இந்தியா

#CSK உருவாக்கத்திற்குக் காரணமான முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை! - பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வி.பி.சந்திரசேகர்
வி.பி.சந்திரசேகர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தமிழகத்தை சேர்ந்தவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான வி.பி.சந்திரசேகர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மயிலாப்பூரில் அவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள அறை ஒன்றில் மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவலின் அடிப்படையில் போலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று உடலைக் கைப்பற்றினர்.

இவர், கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். தமிழக கிரிக்கெட் உலகில் பெரிதும் அறியப்பட்ட வி.பி.சந்திரசேகர் உலக அளவிலும் கிரிக்கெட் துறையில் நிறைய நண்பர்களைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.பி.சந்திரசேகர் சதம் கடந்த மகிழ்ச்சியில்...
வி.பி.சந்திரசேகர் சதம் கடந்த மகிழ்ச்சியில்...

1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய இவர் ஒரு அதிரடி ஆட்டக்காரர் என்று அறியப்பட்டவர். சென்னையில் நடந்த ஒரு போட்டியில் 56 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தவர். இதனைத் தொடர்ந்து தமிழக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கிய இவர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட காரணமாக அமைந்தவரும் இவரே. சென்னை அணிக்கு தோனி, சுரேஷ் ரைனா ஆகிய வீரர்களை ஏலத்திற்கு எடுக்க ஆலோசனை வழங்கியவர் வி.பி. சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. 57 வயதாகும் இவருக்கு சவுமியா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.

சச்சின் தெண்டுல்கருடன்...
சச்சின் தெண்டுல்கருடன்...

வி.பி.சந்திரசேகரின் அகால மரணம் குறித்து பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் ஆட்டங்களுக்காக வி.பி.சந்திரசேகர், ‘வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ்’, ‘வி.பி.காஞ்சி வீரன்ஸ்’ என்ற பெயர்களில் அணிகளை சொந்தமாக தொடங்கி நடத்தி வந்தவர். இதன் காரணமாக அவருக்கு நஷ்டங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர வேளச்சேரியில், ‘வி.பி.நெஸ்ட்’ என்ற பெயரில் ஒரு கிரிக்கெட் அகடாமியும் நடத்தி வந்துள்ளார். இதிலும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு கடனாளியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் எல்.சிவராமகிருஷ்ணனுடன்...
முன்னாள் கிரிக்கெட் வீரர் எல்.சிவராமகிருஷ்ணனுடன்...

இந்த பண நெருக்கடிதான் வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால், தமிழக கிரிக்கெட் அணி கேப்டன் பத்ரிநாத் கூறுகையில், “நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகரை சந்தித்தேன். மிகவும் தெளிவாக, உற்சாகமாக இருந்தார். அவருடைய தற்கொலையை என்னால் நம்ப முடியவில்லை ” எனத் தெரிவித்துள்ளார்.

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவாக காரணகர்த்தாவாக இருந்தவர் வி.பி.சந்திரசேகர். அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என முன்னணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

#CSK உருவாக்கத்திற்குக் காரணமான முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை! - பின்னணி என்ன?

வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கு பண நெருக்கடி காரணம் இல்லையென்றால், வேறு என்னவாக இருக்கும்? என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அவரது மனைவி சவுமியாவிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், “டீ சாப்பிட்டு விட்டு அறைக்குச் சென்றவர் இப்படிச் செய்துகொண்டார்” என்று மட்டும் கூறியதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது.

வி.பி.சந்திரசேகரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வி.பி.சந்திரசேகர் உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories