இந்தியா

இந்தத் திட்டத்திலும் நாடகமா..? குளிரூட்டப்பட்ட அறையில் குப்பைகளைக் கொட்டுவார்களா மிஸ்டர் மோடி?

‘தூய்மையே சேவை’ திட்டத்திற்கும் பா.ஜ.க-வினரின் பழைய வழிமுறையையே பின்பற்றியிருக்கிறார் பிரதமர் மோடி.

இந்தத் திட்டத்திலும் நாடகமா..? குளிரூட்டப்பட்ட அறையில் குப்பைகளைக் கொட்டுவார்களா மிஸ்டர் மோடி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் தூய்மையே சேவை (Swachhata Hi Seva) திட்டத்தின் ஒருபகுதியாக குப்பையிலிருந்து பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடும் பெண்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.

பெண் தொழிலாளர்களுடன் அமர்ந்து, உதவி செய்வதாக பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் காணொளியும் பகிரப்பட்டது. ஆனால், அந்தக் காணொளியைக் கண்டவர்கள் தலையில் அடித்து நொந்துகொள்கிறார்கள்.

காரணம், குப்பைகள் பிரிக்கப்பட்ட அந்த அறை முழுக்க முழுக்க பிரதமரின் இந்த நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்கிருந்தோ எடுத்து வந்து அங்கு வைக்கப்பட்ட குப்பைகளை தொழிலாளர்கள் பிரிப்பது போல பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல முறை பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.க-வினர் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி, சுத்தம் செய்வது போல நடிப்பதையே ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் மூலம் செய்து வருகின்றனர்.

குப்பை இல்லாத இடத்தில் குப்பைகளை கொட்டி, சுத்தம் செய்வது போல நாடு முழுவதும் பா.ஜ.க தலைவர்கள் நாடகமாடி வரும் நிலையில், ‘தூய்மையே சேவை’ திட்டத்திற்கும் அதே வழிமுறையைப் பின்பற்றியிருக்கிறார் பிரதமர் மோடி.

பின்னணியில் அரசு விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும் குளிரூட்டப்பட்ட அறையில் தரை விரிப்புகளின் மீது அமர்ந்து குப்பைகளை பிரித்துக் கொண்டிருப்பதாக காட்சிப் படுத்தப்பட்டிருப்பது பலரது விமர்சனத்தையும் சம்பாதித்துள்ளது.

மலக்குழி மரணங்கள் இன்றளவும் தொடர்ந்து வரும் சூழலில், தூய்மை இந்தியா என்கிற பெயரில், நாட்டு மக்களை ஏமாற்றி நாடகமாடவேண்டாம் என மோடிக்கு எதிராக கொந்தளித்துள்ளனர் பொதுமக்கள்.

banner

Related Stories

Related Stories