இந்தியா

“இப்படியும் அநியாயம் நடக்குமா?”-காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி நிர்வாகத்தின் செயலால் மாணவர்கள் அதிர்ச்சி!

கர்நாடகாவில் தனியார் கல்லூரியில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்து எழுதுவதை தடுக்க ஆசிரியர் எடுத்த நடவடிக்கை கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

“இப்படியும் அநியாயம் நடக்குமா?”-காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி நிர்வாகத்தின் செயலால் மாணவர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு தேர்வு நடத்தும்போது காப்பி அடிப்பதை தவிர்க்க கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும். குறிப்பாக பறக்கும் படையினர் வைத்து சோதனை செய்வது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, ஒவ்வொரு மாணவர்களுக்கும் வெவ்வேறு வரிசையிலான வினாத்தாள்களை கொடுப்பது போன்றவற்றைச் செய்வார்கள்.

நடைபெற்று முடிந்த மருத்துவp படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு இன்னும் ஒருபடி மேலே சென்று கம்மல், மூக்குத்தி, கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை அணிந்து எழுதத் தடை விதிக்கப்பட்டது. தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணியும் நடைபெற்றது.

ஆனால், கர்நாடகத்தில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பது மற்றும் பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து எழுதுவதைத் தடுக்க நூதன முறையை கையாண்ட சம்பவம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாவேரி நகரில் உள்ள பாகத் பி.யு.கல்லூரியில் மாணவர்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்லூரிகளில் முதல் பருவத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை பாகத் பி.யு கல்லூரி மாணவர்களுக்கு வேதியியல் தேர்வு நடைபெற்றுள்ளது.

“இப்படியும் அநியாயம் நடக்குமா?”-காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி நிர்வாகத்தின் செயலால் மாணவர்கள் அதிர்ச்சி!

இந்தத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தவிர்க்க புதிய நடவடிக்கை என்ற பெயரில் மனித உரிமை மீறலை மேற்கொண்டுள்ளது கல்லூரி நிர்வாகம். தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர் தேர்வுத்தாளுடன் அட்டைப்பெட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார்.

மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டியை கவிழ்த்தபடி, அந்த அட்டைப்பெட்டியில் கண்கள் தெரியும் அளவிற்கு மட்டும் போடப்பட்டுள்ள துளை வழியாக தேர்வுத்தாளை பார்த்து எழுதியுள்ளனர். அப்படி தேர்வு எழுதும்போது தலையை திருப்பியோ குனிந்தோ தேர்வு எழுத முடியாமல் மிகுந்த சிரமங்களைச் சந்தித்துள்ளனர். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுத்தொடர்பாக மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மாணவர்களின் அடிப்படை உரிமையை மீறிய செயலை கல்லூரி நிர்வாகம் செய்துள்ளது. இது மாணவர்கள் மீது நம்பிக்கையில்லாமல் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. இதுபோல தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் மனநிலை கடும் பாதிப்புகளைச் சந்திக்கும்.

“இப்படியும் அநியாயம் நடக்குமா?”-காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி நிர்வாகத்தின் செயலால் மாணவர்கள் அதிர்ச்சி!

மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்காமல் தடுக்கவேண்டும் என்றால், புரியும்படி பாடம் நடத்தியிருக்கவேண்டும். அதிகமான நேரம் படிப்பதற்கு அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். இதுபோல எந்த செயலையும் செய்யாமல் மாணவர்களை ஏதோ குற்றவாளிகள் போல நடத்துவது சரியல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் வெளிப்பட்டதும் அந்த தனியார் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி பீர்ஜாடே நிருபர்களிடம் கூறுகையில், “இந்த மனிதநேயமற்ற நாகரீகமற்ற செயலைக் கண்டித்து கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

இந்தச் செய்தி தெரிந்தவுடனே அங்கு சென்று மாணவர்கள் அதுபோல தேர்வு எழுதுவதை தடுத்துள்ளோம். இதுபோல் இனி நடக்காது. மாணவர்களை நல்வழிப்படுத்தப் பல வழிகள் இருக்கும்போது, அவற்றைக் கடைப்பிடிக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories