இந்தியா

"குடியரசுத் தலைவர் உரையா? பா.ஜ.க தலைவரின் அறிக்கையா?” - பட்ஜெட் உரை குறித்து திருமாவளவன் கேள்வி!

குடியரசுத் தலைவரின் உரை, பா.ஜ.கவின் அரசியல் அறிக்கையாகவே இருந்தது எனத் தெரிவித்துள்ளார் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குடியரசுத் தலைவரின் உரை, பா.ஜ.கவின் அரசியல் அறிக்கையாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

இன்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவரின் உரை பா.ஜ.க தலைவரின் அரசியல் அறிக்கையாக இருந்ததே தவிர, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான இந்திய முதல் குடிமகனின் உரையாக இல்லை. இது மிகவும் வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது.

2024ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தை "ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக” ஆக்குவோம் என கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்தவொரு அறிகுறியும் நாட்டில் தென்படவில்லை. மாறாக, 2018-19இல் 6.8% ஆக இருந்த ஜிடிபி (தேசிய மொத்த உற்பத்தி) வளர்ச்சி இப்போது 5%க்கும் கீழே சரிந்து விட்டது.

இதனால் உலகப் பொருளாதார வளர்ச்சியே பாதிக்கப்படும் என ஐ.எம்.எஃப் கவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டின் முன்னோட்டமாகக் கருதப்படும் குடியரசுத் தலைவரின் உரை வெற்று அரசியல் அறிக்கையாக முடிந்திருக்கிறது.

"குடியரசுத் தலைவர் உரையா? பா.ஜ.க தலைவரின் அறிக்கையா?” - பட்ஜெட் உரை குறித்து திருமாவளவன் கேள்வி!

இன்று நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்த அரசின் சாதனைகளில் ஒன்றாகக் குடியரசுத் தலைவர் பாராட்டியிருப்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை மிகப்பெரிய சாதனையாகக் குடியரசுத் தலைவர் புகழ்ந்திருக்கிறார்.

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அம்மாநில முதலமைச்சர்களாக இருந்தவர்களையெல்லாம் சிறையில் அடைத்துவைத்து, மக்களுக்கான தொடர்பு சாதன வசதிகளைக்கூட முடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சி அங்கே திணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் அதை சாதனையாக அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத்திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்காக 900 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் 2020 ஜனவரி மாதம் வரை 19 லட்சம் பேர்தான் பதிவுசெய்துள்ளனர் என வேளாண் அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் குடியரசுத் தலைவரோ பென்ஷன் திட்டங்களின்கீழ் 60 லட்சம் பேர் பயன் அடைந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

"குடியரசுத் தலைவர் உரையா? பா.ஜ.க தலைவரின் அறிக்கையா?” - பட்ஜெட் உரை குறித்து திருமாவளவன் கேள்வி!

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை மூன்று தவணைகளில் வழங்கப்போவதாக கடந்த ஆண்டு மோடி அரசு அறிவித்தது. அதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. ஆனால் 2019 டிசம்பர் 13 ஆம் தேதிவரை சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. பதினான்கரைகோடி விவசாயிகளுக்கு வழங்கப்போவதாகக்கூறப்பட்டது.

ஆனால் வெறும் 3 கோடி பேர் மட்டுமே மூன்றாவது தவணையைப் பெற்றிருக்கிறார்கள். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 75 ஆயிரம் கோடியில் 30 ஆயிரம் கோடி போக மீதமிருந்த தொகை எந்த செலவுக்காகத் திருப்பிவிடப்பட்டதென்று தெரியவில்லை.

அயல்நாட்டு நிறுவனங்கள் இங்கே தொழில் செய்வதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு அதற்கான பட்டியலில் இந்தியா உயர்ந்திருப்பதாக குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறார். அப்படி உயர்ந்ததால் இந்தியாவுக்குள் வந்த முதலீடுகள் அவர்களுக்காக வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரிவிக்கப்படவில்லை.

"குடியரசுத் தலைவர் உரையா? பா.ஜ.க தலைவரின் அறிக்கையா?” - பட்ஜெட் உரை குறித்து திருமாவளவன் கேள்வி!

பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் மீது வன்கொடுமைகள் ஏவப்படுவதாக குடியரசுத் தலைவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர் எந்த நிலையில் உள்ளனர் என்று அவர் எண்ணிப் பார்க்கவில்லை.

நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் நன்மை பயப்பதாகவோ பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்பதாகவோ இருக்காது என்பதையே குடியரசுத் தலைவரின் உரையிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது.”

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் தொல்.திருமாவளவன்.

banner

Related Stories

Related Stories