திமுக அரசு

"CCTV ஒளிபரப்பு தடைபடுவது ஏன்? மையங்களுக்குள் வெளியாட்களுக்கு என்ன வேலை?” - கோவையில் வேட்பாளர்கள் புகார்!

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

"CCTV ஒளிபரப்பு தடைபடுவது ஏன்? மையங்களுக்குள் வெளியாட்களுக்கு என்ன வேலை?” - கோவையில் வேட்பாளர்கள் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள், இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.நாகராஜனை சந்தித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனு பின்வருமாறு:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கல்லூரி வளாகத்தில் மூன்று நுழைவாயில்கள் உள்ளது. இதில் லாலி சாலை சிக்னல் (தென்புறம்) அருகில் உள்ள நுழைவாயிலிலும், வடபுறத்தில் உள்ள நுழைவாயிலிலும் போதுமான செக்யூரிட்டி கண்காணிப்பு இல்லை. கல்லூரி வளாகத்தின் முன்புறம் (மத்தியில்) உள்ள நுழைவாயிலில் மட்டும், உள்ளே வருகின்ற அனைத்து வாகனங்களும் நுழைவாயிலில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு, வாகன எண் பதிவு செய்து கொண்ட பின் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் மீதி உள்ள இரண்டு நுழைவாயில்களிலும் எந்த ஒரு பதிவும் செய்யப்படுவதில்லை. கண்காணிப்பும் இல்லை. தேர்தல் நடந்து முடிந்த பிறகு இந்த கல்லூரி வளாகம் முழுவதும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில்தான் உள்ளது. இந்த நிலையில் இன்று KA 03 NG 3319 மற்றும் TN 38 CB 3333 என்ற பதிவு எண் கொண்ட கார்கள் கல்லூரி வளாகத்தினுள் வந்துள்ளது. ஆனால் இந்த 2 கார்களும் எந்த ஒரு நுழைவாயில் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படவில்லை.

எந்த ஒரு நுழைவாயிலிலும் பதிவு செய்யாமல் இரண்டு கார்கள் உள்ளே வந்தது, அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வளாக பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்த 2 நுழைவாயில்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

"CCTV ஒளிபரப்பு தடைபடுவது ஏன்? மையங்களுக்குள் வெளியாட்களுக்கு என்ன வேலை?” - கோவையில் வேட்பாளர்கள் புகார்!

மேலும் கல்லூரி வளாகத்தினுள் பணியாற்றும் அரசு அதிகாரிகள், CCTV கேமரா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் டெக்னீசியன்கள் , மின் விளக்குகள் பராமரிக்கும் எலெக்ட்ரிசியன் உள்ளிட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் முறையாக அரசு சார்பில், மாவட்ட தேர்தல் அலுவலர் கையொப்பமிட்ட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். வெளியாட்கள் வருவதையும், அது போன்ற நபர்கள் நடமாடுவதையும் தடுக்க, பாதுகாப்பு அறைகள் இருக்கும் கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வேட்பாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.

CCTV கேமரா பதிவுகளை ஒளிபரப்பும் டிவி களுக்கும் UPS இணைப்பு வழங்க வேண்டும். எல்லா நுழைவாயிலுக்கும் CCTV கேமரா பொருத்தப்பட்டு, அந்த பதிவுகளை முகவர்கள் கண்காணிப்பதற்கு ஏதுவாக முகவர்கள் அறையில் உள்ள டிவி திரையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யவேண்டும். அடிக்கடி CCTV கேமராவினுடைய வயர் “ லூஸ் கான்டாக்ட் ” என்று கேமரா பதிவுகள் ஒளிபரப்பு தடைபடுவதை சரி செய்ய நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி வளாகத்தினுள் நடக்கும் இது போன்ற நிர்வாக குறைபாடுகளை சரிசெய்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் அறையின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

ஆகவே மீதி உள்ள 2 நுழைவாயில்களிலும் கண்காணிப்பை பலப்படுத்தி, வந்து செல்லும் வாகனங்களையும் , அரசு அதிகாரிகள் , ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் உரிய முறையில் பதிவு செய்து , பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும், முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் வெளியேற்றப்படவும் உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியர் / தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories