இந்தியா

30 கி.மீ... 15 மணி நேரம் - மோடி தரும் ரூ500 வாங்க நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்!

மோடி அரசின் ரூ.500 பணம் வாங்க 30 கி.மீ. நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெணுக்கு 26 ஆயிரம் உதவி கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 கி.மீ... 15 மணி நேரம் - மோடி தரும் ரூ500 வாங்க நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்!
courtesy - arre
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். அரசு அறிவித்த நிவாரணம் இன்னும் முழுமையாக மக்களுக்குச் சென்றடையவில்லை. இந்நிலையில் மோடி அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி ரூ.500 பணத்தை வாங்க 30 கி.மீ. நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார் பெண் ஒருவர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் கிம்மத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கர்வீர். இவருடைய மனைவி ராதா தேவி. இவர்களுக்கு15 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆக்ரா அருகே உள்ள சாம்பு நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்துவரும் இவர்கள், இந்த வேலைக்காக சொந்த ஊரைவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்து வந்துவிட்டனர்.

இந்நிலையில் அவர்கள் வசித்து வரும் குடிசைப் பகுதியில், ஒரு செய்தி பரவியுள்ளது. அதாவது, ஏழை எளியமக்களுக்கு பிரதமர் மோடி ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் 500 ரூபாயை வங்கிக் கணக்கில் போட்டுள்ளார் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கையில் பணமில்லாமல் வறுமையில் இருந்து வந்த ராதாதேவி, இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

30 கி.மீ... 15 மணி நேரம் - மோடி தரும் ரூ500 வாங்க நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்!

பச்சோகரா என்ற இடத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் ராதா தேவிக்கு கணக்கு உள்ளது. அவர், அங்கு சென்று ரூ.500-ஐ எடுத்துவர முடிவு செய்தார். இந்த வங்கி, தற்போது குடியிருக்கும் இடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஊரடங்கில் பேருந்து ஓடாவிட்டாலும், தனது வயிற்றுப்பாட்டைக் கருதி, நடந்தே சென்றாவது பணத்தை எடுத்துவர தீர்மானித்தார்.

ராதாதேவிக்கு நிமிர்ந்து நடக்க முடியாது. கூன் முதுகு. அதாவது 50 வயதான ராதா தேவிக்கு முதுகெழும்பு பிரச்சனை உள்ளது. அதைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய 15 வயது மகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு 30 கி.மீ. தூரம் நடந்தே வங்கிக்கு சென்றுள்ளார்.

அங்கு, சியாம் பதக் என்ற ஊழியரிடம், விபரத்தை சொல்லி, ரூ. 500-ஐ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வங்கிக் கணக்கை சரிபார்த்த அந்த ஊழியர், கணக்கில் 207 ரூபாய் பணம் மட்டுமே இருப்பதாகவும், உங்கள் கணக்கு பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தோடு இணைக்கப்படவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ராதாதேவி, மிகுந்த விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார். “கடந்த 2 மாதங்களாக உடல்நிலைசரியில்லை. வேலைக்கும் செல்லவில்லை” என்று அழாத குறையாக ராதாதேவி கூறியதைக் கேட்ட வங்கி ஊழியர், தனது கைப்பணத்தை கொஞ்சம் ராதாதேவிக்கு கொடுத்து, அனுப்பி வைத்துள்ளார்.

மீண்டும் 30 கிலோ மீட்டர்தூரம் நடந்தே ராதாதேவி வீட்டிற்குத் திரும்பியுள்ளார். மோடி அறிவித்த 500 ரூபாய்க்காக, சுமார் 15 மணிநேரம் நடையாய் நடந்து, 60 கி.மீ. தூரம் சென்ற ராதாதேவியின் துயரக் கதை, ஊடகங்களில் வெளியாகி பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதனையடுத்து பலரும் ராதா தேவிக்குத் தொடர்பு கொண்டு, அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். தற்போது அவரது வங்கி கணக்கில் 26,000 ரூபாய் உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக ராதா தேவி கூறுகையில், “என் கனவுகளில் கூட, எனக்குத் தெரியாதவர்களிடமிருந்து இதுபோன்ற அன்பையும் பாசத்தையும் பெறுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. நான் கற்பனை செய்திருக்க முடியாத அளவில் ஊரடங்கு காலத்தில் இந்த பணம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் உதவும்” உதவிய அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

உணவில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவ மக்களால் முடியும். ஆனால், பேரிடரை சமாளிக்க மக்களே உதவிக் கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் ஒன்று எதற்கு என்ற கேள்வி இங்கு அவசியமாகிறது.

banner

Related Stories

Related Stories