கொல்கத்தாவில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததற்குப் பின்னர், மேற்குவங்கத்தில் அரசியல் கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தின் டம்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றுபவர் நிர்மல் குண்டு. நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் நிர்மலை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அம்மாநில போலீசார் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து மேற்கு வங்கத்தில் பா.ஜ.க மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த கொலைச் சம்பவத்திற்கு பா.ஜ.க-வினரே காரணம் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.