இந்தியா

“ABVP-யும் - பல்கலை. நிர்வாகமும் கூட்டு சதி” : ஜே.என்.யூ தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“ABVP-யும் - பல்கலை. நிர்வாகமும் கூட்டு சதி” : ஜே.என்.யூ தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதற்கிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் எழுவதற்கு முன்னதாக டெல்லியில் விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தினர்.

“ABVP-யும் - பல்கலை. நிர்வாகமும் கூட்டு சதி” : ஜே.என்.யூ தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!

இந்நிலையில், பேராசிரியர்கள் சங்கம் சார்பில் நேற்று பல்கலை வளாகத்தில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஏ.பி.வி.பி அமைப்பினர் இடதுசாரி மாணவர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிராக அமைதியாகப் போராடிய எங்கள் மீது ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தைப் பொறுத்து கொள்ள முடியாமல் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்கள் அமைப்பினரை குறிவைத்து ஏ.பி.வி.பி மாணவர்கள் சரமாரியாக தாக்கினர் என்றும் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 11 மாணவர்களை காணவில்லை என்றும் இடதுசாரி அமைப்பு மாணவர்கள் கூறினர்.

அதுமட்டுமின்றி, இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் இதற்காக வாட்ஸ் ஆப் குழுவில் ஏ.பி.வி.பி மாணவர்கள் பேசியது வெளிப்பட்டிருப்பதாகவும், இந்த தாக்குதலுக்கு காவல்துறை உடந்தை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை முகமூடி அணிந்த குண்டர்கள் தாக்கும் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

#CAA சட்டத்திற்கு எதிரான போராட்டம் துவங்கியதில் இருந்து மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதை தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், “ஜே.என்.யூ மாணவர்கள் மீது முகமூடி அணிந்த குண்டர்கள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்கள் துணிவு மிகுந்த குரலைக் கண்டு நாட்டை ஆளும் பாசிசவாதிகள் அச்சம் கொள்கின்றனர். இன்று ஜே.என்.யூவில் நடந்த வன்முறை அந்த பயத்தின் வெளிப்பாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி குண்டர்களும், பல்கலைக்கழக நிர்வாகமும் கூட்டு சதி செய்து மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தங்கள் இந்து ராஷ்ட்ரம் திட்டத்திற்கு ஜே.என்.யூவிலிருந்து எதிர்ப்பு வருவதை தாங்க முடியாமலேயே இதைச் செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.மேலும் நேற்று இரவு முதல் ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories