இந்தியா

“இது தோல்வி அல்ல; இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டுவார்கள்” - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைகோ பாராட்டு!

சந்திரயான் 2 விண்கலத்தின் வெற்றிகரமான பயணத்துக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

“இது தோல்வி அல்ல; இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டுவார்கள்” - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைகோ பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய, விண்வெளிப் பயணங்கள் மனித குலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டு வந்திருக்கின்றது. இன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் விண்ணில் சுழன்று கொண்டு இருக்கின்றன; அதன் விளைவுகளை நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சிகள், நம் எல்லோரது கைகளிலும் நிலையாக இடம் பெற்றுவிட்ட அலைபேசிகள் எல்லாமே, செயற்கைக்கோள்களின் உதவியோடுதான் இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவும் விண்வெளி ஆய்வுகளைத் தொடங்கி, வெற்றிகரமாக நடைபோட்டு வருகின்றது.

எழுபதுகளில் ஆர்யபட்டா, பாஸ்கரா எனத் தொடங்கி, நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களை, விண்வெளியின் சுற்றுப்பாதையில் இந்திய விஞ்ஞானிகள் நிலைநிறுத்தி இருக்கிறார்கள். ஒரு காலத்தில், தென் அமெரிக்காவின் கயானா, ரஷ்யா என பிற நாடுகளின் உதவியோடுதான் இந்திய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. ஆனால், படிப்படியாக இந்தத் துறையில் இந்தியா தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஒரு ஏவுதளத்தை உருவாக்கியது.

ராக்கெட்டுகளை வடிவமைப்பதற்குத் தேவையான கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை, வளர்ந்த நாடுகள் தர மறுத்த நிலையில், இந்திய விண்வெளிப் பொறியியல் அறிஞர்களே, அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கிச் சாதனை படைத்தனர்.

“இது தோல்வி அல்ல; இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டுவார்கள்” - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைகோ பாராட்டு!

அதன்பிறகு, வரிசையாக எத்தனையோ நாடுகளின் செயற்கைக் கோள்களையும் இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவி, சாதனை படைத்துப் பெருமை சேர்த்துள்ளனர்.

அடுத்த கட்டமாக, நிலவில் ஒரு கலத்தை இறக்கி ஆய்வு செய்திடவும், அடுத்த கட்டமாக, விண்வெளி வீரர்களை அனுப்பவும் இந்திய விஞ்ஞானிகள் திட்டமிட்டுப் பணியாற்றி வருகின்றனர். அதன் தொடக்கமாக, சந்திரயான் விண்கலப் பயணங்கள் அமைகின்றன. கடந்த சில நாள்களாக, இந்தியா மட்டும் அல்ல, உலகின் அனைத்து நாடுகளுமே சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் கலத்தின் பயணத்தை உற்றுநோக்கிக் கவனித்து வந்தனர்.

கடந்த 23 நாள்களாக விண்வெளியில் வெற்றிகரமாகச் சுழன்று வருகின்ற நிலையில், நிலவைத் தொடுகின்ற வேளையில், தொடர்புகளை இழந்தது மிகப்பெரிய வேதனை. இந்தப் பயணம், வெற்றி பெறவில்லை; என்றாலும் இது தோல்வி அல்ல. இப்போதைக்குத் ஒரு சிறிய தடை ஏற்பட்டு இருக்கின்றது. அவ்வளவுதான். இதற்காக மனம் தளர வேண்டியது இல்லை. யாரும் இந்த முயற்சியைக் குறை கூறவும் இல்லை.

கூடிய விரைவில், இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டுவார்கள். இஸ்ரோ தலைவர் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories