இந்தியா

“கல்வி நிலையங்களை வன்முறைக் காடாக்கும் ஏ.பி.வி.பியினரை கைது செய்யவேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!

ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யினரை கைது செய்யவேண்டும் எனதொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

“கல்வி நிலையங்களை வன்முறைக் காடாக்கும் ஏ.பி.வி.பியினரை கைது செய்யவேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யினரை கைது செய்யவேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் துணைவேந்தர் மற்றும் போலிஸாரின் அனுமதியுடனும் ஆதரவுடனும் நுழைந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கம்பிகளால் கற்களால் தாக்கி உள்ளனர்.

இதில் மாணவர் தலைவர் உட்பட 26 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணமான ஏ.பி.வி.பி அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்து ஊக்குவித்த துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த வன்முறைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

“கல்வி நிலையங்களை வன்முறைக் காடாக்கும் ஏ.பி.வி.பியினரை கைது செய்யவேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!

திடீரென உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடந்த சுமார் மூன்று மாதங்களாக அமைதியான முறையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராடிக் கொண்டுள்ளனர். நேற்றிரவு அங்கே நுழைந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் மாணவர்களையும் மாணவர் தலைவரையும் பேராசிரியர்களையும் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.

அவர்களது வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு இந்தத் தாக்குதல் முன்பே திட்டமிடப்பட்டது என்பதை ஆங்கில செய்தித்தாள் ஒன்று அம்பலப்படுத்தி இருக்கிறது. அதில் ஈடுபட்டவர்களுடைய தொலைபேசி எண்களும் அந்த நாளேட்டால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை டெல்லி காவல் துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சகத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் வன்முறையாளர்கள் மீது எடுக்கப்படவில்லை.

ஏ.பி.வி.பியின் திட்டமிட்ட இந்த வன்முறை, அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை மெய்ப்பிக்கிறது. எனவே அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலும் இந்தியா முழுவதும் உள்ள கல்வி வளாகங்களிலும் ஏ.பி.வி.பி அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

“கல்வி நிலையங்களை வன்முறைக் காடாக்கும் ஏ.பி.வி.பியினரை கைது செய்யவேண்டும்” - திருமாவளவன் வலியுறுத்தல்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்பது ஒரு பல்கலைக்கழகம் மட்டுமல்ல. இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தின் அடையாளம். இன்றைய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பெரும்பாலானோர் அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்தான். அத்தகைய பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தை சின்னாபின்னமாக்கும் விதமாக பா.ஜ.க அரசு குறிவைத்து அங்கே வன்முறையை ஏவிக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அங்கு மட்டுமல்ல, இந்தியாவின் கல்வி மையங்கள் எல்லாவற்றையுமே தமது பிடிக்குள் கொண்டு வரும் நோக்கோடு ஏ.பி.வி.பி எனும் பயங்கரவாத அமைப்பை இந்துத்துவ சக்திகள் பயன்படுத்துகின்றன. இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாகும்.

இந்த வன்முறையைக் கண்டிப்பதோடு அதில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும்; அதற்கு உடந்தையாக இருந்த துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்; வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டு அதற்கு ஊக்கமளித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories