இந்தியா

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததை எதிர்த்து தி.மு.க வழக்கு - நாளை மறுநாள் விசாரணை?

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததை எதிர்த்து தி.மு.க வழக்கு - நாளை மறுநாள் விசாரணை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பணிகள் நடைபெறாததால் பழைய மாவட்டத்தின் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசையும், மாநில தேர்தல் ஆணையத்தையும் கடுமையாகச் சாடிய நீதிபதிகள் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய உத்தரவிட்டு, முழுமையாக இட ஒதுக்கீடு, மறுவரையறை பணிகள் முடிந்தபின்னர் தேர்தலை அறிவிக்க வேண்டுமெனவும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு பின்னர் தேர்தல் நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததை எதிர்த்து தி.மு.க வழக்கு - நாளை மறுநாள் விசாரணை?

ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, மீண்டும் அடுத்த நாளே புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம். இந்த அறிவிப்பில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டு பணிகளை முடித்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தேர்தல் அறிவித்ததை எதிர்த்து தி.மு.க, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம். உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக தெளிவு கோரும் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் தேர்தல் அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும்; பஞ்சாயத்து ராஜ் இடஒதுக்கீடு சட்டப் பிரிவு 6ன் படி இடஒதுக்கீட்டை முடிவு செய்த பிறகு தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

இன்று காலை தி.மு.க தரப்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மற்ற மனுதார்கள் தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டது. அனைத்து வழக்குகளும் புதன்கிழமை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories