இந்தியா

“விண்ணுக்குச் செல்லும் பெண் ரோபோ தயார்” - ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ சிவன் அறிவிப்பு!

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு முன்னோட்டமாக அனுப்பவுள்ள ஹியூமனாய்டு வகையைச் சேர்ந்த வயோமித்ரா என்ற பெண் ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தார்.

“விண்ணுக்குச் செல்லும் பெண் ரோபோ தயார்” - ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ சிவன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022ஆம் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பக்கூடிய ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்த கருத்தரங்கம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்துகொண்டார்.

விண்வெளிக்கு 4 இந்தியர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக விண்வெளிக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் திட்டம் வரும் டிசம்பரில் செயல்படுத்தபடவுள்ளது. இந்த விண்கலத்தில் முதன்முறையாக மனிதப் பண்புகள் கொண்ட ஹியூமனாய்டு ரோபோவும் பயணிக்கிறது. இந்த பெண் ரோபோவுக்கு வயோமித்ரா எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

“விண்ணுக்குச் செல்லும் பெண் ரோபோ தயார்” - ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ சிவன் அறிவிப்பு!

விண்வெளியின் வெளிப்பகுதியில் செயல்படுத்தப்படும் இந்த வயோமித்ரா ரோபோ, மனிதர்கள் விண்வெளியில் இருப்பதற்கு ஏற்ற சூழல், தட்பவெட்பநிலை, சீதோஷ்ண நிலை, விண்வெளியில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றை உடனுக்குடன் உணர்ந்து பூமிக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தில் விண்ணுக்குச் செல்ல ஒரு வீராங்கனை உள்பட 4 பேர் தேர்வாகியுள்ள நிலையில், அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷ்யா சென்று பயிற்சி பெறவுள்ளனர். 4 பேரும் சுமார் 11 மாதங்கள் ரஷ்யாவில் பயிற்சி பெறவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 1984ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா, ரஷ்ய விண்கலத்தில் விண்ணுக்குச் சென்றார். ஆனால், இந்த முறை இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவில் இருந்து, இந்திய விண்கலத்தில் பறக்கவுள்ளனர் என சிவன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், ககன்யான் திட்டம் வெறும் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் மட்டும் அல்ல என பேசிய சிவன், நீண்டகால தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், பொருளாதார மேம்பாடு, கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இளைஞர்களை ஊக்குவித்தல் ஆகிய அனைத்தையும் திறம்பட மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

இந்த அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்ய, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் சரியான தளத்தை ஏற்படுத்தித் தரும் என்றும் சிவன் நம்பிக்கை தெரிவித்தார்.

சந்திரயான் 3 திட்டப்பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சிவன், சந்திரயான் 3-க்கான வேலைப்பாடுகள் அதிவேகமாக நடந்து வருவதாக கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், நிலவுக்கும் மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது, ஆனால், அது இப்போது அல்ல, சிறிது காலம் கழித்துத் தான் எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories