இந்தியா

“கொரோனா வாட்டி வதைக்கும் நிலையிலும்கூட மாநில உரிமைகளை கபளீகரம் செய்வதா?” - கி.வீரமணி கண்டனம்!

கொரோனா மக்களை வாட்டி வதைக்கும் இந்தத் தருணத்திலும்கூட மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசு கபளீகரம் செய்வதா? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்.

“கொரோனா வாட்டி வதைக்கும் நிலையிலும்கூட மாநில உரிமைகளை கபளீகரம் செய்வதா?” - கி.வீரமணி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா மக்களை வாட்டி வதைக்கும் இந்தத் தருணத்திலும்கூட மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசு கபளீகரம் செய்வதா? தமிழக அரசு தட்டிக் கேட்கும் உரிமைகளை இழப்பதா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு :

“கொரோனா தொற்று உலகத்தையும், இந்தியாவையும் பயமுறுத்தி, பலிகள் எண்ணிக்கையும் நாளும் உயர்ந்து வருவதைத் தடுக்க, நம் நாட்டில் இதுவரை மூன்று ஊரடங்குகள் - தொழில்கள் முடக்கம்வரை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அதேநேரத்தில், நோயின் கொடுமை அச்சுறுத்தல் ஒருபுறம் என்றால், இதற்குத் தீர்வு காணும் ஊரடங்கு மூலம், பல கடைகள் மூடப்பட்டு, தொழில்கள் முடக்கப்பட்டதால் வேலைவாய்ப்பு இழந்த தொழிலாளர்களும், தங்கள் விவசாயப் பொருள்கள் விளைச்சலைக்கூட சரிவர விற்று போட்ட முதலைக் கூட எடுக்க முடியாத வேதனையான நிலையில், பசியும், வறுமையும் மறுபுறம் என்ற சொல்லொணா சோகத்திற்கு வெகுமக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களும் - உரிமைகளும் பறிக்கப்படும் கொடுமை!

நாட்டில் பொருளாதாரமோ முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டு திணறும் நிலை!

இந்த வேதனைமிக்க சூழ்நிலையில், அரசமைப்புச் சட்டப்படி, மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களும் - உரிமைகளும் பறிக்கப்படும் கொடுமையும், கொரோனா கோரத்தாண்டவத்தில் மற்றொரு புறம் மத்திய அரசால் அரங்கேறிக் கொண்டுள்ளது.

பொதுசுகாதாரம் என்பது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ளது என்பதே மறந்து போகும் நிலையில், இந்த கொரோனா காலத்தில் மத்திய அரசே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஆணை போடுவது ஒருபுறம்; மறுபுறத்தில் மாநிலங்களுக்குரிய நிதி உதவிகளைக்கூட போதிய அளவில்கூட தராமல், ஏன், ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவைத் தொகைகளைக்கூடத் தராமல், மாநில அரசுகள் மத்திய அரசை நோக்கி கை பிசைந்து, வாய் பிளந்து நிற்கும் அவல நிலைதான் உள்ளது!

மற்ற மாநிலங்கள் துணிவுடன் பதில் சொல்லுகின்றன. தெலங்கானா முதல்வர், ‘‘எங்களுக்குப் போதிய நிதி உதவி செய்யுங்கள்; இல்லையேல் எங்களுக்குத் தனியே நிதி உருவாக்கும் வாய்ப்பை - அதிகாரத்தையாவது அளியுங்கள்’’ என்று கேட்டுள்ளார்.

‘‘மத்திய உள்துறை அமைச்சர், மேற்கு வங்காள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சாட்டிய குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமுமில்லை; நிரூபிக்க முடியுமா?’’ என்றெல்லாம் அங்குள்ள ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எழுந்து நின்று உரத்து பதில் அளிக்கிறார்கள்!

சட்டீஸ்கர் முதல்வர், எங்களுக்குப் போதிய நிதியைத் தாருங்கள் என்று நேற்று முன்தினம் கூட கூறுகிறார்.

“கொரோனா வாட்டி வதைக்கும் நிலையிலும்கூட மாநில உரிமைகளை கபளீகரம் செய்வதா?” - கி.வீரமணி கண்டனம்!

புதுவையில் ஒரு துணை நிலை ஆளுநர்மூலம், அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக ஆளும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் உள்ள அரசுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இடைஞ்சல் செய்வதை முதல்வர் கண்டித்துள்ளார். நோய்த்தொற்றை அறிவது, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை போன்ற வண்ணங்களை அடையாளப்படுத்துவது போன்றவற்றை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு விட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்!

கைவிடுங்கள் என்று வற்புறுத்திச் சொல்லும் துணிவு ஏனோ வரவில்லை!

மாநில அரசுகளின் உரிமையை அப்பட்டமாகப் பறித்து, மின்சாரத்துறையையே தனியார் மயமாக்கி, ஏழை விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்தையும் பறிக்கும் நோக்கில், புதிய மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவை இந்த கரோனா நெருக்கடியிலும் கொணர்ந்திருப்பதை, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்த்து அறிக்கை விட்ட பிறகுதான், ஏதோ மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசின் முதல்வர் டெல்லிக்குக் கடிதம் எழுதி, தள்ளி வைக்கச் சொல்லுகிறார்; கைவிடுங்கள் என்று வற்புறுத்திச் சொல்லும் துணிவு ஏனோ அங்கு வரவில்லை!

மத்திய அரசின் தந்திரம்!

காவிரி நதிநீர் ஆணையத்தினை மத்திய ஜல்சந்தி அமைச்சகத்தின் ஆளுமையின்கீழ் கொண்டு சென்று, மத்திய கெசட் அறிவிப்பு வந்த பின்புதான் ஊரடங்கில், ‘வாயடங்கும்‘ என்ற தந்திரத்தை மத்திய அரசு கையாளுவதுபோல அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மத்திய அரசின் இந்தச் செயலுக்கு அது நிர்வாக ஒழுங்குமுறைதான் என்று சப்பைக் கட்டுக் கட்டி, வியாக்கியானம் செய்கிறது. இந்தக் கொரோனா நெருக்கடியில் இப்படி. மாநில உரிமைகள் பலி பீடத்தில் உள்ளன!

“கொரோனா வாட்டி வதைக்கும் நிலையிலும்கூட மாநில உரிமைகளை கபளீகரம் செய்வதா?” - கி.வீரமணி கண்டனம்!

மாநில உரிமைகள் - அரசமைப்புச் சட்டப்படி உள்ள உரிமைகள் - இந்தியா ஏக ஒற்றை ஆட்சிபோல - ஒரு கூட்டு ஆட்சி - ‘‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’’ என்பதையே அகற்றி விடுவதாகவே ஒவ்வொரு நாளும் இத்தகைய புதிய புதிய நடவடிக்கைகள் மூலம் மாநில உரிமைகள் பலி பீடத்தில் உள்ளன!

அந்தந்த மாநில முதல்வர்கள் உள்பட பலரும் தொழிலாளர்களை அந்தந்த மாநிலத்திற்கு அனுப்பும் செலவு - ரயில்வே கட்டணத்தை மத்திய அரசே, பிரதமர் துவக்கி சேகரிக்கும் புதிய ‘‘பிரதமர் கேர்ஸ்’’ என்ற நிதியிலிருந்துகூட தராமல், மாநிலங்களே தர வேண்டும் என்பது எவ்வகையில் கருணையாகும் என்று கேட்கிறார்கள்?

தமிழ்நாடு அரசு தங்களுக்குள்ள உரிமைகளைக்கூட - நீட் தேர்வு விலக்கு போன்றவற்றிலும், மின்சாரத் திருத்தச் சட்டம் - தேவைப்படும் நிதி உதவி கோருதல் - பாக்கிகளை மாநிலத்திற்கு உடனே திருப்பி அளித்தல் போன்றவற்றில் செய்யவேண்டாமா?

‘‘கொரோனா கொள்ளையாக’’ உரிமைகள் பறிபோகின்றன!

மாநில அதிகாரங்கள் இப்படி ‘‘கொரோனா கொள்ளையாக’’ பறிபோவதைத் தடுக்கவே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் - நிலைமைகள் ஓரளவு சீரடைந்த நிலையும், உரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கை - அரசமைப்புச் சட்ட உரிமைகளைக் காப்பாற்ற வழியும் செய்யவேண்டிய பொறுப்பில் உள்ளார் என்பது வெள்ளிடை மலை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories