இந்தியா

"யார் தேசத் துரோகி?" - பா.ஜ.க அரசுக்கு எதிராக மாநிலங்களவையில் சீறிய காங்கிரஸ் பெண் எம்.பி!

மாநிலங்களவையில் பா.ஜ.க. அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடி பேசியுள்ளார் இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாகூர்.

"யார் தேசத் துரோகி?" - பா.ஜ.க அரசுக்கு எதிராக மாநிலங்களவையில் சீறிய காங்கிரஸ் பெண் எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசத் துரோகிக்கான அர்த்தம் என்னவென்று சொல்லுங்கள் என மாநிலங்களவையில் பா.ஜ.கவினரை பார்த்து இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., விப்லவ் தாகூர் எழுப்பியுள்ளார்.

கடந்த வியாழனன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது பேசிய விப்லவ் தாகூர், பிரதமர் மோடிக்கும் அவரது அரசுக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துப் பேசியுள்ளார். அதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

அதில், பிரதமர் மோடியைப் பார்த்து “இன்று நீங்கள் விமானத்தில் பயணிக்கிறீர்கள். அந்த சேவை யாரால் வழங்கப்பட்டது? யார் அதனைக் கொண்டு வந்தார்கள்? தற்போது உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் அமைத்தது யார்? ஐ.ஐ.டிக்களை உருவாக்கியது யார்? ஐ.ஐ.எம்களை உருவாக்கியது யார்? இன்று நீங்கள் காண்பது எல்லாமே அவர்களால் (காங்கிரஸ்) அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் உங்களால் உருவாக்கப்பட்டது எது? இந்தியாவை பிரிப்பது மட்டுமே உங்களால் (பா.ஜ.க) நடந்துள்ளது. நாட்டுக்காக நீங்கள் எதுவுமே செய்யவில்லை.

தேசத் துரோகி என்பதற்கு அர்த்தம் எனக்கு தெரிந்தாக வேண்டும். யார் தேசத் துரோகி? இந்தியா சுதந்திரம் அடைந்ததை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக 4 ஆண்டுகள் அக்கட்சி தடை செய்யப்பட்டதே தவிர, நேரு அவர்களை தேசத் துரோகி என முத்திரை குத்தவில்லை.

ஆனால், மக்களவையில் ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக வாஜ்பாய் பேசியபோது கூட தேசத் துரோகி என குறிப்பிடவில்லை. மாறாக இன்று பிரதமருக்கு எதிராகவும், அவரின் ஆட்சிக்கு எதிராகவும் யார் பேசினாலும் அவர்கள் தேசத் துரோகி என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்களை சிறையில் அடைக்கிறீர்கள். ஏன் 6 வயது குழந்தையைக் கூட விட்டு வைக்க மறுக்கிறீர்கள்.

"யார் தேசத் துரோகி?" - பா.ஜ.க அரசுக்கு எதிராக மாநிலங்களவையில் சீறிய காங்கிரஸ் பெண் எம்.பி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பேச உரிமை இல்லை என்று கூறினீர்கள். பின் எதற்காக அதன் எம்.பிக்களை காஷ்மீருக்கு அழைத்துச் சென்றீர்கள்? அவர்களை நீங்களே அழைத்து காஷ்மீரை சர்வதேசமயமாக்கினீர்கள். தற்போது நீங்களே அவர்களை இந்திய விவகாரத்தில் தலையிடக் கூடாது என்கிறீர்கள். பல ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சி செய்தபோது எந்த நாட்டுக்கும் இந்தியா மீது குறை சொல்லும் தைரியம் இருந்ததில்லை. ஆனால் இவை எல்லாம் உங்கள் (பா.ஜ.க) ஆட்சியில் நடைபெற்று வருகிறது. ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகளை மறைக்க இவற்றை எல்லாம் செய்ய வைத்திருக்கிறீர்கள்.

நான் சொல்ல விரும்புவதெல்லாம், நாட்டை பிளவுபடுத்தி விடாதீர்கள். இதுவரை எப்படி நாடும், நாட்டு மக்களும் இருந்தார்களோ அப்படியே இருக்கட்டும். இந்தியாவில் உள்ளவர்கள் ஒன்றும் இன்றோ, நேற்றோ வந்தவர்கள் இல்லை. அவர்கள் பல ஆண்டுகளாக இங்கேயே இருக்கின்றவர்கள்தான். நாங்கள் மதச்சார்பின்மையை போற்றுபவர்கள். எங்களுக்கு தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

நீங்கள் (பா.ஜ.க) எந்த தர்மத்தை பற்றி பேசுகிறீர்கள்? எந்த ராமரை பற்றி பேசுகிறீர்கள்? எந்த ராமராஜ்யம் பற்றிப் பேசுகிறீர்கள்? யாரை வழிபடுகிறீர்கள்? உங்களுக்கு ராமர் கோவில் கட்டவேண்டும் என்றால் கட்டிக்கொள்ளுங்கள். அதேசமயத்தில் அவருடைய கொள்கைகளையும், அவர் கூறியதையும் பின்பற்றுங்கள். அதை விடுத்து, வெறுமனே பேசிக்கொண்டே இருக்காதீர்கள்.” என விப்லவ் தாகூர் உரையாற்றியுள்ளார்.

banner

Related Stories

Related Stories