இந்தியா

“நீட் தேர்வு முறையால் பணக்காரர்  ஏழை வித்தியாசம் அதிகரித்துள்ளது” - ஐ.நாவில் முழங்கிய மதுரை மாணவி!

நீட் தேர்வு கல்வியில் ஏழை, பணக்காரர்கள் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது என ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார் மதுரை மாணவி.

“நீட் தேர்வு முறையால் பணக்காரர்  ஏழை வித்தியாசம் அதிகரித்துள்ளது” - ஐ.நாவில் முழங்கிய மதுரை மாணவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரேமலதா. ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படித்த பிரேமலதா 8ம் வகுப்பு படிக்கும்போதே தமிழக அரசின் மனித உரிமைக் கல்வி பயின்றவர்.

தற்போது கல்லூரியில் படித்துவரும் மாணவி பிரேமலதா ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் ‘கண்ணியத்திற்கு ஒரு பாதை : மனித உரிமைகள் கல்வியின் சக்தி’ என்ற தலைப்பில் உரையாற்றினார் பிரேமலதா.

அப்போது பேசிய அவர், “இந்தியாவில் நிலவும் சாதிய முறையால் பாதிக்கப்பட்ட பெண் நான். நான் என்ன சாதியில் பிறக்கவேண்டும் என்று நான் தீர்மானிக்கவில்லை. ஆனால், என் பிறப்பு தொட்டே என் மீது சாதிய அடக்குமுறைகள் ஆரம்பித்துவிட்டன. அதுவும் குறிப்பாக கல்வி முறையில் சாதியத்தின் தாக்கத்தை நான் வெகுவாகவே உணர்ந்தேன்.

“நீட் தேர்வு முறையால் பணக்காரர்  ஏழை வித்தியாசம் அதிகரித்துள்ளது” - ஐ.நாவில் முழங்கிய மதுரை மாணவி!

உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற வெறுப்புணர்வு குழந்தைகள் மத்தியில் விதைக்கப்படுவதை நான் மனித உரிமைப் பாடங்களைப் படித்தபோதுதான் தெரிந்துகொண்டேன். இந்திய கல்வி முறை நீடித்த வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது. நீட் தேர்வு முறை கல்வியில் பணக்காரர் - ஏழை வித்தியாசத்தை அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வால் முதன்முறையாக அனிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வால் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். நீட் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் கல்வியில் நீடித்த வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்” என உரையாற்றினார்.

பள்ளிகளில் மனித உரிமைகள் பாடம் கற்பிப்பதன் அவசியம் குறித்த மாணவி பிரேமலதாவின் பேச்சு கூட்டத்தில் பங்கேற்ற பலரையும் கவர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories