தமிழ்நாடு

“சட்டத்தை படுகொலை செய்யும் தேர்தல் ஆணையர்; உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” - மு.க.ஸ்டாலின்

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“சட்டத்தை படுகொலை செய்யும் தேர்தல் ஆணையர்; உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் உடனடியாக மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 6.12.2019 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உச்சநீதி மன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில், புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினையும், வார்டு மறுவரையறையினையும், சட்டவிதிமுறைப்படி செய்து, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று தெளிவாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“2017ம் வருட வார்டு மறுவரையறை ஆணைய விதிகள்”, “1994ம் வருட தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகள்”, “1995ம் வருட தமிழ்நாடு பஞ்சாயத்து (இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி அடிப்படையிலான இட ஒதுக்கீடு) விதி -6” உள்ளிட்ட எதையும் பின்பற்றாமல் மீண்டும் ஒரு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அ.தி.மு.க அரசின் “கைப்பிள்ளையாக” மாநில தேர்தல் ஆணையர் மாறியிருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள வெட்கக்கேடு, துடைக்க முடியாத இழுக்கு.

“சட்டத்தை படுகொலை செய்யும் தேர்தல் ஆணையர்; உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” - மு.க.ஸ்டாலின்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாநிலத் தேர்தல் ஆணையமும் படிக்கவில்லை. அந்தத் தீர்ப்பில் “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்துவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது பற்றி தமிழக அரசும் கவனம் செலுத்தவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள உத்தரவு உள்ளிட்ட சட்ட விதிகள் அனைத்தையும் விளக்கி இன்று (7.12.2019) கொடுத்த மனுவினையும் மாநிலத் தேர்தல் ஆணையர் படிக்கவில்லை. “சட்டத்தை படுகொலை” செய்யும் ஒரு தேர்தல் ஆணையர்- முதலமைச்சர், மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரின் சொல்கேட்டு நடக்கும் “அ.தி.மு.க கிளைச் செயலாளர்” போல் மாறியிருப்பது வேதனையளிக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பழைய தேர்தல் அறிவிப்பை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையர், புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு, அரசியல் கட்சிகளை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தாமல், “நேர்மையான, சுதந்திரமான” தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களை கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்.

“சட்டத்தை படுகொலை செய்யும் தேர்தல் ஆணையர்; உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” - மு.க.ஸ்டாலின்

“வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நிறைவுபெறாமல் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை உருவாக்கும் அரசியல் சட்டப்படியான கட்டளையை அரசு நிறைவேற்ற முடியாது” (State Cannot fulfill the Constitutional Mandate) என்று உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியும், ஒரு மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் அடாவடியாக தனது பொறுப்பை தட்டிக்கழித்திருப்பது அரசியல் சட்டத்திற்கே அச்சுறுத்தல் ஆகும் ! உச்சநீதிமன்றத்தையே மதிக்காத- இன்னும் சொல்வதென்றால் அவமதிக்கும் மன்னிக்க முடியாத குற்றமாகும்!

அரசியல் சட்டத்திற்கும், பஞ்சாயத்து சட்டங்களுக்கும் புறம்பான ஒரு உள்ளாட்சித் தேர்தலை, “யாராவது சென்று தடை வாங்கிக் கொள்ளட்டும்” என்ற ஒரே உள்நோக்கத்துடன் ஜனநாயகத்திற்கு விரோதமாக வெளியிடுவதற்கு மாநிலத்தில் ஒரு தேர்தல் ஆணையரோ, ஒரு தலைமைச் செயலாளரோ நிச்சயமாக தேவையில்லை என்ற எண்ணம், சட்டத்தின் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

“சட்டத்தை படுகொலை செய்யும் தேர்தல் ஆணையர்; உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” - மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்- உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் அ.தி.மு.க அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கைகோர்த்து செய்துள்ள ஜனநாயகப் படுகொலையை நிச்சயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் “வார்டு மறுவரையறை” மற்றும் “பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு” ஆகியவற்றை செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories