இந்தியா

“பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி ஒரு சோதனை முயற்சி” : அகிலேஷ் யாதவ்

“மாயாவதியுடன் கூட்டணி வைத்து நான் எடுத்த சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

“பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி ஒரு சோதனை முயற்சி” : அகிலேஷ் யாதவ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாரதிய ஜனதா 62 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. உத்தர பிரேதச அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்துவந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் இந்த தேர்தலில் ஒரே கூட்டணியில் போட்டியிட்டனர். இருந்த போதும் தேர்தலில் படுதோல்வியை தழுவினர். பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், சமாஜ்வாதி 5 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலா ஒரு எம்.எல்.ஏ என மொத்தம் 11 பேர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.க்களாக தேர்வாகி உள்ளனர். இதையடுத்து 11 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அகிலேஷ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள மாயாவதி முடிவு செய்தார்.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அகிலேஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறிவியல் மாணவனான நான், படிக்கும் போதிருந்தே பல்வேறு சோதனை முயற்சிகளை செய்து பார்ப்பேன். சில நேரங்களில் அது தோல்வியில் முடியும். அப்போது தான் அது தவறு என்பதை நான் உணர்வேன்.

மாயாவதி கட்சியுடன் கூட்டணி வைத்து நான் எடுத்த சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. கூட்டணியை தொடரலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்பதை கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வேன். 2022-ம் ஆண்டில் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தேவையான வழிவகைகளை செய்வோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories