இந்தியா

“இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பா.ஜ.க அரசிடம் சிக்கல்... அடுத்து என்ன?” - கி.வீரமணி அறிக்கை!

மருத்துவ இளநிலை - முதுநிலைக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடம் வெறும் பூஜ்ஜியமா?நமது அடுத்த கட்ட நிலை என்ன?

“இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பா.ஜ.க அரசிடம் சிக்கல்... அடுத்து என்ன?” - கி.வீரமணி அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மருத்துவ இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்துள்ள இடங்கள் பூஜ்ஜியம் எனும் நிலையில், நமது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

“2020-2021 கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்பில் நீட் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிவாரியாகவும், இட ஒதுக்கீடு பிரிவினரையும் உள்ளடக்கிய பட்டியலை மத்திய அரசின் சுகாதாரத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கலந்தாய்வுக் குழுவின் இணையத்தில் (www.mcc.nic.in) வெளியிட்டுள்ளது.

இதில் மாநிலங்களில் இருந்து பெறப்படும் அகில இந்திய தொகுப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு முற்றிலுமாக இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. (பட்டியல் காண்க) அதாவது, 7,981 இடங்களில் ஒரு இடம் கூட பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இது குறித்து எழுப்பிய கேள்விக்கும், பின்னர் எழுதப்பட்ட கடிதத்திற்கும் மத்திய சுகாதார அமைச்சரிடம் இருந்து நேரடியான பதில் இல்லை . இதனை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த புகார் மனுவின் அடிப்படையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் கேட்டு 22.5.2020 அன்று தாக்கீது அனுப்பி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திரட்டப்பட்ட தகவல் அடிப்படையில் ஏறத்தாழ 11,000 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டு, அவை பொதுப்பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் அனைத்தும், அரசின் அதிகாரப்பூர்வமான இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் இந்த கல்வி ஆண்டில், மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு தமிழ்நாட்டில் இருந்து பெற்ற அகில இந்திய தொகுப்பில் அளித்த இடங்கள் 941. இதில் ஒரு இடம் கூட பிற்படுத்தப்பட்டோருக்கு தரப்படவில்லை.

“இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பா.ஜ.க அரசிடம் சிக்கல்... அடுத்து என்ன?” - கி.வீரமணி அறிக்கை!

மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசுக்கு எடுத்துச் செல்லப்படும் முதுநிலை மற்றும் இளநிலைக்கான (எம்.பி.பி.எஸ். இடங்கள் 15%, முதுநிலைப் பட்டத்துக்கான இடங்கள் 50%) இடங்களில் அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அறவே இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை என்ற சமூக அநீதியை எதிர்த்து திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறது.

இவ்வாண்டும் இம்மாத தொடக்கத்தில் முதல் அறிக்கையைக் கடந்த 8.5.2020 அன்று வெளியிட்டோம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய அளவில் பூஜ்ஜியம் என்ற அட்டவணையையும் வெளியிட்டு இருந்தோம். அடுத்து இரண்டாவது அறிக்கையினை கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டோம். பல கட்சி தலைவர்களும் இவற்றைத் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டனர்.

இதற்கிடையே அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளருமான தோழர் கோ.கருணாநிதி, இந்தப் பிரச்சினையில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்; அகில இந்திய அளவில் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் பூஜ்ஜியம்தான் என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குப் புகார் மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆணையம், அரசமைப்புச் சட்டம் 338-பி பிரிவின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியது வரவேற்கத்தக்கது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சரகம் 15 நாள்களுக்குள் பதில் அளிக்கத் தவறினால், நேரில் ஆஜராகி பதில் அளிக்கவேண்டும் என்று தாக்கீதும் அனுப்பியுள்ளது.

“இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பா.ஜ.க அரசிடம் சிக்கல்... அடுத்து என்ன?” - கி.வீரமணி அறிக்கை!

பல ஆண்டுகாலமாக தந்திரமாக, கமுக்கமாக பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய பா.ஜ.க ஆட்சி செய்து வந்த அநீதி இப்பொழுது பெரிய அளவு வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், பல கட்சித் தலைவர்களும் தமிழ்நாட்டில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அகில இந்திய அளவில் உ.பி. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் போன்றவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமூகநீதி தொடர்பாக டில்லியில் ஆர்ப்பாட்டமும், கருத்தரங்கமும் நடத்துவது என்று ஏற்கெனவே திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

இடையில் எதிர்பாராது ஏற்பட்ட கொரோனாவால் இது தடைபட்டது எனினும், இந்தப் பிரச்சினையை அகில இந்திய அளவில் அனைத்து சமூகநீதியாளர்கள், தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே எடுத்துச் செல்லும் பொறுப்பை தமிழக எம்.பி.,க்கள் கொண்டு செல்லவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

கொரோனா காலமாக இருப்பதால், நேரில் செல்லும் வாய்ப்பு இல்லாத நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கும் நமது எம்.பி.,க்கள் தந்தி வழியாக, இணையத்தின் வழியாக அழுத்தமான வேண்டுகோள்களை வைக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தப் பிரச்சினையை முன்னெடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அடுத்து அகில இந்திய அளவில் மேலும் அழுத்தம் கொடுக்க, இது தந்தை பெரியாரின் சமூகநீதி மண் என்பதை நிரூபிக்கும் வகையில் கட்சிகளைக் கடந்து அனைவரும் ஓரணியில் நின்று குரல் கொடுப்போம் - களம் அமைப்போம்!

மக்கள் தொகையில் 52 விழுக்காடுள்ள (1980 ஆம் ஆண்டு கணக்குப்படி, 40 ஆண்டுகளுக்கு முன்பு) இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்க ஒருபோதும் இடம் தரமாட்டோம் என்று சூளுரைப்போம்.

தமிழ்நாட்டில் நாம் கொடுக்கும் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்க முயற்சிப்போம்!

வாழ்க பெரியார்! வெல்க சமூகநீதி!!

“இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பா.ஜ.க அரசிடம் சிக்கல்... அடுத்து என்ன?” - கி.வீரமணி அறிக்கை!

சிக்கல் எங்கே?

சட்டத்திலா - மத்திய அரசின் மனத்திலா?

உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகச் சொல்லப்படுவது எல்லாம் தவறு. இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் வழக்கு - வழங்கப்படும் என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் மத்திய அரசு சார்பில் சொல்லப்பட வேண்டியது - ஏன் தயக்கம்? தயக்கம் சட்டத்தில் இல்லை - மத்திய அரசின் மனத்தில்தான்.

உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள நிலையில், எப்படி அவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?

ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சதவிகிதத்தில் இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருப்பதால் சிக்கல் என்பது சரியான வாதமல்ல.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு - எல்லா மாநிலங்களிலும் ஒரே அளவில்தானே உள்ளது - எனவே இது தவறான வாதம்.

banner

Related Stories

Related Stories