இந்தியா

“வரலாற்றைத் தெரிந்துகொண்டு பேசுங்கள்” : பாஜக முடிவை ஆதரிக்கும் காங்கிரசாருக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்!

பா.ஜ.க அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதலில் ஜம்மு - காஷ்மீர் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கடுமையாகச் சாடியுள்ளார் காங். தலைவர் குலாம் நபி ஆசாத்.

“வரலாற்றைத் தெரிந்துகொண்டு பேசுங்கள்” : பாஜக முடிவை ஆதரிக்கும் காங்கிரசாருக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அதிகாரப்பூர்வமாக, காங்கிரஸ் கட்சி காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா புபனேஸ்வர் காலிட்டா தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பா.ஜ.க அரசின் முடிவை ஆதரித்து கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் வரலாற்றையும் சொந்த கட்சியின் வரலாற்றையும் தெரிந்து பேசவேண்டும் என அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஜனார்த்தன் திரிவேதி, பூபேந்தர் சிங் ஹூடா, மிலந்த் மராட்டே, அதிதி சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் மாறுபட்ட கருத்துகள் உலவுவது குறித்து காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதலில் ஜம்மு - காஷ்மீர் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் காங்கிரஸ் வரலாற்றையாவது தெரிந்துக்கொண்டு காங்கிரசில் இருங்கள்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகளை திரும்பப் பெறும் தீர்மானம் மிக மோசமான செயல். காஷ்மீர் மக்களை பழிவாங்கும் போக்கை மத்திய அரசு மேற்கொள்கிறது.” எனக் குற்றம்சாட்டியுள்ளார் குலாம் நபி ஆசாத்.

banner

Related Stories

Related Stories