இந்தியா

“ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மக்களை வஞ்சிக்கும் செயல்”- பா.ஜ.க அரசுக்கு திருமாவளவன் கண்டனம்! #MPLAD #Corona

இரண்டாண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

“ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மக்களை வஞ்சிக்கும் செயல்”- பா.ஜ.க அரசுக்கு திருமாவளவன் கண்டனம்! #MPLAD #Corona
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடாளுமன்ற உறுப்பினர் ஊதியம் பிடித்தம்; இரண்டாண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து ஆகிய மத்திய அரசின் அவசர சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தைப் பிடித்தம் செய்யப்போவதாக தன்னிச்சையாக முடிவெடுத்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியிருப்பது, இந்த நாடு 'பொருளாதார அவசரநிலையை' நோக்கிப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணான இந்த அவசர சட்டத்தை உடனடியாக ரத்துசெய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஒருமாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரணநிதிக்கு வழங்கியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கூடுதலாக ஒரு மாத ஊதியத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் அளித்துள்ளோம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசின் கணக்கிற்கும் ஓரிரு மாதங்களுக்கான ஊதியத்தை வழங்குங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூறியிருந்தால் அதிலே ஒரு நியாயமுள்ளது. ஆனால் உறுப்பினர்களின் கருத்தையறியாமல் மத்திய அரசே தன்னிச்சையாக சம்பளத்தைக் குறைத்து அவசர சட்டம் பிறப்பித்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்து அந்தத் தொகையை ஒருங்கிணைந்த நிதியில் சேர்த்திருப்பதும் ஜனநாயக அணுகுமுறை இல்லை. இது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.

தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அந்தந்தத் தொகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதற்கானது. இந்த இரண்டு ஆண்டுகளுக்கும் கொரோனா சம்பந்தமான பணிகளுக்கு மட்டுமே அந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டிருந்தால்கூட அதனை ஒப்புக் கொள்ளலாம். மாறாக, அந்த நிதியை ஒட்டுமொத்தமாக ரத்து செய்திருப்பது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுச் செயற்பாடுகளை முடக்குவதாகும்.

“ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மக்களை வஞ்சிக்கும் செயல்”- பா.ஜ.க அரசுக்கு திருமாவளவன் கண்டனம்! #MPLAD #Corona

ஏற்கனவே 2020 - 21 ஆம் ஆண்டுக்கான நிதியிலிருந்து தொகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்களை வாங்கித்தர பரிந்துரைக்கலாம் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆங்காங்கே தேவைகளுக்கேற்ப தங்கள் நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்துவருகிறார்கள்.

இப்போது அப்படி ஒதுக்கப்பட்ட தொகை எதுவுமே அந்தப் பணிகளுக்கு பயன்படாது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் இருக்கின்ற மருத்துவமனைகள் பாதிக்கப்படுகின்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியைத் தனது தொகுதியின் நலன்களுக்காக செலவிடுவதே சரியானதாக இருக்கும். மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் அதைச் சேர்த்தால் அந்த தொகையைக் கொண்டு எந்த மாநிலத்துக்கு மத்திய அரசு செலவிடப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே, இது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல; தொகுதி மக்களை வஞ்சிப்பதுமாகும்.

நாடாளுமன்றத்தையும் சனநாயக மாண்புகளையும் அவமதிக்கும் வகையிலும், தொடர்புடைய தொகுதி மக்களை வஞ்சிக்கும் வகையிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அவசர சட்டத்தை மோடி அரசு ரத்து செய்யவேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories