இந்தியா

“ஏய்.. இங்க முதுகெலும்பு இல்லாதவங்க பேசக்கூடாது.. உட்கார்” : ஓ.பி ரவீந்திரநாத்தை அதட்டிய டி.ஆர் பாலு !

“காஷ்மீரில் முறையான தேர்தலை நடத்தி மக்களின் கருத்தைக் கேட்ட பின்புதான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே, நாங்கள் ஆதரவளிக்க முடியாது” எனப் பேசினார் டி.ஆர்.பாலு.

“ஏய்.. இங்க முதுகெலும்பு இல்லாதவங்க பேசக்கூடாது.. உட்கார்” : ஓ.பி ரவீந்திரநாத்தை அதட்டிய டி.ஆர் பாலு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த பின்னர் அதன் மீதான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசினார். அப்போது, “மாநிலங்களவையில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி காஷ்மீர் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைவர்கள் என்ன ஆனார்கள்? எதற்காக அவர்களை வீட்டு சிறையில் வைத்துள்ளீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார் டி.ஆர்.பாலு.

மேலும் அவர் பேசுகையில், “இராணுவத்தை துணையாக வைத்துக்கொண்டு மத்திய அரசு ஒரு சட்டத்தை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதி அவசர கதியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லை. இதன்மூலம் எந்தப் பலனையும் நீங்கள் அடையப்போவதில்லை.

மாநிலத்தின் சட்டமன்றத்தை முடக்கிவிட்டு, அதைப் பிரிப்பதாக மசோதா கொண்டு வருகிறீர்கள். இதுபோல தமிழகத்திலோ, கேரளாவிலோ உங்களால் செய்யமுடியுமா? படிப்பறிவுள்ள, அரசியல் விழிப்புணர்வு கொண்ட மாநிலங்களில் உங்கள் செயல்திட்டங்களை நிறைவேற்றிட முடியுமா?

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க-விடம் என்ன தீர்வு இருக்கிறது? தினசரி இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். காஷ்மீரில் முறையான தேர்தலை நடத்தி மக்களின் கருத்தைக் கேட்ட பின்புதான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நாங்கள் ஆதரித்திருப்போம். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. எனவே, நாங்கள் ஆதரவளிக்க முடியாது” என்று ஆவேசமாக பேசினார்.

டி.ஆர்.பாலு பேசும்போது அ.தி.மு.க உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குறுக்கிட்டுப் பேச முயன்றார். அதற்கு, டி.ஆர்.பாலு, “ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது; உட்காரு; நாடாளுமன்றம் முதுகெலும்பு உடையவர்களால் நிரம்பியது. உங்களைப் போன்றவர்களுக்கானது கிடையாது” எனக் கூறினார். டி.ஆர்.பாலுவின் ஆவேச பேச்சுக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். டி.ஆர் பாலுவின் இந்த அதிரடி பேச்சை எதிர்பார்க்காத ஓ.பி ரவீந்திரநாத்துக்கு இது பலத்த அதிர்ச்சியாக அமைந்தது.

banner

Related Stories

Related Stories