சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று வழக்கம் போல் வந்த முதலமைச்சர், தனது அலுவலகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டார். அலுவல் பணிகளை முடித்துவிட்டு செல்கையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனது அலுவலகத்தில் இருந்து நடந்தே வந்த முதலமைச்சர், அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலத்திற்கு திடீரென முதலமைச்சரே நேரில் வந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்கு ஆடினர்.
அங்கு புகாரளிக்க வந்திருந்த அன்புக்கரசி, வனிதா, ஜெயகோபால் என பொதுமக்கள் 3 பேரிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், உங்களின் குறைகளை புகாராக அதிகாரிகளிடம் கொடுக்குமாறும், அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர், தனிப்பிரிவில் பெறப்படும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள புகாரின் நிலை ஆகியவை குறித்து முதலமைச்சரிடம் விளக்கினார்.
சுமார் 10 நிமிடங்கள் ஆய்வை முடித்துக்கொண்ட முதலமைச்சர் தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார். தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, முதல்வரின் தனிச்செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.








