலம் பெருமளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியா போன்ற மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் மக்களை கட்டாய முகக்கவசம் அணிய வைப்பது சவால் நிறைந்ததாக உள்ளது என அரசு தரப்பு கூறி வருகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாஸ்க் அணியாததை தட்டிக்கேட்ட சக பெண் ஊழியரை அதிகாரி ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

நெல்லூரில் உள்ள ஆந்திர சுற்றுலாத்துறை மேம்பாட்டு அலுவலகத்திலேயே மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜூன் 27ம் தேதி, முகக் கவசம் அணியாமல் துணை மேலாளர் பாஸ்கர் அலுவலகம் வந்திருக்கிறார்.

அவரிடம் சக ஊழியரான மாற்றுத்திறனாளி பெண் ஏன் மாஸ்க் அணியவில்லை என கேள்வி எழுப்பியதை அடுத்து கடும் கோபமுற்ற பாஸ்கர் விருவிருவென எழுந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியிருக்கிறார். பிற ஊழியர்கள் தடுக்க முயற்சித்த போதும் நிறுத்தாமல் பாஸ்கர் தாக்கியதால் அந்த பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று (ஜூன் 30) காவல் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து துணை மேலாளர் பாஸ்கரை போலிஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே, மாற்றுத்திறனாளி பெண்ணை பாஸ்கர் தாக்குவது அலுவலகத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து ஆந்திராவின் சுற்றுலா மேம்பாட்டு மாநகராட்சி நிர்வாக இயக்குநர் பிரவீன் குமார் துணை மேலாளர் பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்ததோடு துறை ரீதியான நடவடிக்கை உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நெல்லூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories