இந்தியா

“சொன்னது ஒன்று; நடந்தது ஒன்று” : கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றவில்லை - மோடி வேதனை!

கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்றவில்லை என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்கவேண்டும் என பிரதமர் வேண்டுக்கொள் விடுத்தார். அதன்படி நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் இன்று காலை 5 மணியோடு மக்கள் ஊரடங்கு நிறைவடைந்தது.

முன்னதாக ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, கொரோனா சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாலை 5 மணியளவில் மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அல்லது பால்கனியில் இருந்து கைதட்டல் அல்லது மணி ஒலித்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதனைப் பெரும்பாலான மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு மக்கள் கூட்டமாக சென்று நன்றி சொல்கிறோம் என்ற பெயரில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், சுய ஊரடங்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனா முன்னெச்சரிக்கைக்காக கொண்டுவரப்பட்ட விதிமுறைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்றவில்லை. கூட்டம் சேர வேண்டாம், வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றவேண்டும்.

மேலும், விதிமுறைகளை மக்கள் உரிய முறையில் பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories