இந்தியா

“மின்துறையை தனியார் மயமாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்கமாட்டோம்” - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்!

புதுச்சேரியில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

“மின்துறையை தனியார் மயமாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்கமாட்டோம்” - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுச்சேரியில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“புதுச்சேரி மாநிலத்தில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் விட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரமானது மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் இதனை செய்ய முடியாது. இதனால் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.

ஆனால் புதுச்சேரியும், டெல்லியும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங்களாகும். புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழை எளிய மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தில் சலுகையும் அளித்து வருகிறோம். ஆனால், மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்கு போட்ட சட்டத்தை புதுச்சேரியிலும் திணிக்கப் பார்க்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அதற்கு மாநிலங்களும் ஒப்புதல் அளிக்கவேண்டும். இல்லையென்றால், புதுச்சேரி மாநிலம் ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் தெளிவாக உள்ளோம். எக்காரணத்தை கொண்டும் புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதை நானோ, அமைச்சர்களா, எம்.எல்.ஏக்களோ ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இதுசம்பந்தமாக சட்டப்பேரவையில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். மத்திய அரசு மக்கள் உணர்வுகளையும், மாநில அரசு உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். மின்துறை மக்களுக்கு சேவை செய்யும் துறையாக உள்ளதே தவிர லாபம் ஈட்டும் துறையாக இல்லை. மாநிலங்கள் விரும்பாவிட்டால் மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது.

மின்சாரத்தை தனியார் மயமாக்கினால் புதுச்சேரியில் விவசாயிகள், ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், தொழிற்சாலை வருவதும் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்குவதை நாங்கள் முழுமையாக எதிர்ப்போம்.

“மின்துறையை தனியார் மயமாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்கமாட்டோம்” - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்!

கொரோனா தொற்று உள்ள இந்த சமயத்தில் நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் இரவு பகல் பார்க்காமல் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம். மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. மாநில வருவாய் குறைந்துவிட்டது.

அப்படி இருந்தாலும் கூட அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம், பென்ஷன் கொடுத்து வருகிறோம். இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றுகிறோம். கவர்னர் கிரண்பேடி தலையீட்டால் இலவச அரிசி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த தடையையும் மீறி அதனை செய்ய உள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் முதல் வறுமைகோட்டிற்கு மேல் உள்ள குடும்பத்திற்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்க உள்ளோம்.

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும், வருமானத்தை பெருக்கவும், வருகின்ற நிதியை முறையாக செலவு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories