இந்தியா

“அடிப்படை உரிமைகளை நசுக்கும் மத்திய அரசை எதிர்த்து காஷ்மீரிகளுக்கு துணைநிற்போம்” : சீத்தாராம் யெச்சூரி

அடிப்படை உரிமைகள் மத்திய அரசால் நசுக்கப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

“அடிப்படை உரிமைகளை நசுக்கும் மத்திய அரசை எதிர்த்து காஷ்மீரிகளுக்கு துணைநிற்போம்” : சீத்தாராம் யெச்சூரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

காஷ்மீரில் ஆயிரக்கணக்கான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இராணுவத்தின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டு, முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இணைய, தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

மிகவும் பதற்றமான இந்தச் சூழலில் காஷ்மீரின் உண்மை நிலையை அறியச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து சீத்தாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “நானும், டி.ராஜாவும் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்குச் சென்றோம். அங்கிருந்து எங்கள் தோழர்களைக் காண அனுமதி தரப்படவில்லை. விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவது ஜனநாயக உரிமை மீதான வன்முறை. மத்திய அரசால் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஒற்றுமையுடன் காஷ்மீர் மக்களுக்கு துணைநிற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இன்னொரு பதிவில், “கடந்த ஞாயிறு முதல் எங்கள் தோழர் யூசுப் தரிகாமி உள்ளிட்ட மற்ற தோழர்கள் பலரும் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தோழர் யூசுப் தரிகாமிக்காக இந்தக் குறிப்பை விட்டுச் செல்கிறோம். அவரைக் கண்டுபிடிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை ஆராய்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories