இந்தியா

“சவால் விட்டு மாட்டிக்கொண்ட அமித்ஷா” : CAA சவாலை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயார்!

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி விவாதிக்கத் தயாரா என்ற அமித்ஷாவின் சவாலை மாயாவதி, அகிலேஷ் யாதவ் மற்றும் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

“சவால் விட்டு மாட்டிக்கொண்ட அமித்ஷா” : CAA சவாலை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பொதுவெளியில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா என சவால் விடுத்தார்.

அவரின் சவாலை பெரும்பாலான எதிர்கட்சியினர் ஏற்க தயாராக உள்ளனர். குறிப்பாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் அமித்ஷா சவாலை ஏற்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சவால் குறித்து மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிராக அரசு விடுத்த சவாலை ஏற்க பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது. எந்த தளத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அகிலேஷ் யாதவ், “குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை அமித்ஷா தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். சவால் விடுக்கிறார். சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் பா.ஜ.க நாட்டை இழிவுபடுத்தி உள்ளது. அரசியல் சட்டத்துடன் விளையாடுகிறது.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய விவகாரங்கள் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் விவாதம் நடத்த நான் தயார். அதுபோல், பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகிய பிரச்னைகள் குறித்தும் பா.ஜனதா தலைவர்கள் விவாதம் நடத்த வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது அசாதுதீன் ஒவைசி பேசியதாவது, “குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா்கள் ஏன் விவாதம் நடத்த வேண்டும்? நான் இங்குதான் இருக்கிறேன். என்னுடன் விவாதம் நடத்த அமித்ஷா தயாராக உள்ளாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

மேலும், “முஸ்லிம்களுடன் அவா் விவாதம் நடத்தவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு உள்ளிட்டவை தொடர்பாக நாம் விவாதிப்போம். இடங்களின் பெயர்களை மாற்றுவதை பா.ஜ.க வழக்கமாகக் கொண்டுள்ளது.

இடங்களின் பெயர்களைத் தொடா்ந்து மாற்றுவோம் என்று பா.ஜ.க தெரிவிக்கலாம். ஆனால், உங்களையே நாட்டு மக்கள் மாற்றிவிடுவாா்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories