இந்தியா

பொதுவெளியில் மலம் கழித்த இரு தலித் குழந்தைகள் அடித்துக் கொலை : ம.பி.,யில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை

பஞ்சாயத்து அலுவலகம் அருகே மலம் கழித்ததால் இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவெளியில் மலம் கழித்த இரு தலித் குழந்தைகள் அடித்துக் கொலை : ம.பி.,யில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியில் இரண்டாம் முறையாக பா.ஜ.க ஆட்சியமைத்த நாள் முதற்கொண்டு நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறையும், கொடூரத் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் அதிக அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற மதவாத கும்பல் நடத்தும் தாக்குதல்களால் இதுவரை பலர் தங்களது உயிரையும், உடமைகளையும் இழந்திருக்கின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பாவ்கேதி கிராமத்திலும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாவ்கேதி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன் ரோஷ்னி மற்றும் அவினாஷ் ஆகிய இரு குழந்தைகள் மலம் கழித்துள்ளனர். இதனைப் பார்த்த ஹக்கிம் யாதவ், ரமேஷ்வர் யாதவ் இருவரும் அக்குழந்தைகளை செல்போனில் போட்டோ எடுத்ததோடு, லத்திகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

பொதுவெளியில் மலம் கழித்த இரு தலித் குழந்தைகள் அடித்துக் கொலை : ம.பி.,யில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை

இதனால் மயக்கமடைந்த சிறுவர்கள் அக்கிராம மக்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் இரண்டு பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தைகளைத் தாக்கிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில், “கடவுள்தான் அவர்கள் இருவரையும் கொல்லச்சொன்னார். அதனால், கொன்றோம்” என்று திமிராக பதிலளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கைது செய்யப்பட்டுள்ள ஹக்கிம் யாதவ்வின் அண்ணன் அந்த கிராமத்தின் அரசியல் தலைவர் என்பதும், அவரோடு கொலை செய்யப்பட்ட ரோஷ்னியின் அண்ணனோடு கழிவறை கட்டுவது தொடர்பான விஷயத்தில் ஏற்கனவே மோதல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதனாலே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவெளியில் மலம் கழித்ததற்காக 10 வயது குழந்தைகளை அடித்துக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் உள்ள சிறுபான்மையினர், தலித்துகளை குறிவைத்தே இதுபோன்ற வன்முறை தாக்குதல்கள் அரங்கேறி வருவதும், இதுகுறித்து மத்திய பா.ஜ.க அரசு வாய் திறக்காமல் மெளனம் சாதிப்பதும் பெரும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories