இந்தியா

“கார்டு நம்பர் சொல்லுங்க” : முதியோரை குறிவைத்து மோசடியை அரங்கேற்றிய கும்பல் கைது!

வங்கி அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“கார்டு நம்பர் சொல்லுங்க” : முதியோரை குறிவைத்து மோசடியை அரங்கேற்றிய கும்பல் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வங்கிக் கணக்கு ரகசியக் குறியீட்டு எண்களை பெற்று 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை டெல்லியில் கைது செய்த தமிழக போலிஸார், கும்பலின் முக்கிய தலைவன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகள் என கூறி, புதிய ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு தருவதாக சிலர் பேசுவார்கள். அப்போது ஏ.டி.எம் கார்டின் ரகசிய குறியீட்டு எண், ஓ.டி.பி எண் ஆகியவற்றை கேட்டு தெரிந்துகொண்டு அவர்களது கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்துவந்தனர்.

கார்டு விவரங்களைக் கொண்டு கூகுள் பே, Mobikwik, பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளில் கணக்குகளை தொடங்கி இந்தக் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.

வங்கி வாடிக்கையாளர்கள் பலரிடம் ரூ.3 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலிஸில் புகார்கள் குவிந்தன. இதையடுத்தும் தனிப்படை போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அந்தக் கும்பல் அடிக்கடி மாற்றும் செல்போன் எண்களை தொழில்நுட்ப உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வந்த போலிஸார், அவர்கள் டெல்லியில் இருந்து மோசடியை அரங்கேற்றுவதை கண்டுபிடித்தனர்.

“கார்டு நம்பர் சொல்லுங்க” : முதியோரை குறிவைத்து மோசடியை அரங்கேற்றிய கும்பல் கைது!

விசாரணையில் டெல்லியை சேர்ந்த 3 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படை போலிஸார் டெல்லி சென்று தீபக் குமார் (20), தேவ்குமார் (20) வில்சன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 3 பேரையும் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம், பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் இதுபோல் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கும்பலின் முக்கிய தலைவன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறுவோரிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என போலிஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கார்டுகளின் ரகசிய விவரங்களை எவரிடமும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories