இந்தியா

“எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம்” - பா.ஜ.க அரசின் அறிவிப்புக்கு தி.மு.க எம்.பி கடும் கண்டனம்!

எம்.பிகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ‘கட்’ செய்திருப்பது எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

“எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம்” - பா.ஜ.க அரசின் அறிவிப்புக்கு தி.மு.க எம்.பி கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர், பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அப்போது, பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் 30% ஊதியத்தை ஒரு வருடத்திற்கு பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

“எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம்” - பா.ஜ.க அரசின் அறிவிப்புக்கு தி.மு.க எம்.பி கடும் கண்டனம்!

மேலும், அடுத்த 2 வருடங்களுக்கு எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படும் என்றும் இதன் மூலம் கிடைக்கும் ரூ.7,900 கோடி, கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் எனும் அறிவிப்பு கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்பட்டும் ரூபாய் 5 கோடி, அந்தந்த தொகுதிகளின் மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதுகூட, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் பணிகளில் பெரும்பாலான எம்.பிக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதிகமான நிதி ஒதுக்கி உள்ளனர்.

“எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம்” - பா.ஜ.க அரசின் அறிவிப்புக்கு தி.மு.க எம்.பி கடும் கண்டனம்!

கொரோனா நிவாரண நிதியாக பா.ஜ.க ஆளும் வட மாநிலங்களுக்கு அதிக நிதியும், அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு குறைவான நிதியும் பா.ஜ.க அரசு ஒதுக்கியது கடும் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், தற்போது எம்.பிகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ‘கட்’ செய்திருப்பது எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எம்.பி தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் நேரடி பயனாளிகளாக கிராமப்புற மக்கள் இருக்கின்றனர். கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த இந்த நிதியை இனி மத்திய அரசு தனது விருப்பம்போல் பயன்படுத்தும்” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories