இந்தியா

பைக்கை கழுவிய CRPF வீரரை சங்கிலியால் கட்டி வைத்து கர்நாடக போலிஸ் அராஜகம்! (Video)

போலிஸை தாக்கியதாக குற்றஞ்சாட்டி கோப்ரா கமாண்டோ வீரரை சங்கிலியால் கட்டி வைத்த கர்நாடக போலிஸுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பைக்கை கழுவிய CRPF வீரரை சங்கிலியால் கட்டி வைத்து கர்நாடக போலிஸ் அராஜகம்! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அங்கு இதுவரையில், 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மே 3 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆகையால், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் பொதுவெளியில் நடமாடக்கூடாது என்றும், மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது என்றும் மாநில அரசும், காவல்துறையும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், பெலகாவி மாவட்டத்தில் உள்ள சச்சின் சுனில் சாவந்த் என்ற சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர், தனது வீட்டு வாசலில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த மாவட்ட போலிஸார், கமாண்டோ வீரரிடம் முகக்கவசம் அணியாதது குறித்து கேள்வி எழுப்பியதோடு, அவரைத் தாக்கவும் செய்துள்ளனர்.

பைக்கை கழுவிய CRPF வீரரை சங்கிலியால் கட்டி வைத்து கர்நாடக போலிஸ் அராஜகம்! (Video)

அப்போதுதான், கோப்ரா (Commando Battalion for Resolute Action (COBRA) படை வீரர் என சச்சின் சுனில் சாவந்த் கூறியும், அதனை காதில் வாங்காத போலிஸார் தொடர்ந்து தாக்கியதோடு அவரை கைதும் செய்துள்ளார்கள். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்துள்ளது.

அப்போது, சுற்றியிருந்த மக்கள் சி.ஆர்.பி.எஃப் வீரரை கைது செய்து வெறும் காலில் இழுத்துச் செல்வதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், காவல் நிலையத்தில் குற்றவாளியை போன்று அரைக்கால் சட்டையுடன் கையில் விலங்கு அணிவித்து, சங்கிலியால் கட்டியுள்ளனர். அந்த வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், சி.ஆர்.பி.எஃப் வீரரை கர்நாடகா போலிஸ் கைது செய்து கீழ்த்தரமாக நடத்தியதைக் கண்டித்தும், சச்சின் சுனில் சாவந்துக்கு ஆதரவாக நியாயம் கேட்டும் ட்விட்டரில் நெட்டிசன்கள் #JusticeforSachin என்றும், #ShameKarnatakapolice என்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இதனையடுத்து, சுனில் சாவந்த் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில காவல்துறை தலைவருக்கு மத்திய போலிஸ் ரிசர்வ் படை (CRPF) கடிதம் எழுதியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள கர்நாடக காவல்துறை, மாஸ்க் அணியாமல் வீதியில் சுற்றித் திரிந்த சச்சின் சுனில் சாவந்திடம் விசாரித்தபோது அவர் போலிஸாரை தாக்கி, இழிவாகப் பேசியதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

சி.ஆர்.பி.எஃப் தரப்போ, சச்சின் சுனில் சாவந்த் பல ஆண்டுகளாக நாட்டுக்காக மகத்தான பணியை மேற்கொண்டு வருகிறார். இது போன்ற சம்பவங்கள் தற்போதைய இக்கட்டான சூழலில் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளது. சீருடைப் பணியாளர்கள் மரியாதையுடனும், இரக்கத்துடனும் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், கர்நாடக காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை தாங்களே நடத்துவதாகவும் மத்திய போலிஸ் ரிசர்வ் படை கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories