தேர்தல்2021

“பழனிசாமி செய்த பாவங்களுக்கும், துரோகங்களுக்கும் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்” : மு.க.ஸ்டாலின் உறுதி !

"நீட் கொடுமை - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எத்தனையோ பாவங்களை செய்த பழனிசாமியை மக்கள் நிச்சயமாகத் தண்டிப்பார்கள்" என தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பழனிசாமி செய்த பாவங்களுக்கும், துரோகங்களுக்கும் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்” : மு.க.ஸ்டாலின் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, திருப்பத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

இந்த திருப்பத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பெரியகருப்பனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் நீங்கள். இந்த தொகுதியில் ஏற்கனவே உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக - அமைச்சராக இருந்து பணியாற்றி இருக்கிறார். எப்படி மீசை பெரிதாக இருக்கிறதோ அதேபோல அவருடைய மனதும் பெரியது. அப்படிப்பட்டவர் தான் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என்று அவரை வேட்பாளராக உங்கள் மத்தியில் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

எனவே அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், சிவகங்கை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் குணசேகரன் அவர்கள், ஏற்கனவே 2 முறை சிவகங்கை தொகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்குள் வந்தவர். தொகுதி மக்களுடைய முன்னேற்றத்திற்காகவும் - தொழிலாளர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் தெளிவான வாதங்களை எடுத்துச் சொல்லும் ஆற்றலைப் பெற்றவர். எனவே மீண்டும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும்,

“பழனிசாமி செய்த பாவங்களுக்கும், துரோகங்களுக்கும் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்” : மு.க.ஸ்டாலின் உறுதி !

மானாமதுரை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தமிழரசி அவர்கள்; ஏற்கனவே அமைச்சராக இருந்து மக்களுக்குப் பணியாற்றி இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியில் பொறுப்பில் இருந்து மக்களுடைய உரிமைக்காக வாதாடும் - போராடும் ஒரு வீராங்கனையாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மாங்குடி அவர்கள், 2 முறை ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி இருப்பவர். அந்த தொகுதி முழுவதும் மக்களிடத்தில் நன்கு அறிமுகமானவர் - மக்களுடைய அன்பைப் பெற்றவர். வேகத்தோடு பணியாற்றுபவர் - சிறந்த உழைப்பாளி. அவருக்கு கை சின்னத்திலும் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தியாவின் விடுதலைக்கு போராடியதில் சளைத்தவர்கள் அல்ல இந்த சிவகங்கை மண்ணைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையைப் பெற்ற இந்த மருது சகோதரர்களுடைய மண்ணுக்கு, உங்களில் ஒருவனாக - கலைஞருடைய மகனாக - உரிமையோடு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் தோல்வி பயத்தின் காரணமாக இப்போது ஏதேதோ உளர ஆரம்பித்திருக்கிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சமீபத்தில், வாரிசு அரசியலை ஒழிக்கும் தேர்தல்தான் இந்த தேர்தல் என்று பேசியிருக்கிறார். அவர் ஓ.பன்னீர்செல்வத்தையும் – அவரது மகனையும் மனதில் வைத்துக்கொண்டு அப்படிப் பேசியிருக்கிறார். வாரிசு அரசியலைப் பற்றி பழனிசாமி பேசுவதற்கு – அ.தி.மு.க. பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?

அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, சசிகலாவின் கால் நோக்கி ஊர்ந்து சென்று முதலமைச்சராக ஆனவர் முதலமைச்சர் பழனிசாமி. ஜெயலலிதா அறிவிக்கும் வரை ஓ.பன்னீர்செல்வம் யாரென்று நாட்டுக்கு தெரியாது. ஜெயலலிதா அடையாளம் காட்டும் வரை பழனிசாமி யார் என்பது நாட்டுக்கு தெரியாது. ஆனால், 2 பேரும் அம்மையார் ஜெயலலிதாவிற்கு எந்த அளவிற்கு துரோகம் செய்திருக்கிறார்கள் என்பது நாட்டுக்கு நன்றாக தெரியும்.

அம்மையார் ஜெயலலிதா எப்படி மறைந்தார் என்ற விவரம் இதுவரையில் தெரியவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரையில் உண்மை வெளிவரவில்லை.

இந்த லட்சணத்தில் பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் மறைவிற்கு கலைஞரும் ஸ்டாலினும்தான் காரணம் என்று பேசியிருக்கிறார். சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறு இருந்தால் நான்கு வருடமாக விசாரித்துக் கொண்டிருக்கும் ஆறுமுகசாமி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாரா? ஓ.பி.எஸ்.க்குத்தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த உண்மை கூடத் தெரியாமல் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் இன்றைக்கு மக்களைத் திசை திருப்புகிறார்.

“பழனிசாமி செய்த பாவங்களுக்கும், துரோகங்களுக்கும் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்” : மு.க.ஸ்டாலின் உறுதி !

அதனால் தான் நம் தேர்தல் அறிக்கையில், நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். எனவே முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடித்து நாட்டுக்கு சொல்வது இந்த ஸ்டாலினுடைய கடமை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு அரசியல் விபத்தால் இன்றைக்கு பதவிக்கு வந்திருக்கிறார் பழனிசாமி. ஆனால் அவர், படிப்படியாக வளர்ந்து வந்தார் என்று அடிக்கடி சொல்கிறார். அது உண்மைதான், படிப்படியாக ஊர்ந்து சென்று வளர்ந்து இருக்கிறார். எனவே நம்மைப் பார்த்துப் பேசுவதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

14 வயதில் அரசியலில் ஈடுபட்டவன்தான் இந்த ஸ்டாலின். 1976-ல் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது, அதை ஆதரித்திருந்தால் தி.மு.க. ஆட்சி கவிழ்க்கப்பட்டு இருக்காது. ஆனால் கலைஞர் அவர்கள் ஆட்சியே போனாலும் கவலை இல்லை. நெருக்கடிநிலையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று தீர்மானம் போட்டார். அதனால் நம்முடைய ஆட்சி அடுத்த வினாடியே கவிழ்க்கப்பட்டது. அவ்வாறு கவிழ்க்கப்பட்டு காவல்துறையினர் என்னை கைது செய்தார்கள். இது வரலாறு.

ஐம்பது ஆண்டுகாலம் என்னை அரசியலில் ஒப்படைத்துக் கொண்டு நாட்டுக்காக மக்களுக்காக எத்தனையோ போராட்டங்கள் - எத்தனையோ சிறைச்சாலைகள் - எவ்வளவோ மறியல்கள் - ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நிற்பவன் இந்த ஸ்டாலின் என்பதை நாடு மறந்து விடாது.

இன்னொரு இடத்தில் பழனிசாமி, என்னை கடவுள் தண்டிப்பார் என்று சொல்லியிருக்கிறார். மாண்புமிகு பழனிசாமி அவர்களே… முதலமைச்சர் பழனிசாமி அவர்களே… நான் எந்த பாவமும் செய்யவில்லை. என்னைக் கடவுள் தண்டிக்க வேண்டிய அவசியமில்லை.

பாவங்கள் செய்து இருப்பவர் நீங்கள். உங்களைக் கடவுள் தண்டிக்கப் போகிறாரோ இல்லையோ மக்கள் தண்டிக்கப்போகிறார்கள். அது உறுதி. சொந்தப் பங்காளிகள் படுகொலை விவரம் சேலத்தில் - எடப்பாடியில் விசாரித்தால் தெரியும். சொந்த பங்காளிகளுக்குள் நடந்த கொலை. அதனால் தலைமறைவாக இருந்தவர் யார் என்பது அவருக்கும் - எனக்கும் - நாட்டுக்கும் தெரியும்.

இந்த அரசியல் வாழ்க்கையை உங்களுக்கு கொடுத்த ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல உங்களுக்கு பதவி கொடுத்த சசிகலாவிற்கு துரோகம் செய்து இருக்கிறீர்கள். சாத்தான்குளத்தில் அப்பாவையும் - மகனையும் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொன்றிருக்கிறார்கள். அவர்கள் இயற்கையாக இறந்திருக்கிறார்கள் - ஏற்கனவே அவர்களுக்கு பல வியாதிகள் இருந்து இருக்கிறது. அதனால் இறந்திருக்கிறார்கள் என்று சொன்னீர்களே?

“பழனிசாமி செய்த பாவங்களுக்கும், துரோகங்களுக்கும் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்” : மு.க.ஸ்டாலின் உறுதி !
Admin

அதேபோல பொள்ளாச்சி என்று சொல்வதற்கு இப்போது நாக்கு கூசுகிறது. ஏறக்குறைய 250 பெண்களை பெண்களைக் கடத்தி, பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ பதிவு செய்து, வலைதளங்களில் போடுவோம் என்று அச்சுறுத்தி, பணம் பறித்து, பல கொடுமைகளை செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் அதன் சுற்று வட்டாரத்தில் பாதிப்புகள் - புற்றுநோய் வருகிறது. அதனால் அதை திறக்கக்கூடாது என்று அந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். 100 நாட்களாக போராட்டத்தை நடத்தியவர்களை, பயிற்சி பெற்ற காவல்துறையை பயன்படுத்தி காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளி இருக்கிறார்கள். அதில் 13 பேர் இறந்திருக்கிறார்கள். அதேபோல கொடநாடு எஸ்டேட்டில் எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன.

நீட் தேர்வு தமிழ்நாட்டில் வருவதற்கு காரணமாக இருந்திருக்கிறீர்கள். அரியலூர் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவி அனிதா, அதைத் தொடர்ந்து பல மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் கடவுள் நிச்சயமாக உங்களைத்தான் தண்டிக்க போகிறார். கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, இந்தத் தேர்தலில் மக்கள் உங்களை நிச்சயமாகத் தண்டிப்பார்கள்.

முதலமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்ற அதிகாரத்தில் நீங்கள் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் மிக விரைவில் வரப்போகிறது.

நாம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே நகலெடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ஸ்டாலின் என்ன சொல்வான் என்று காத்துக் கொண்டே இருந்து அப்படியே வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஆண்டவன் சொல்கிறான் - அருணாச்சலம் கேட்கிறான்’ அதுபோல, ‘ஸ்டாலின் சொல்கிறான் பழனிசாமி கேட்கிறார்’. அப்படித்தான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

இப்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டதுபோல, 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் - 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் - 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறீர்கள். பத்து வருடமாக நீங்கள் தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். அந்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆயின?

நாங்களும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். 5 முறை தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பில் இருந்து ஆட்சி நடத்தினார். அவர் ஆட்சி நடத்திய நேரத்தில் தேர்தல் அறிக்கையில் தருகின்ற உறுதிமொழிகளை வாக்குறுதிகளை எல்லாம் காப்பாற்றினார்.

தலைவர் கலைஞர் அவர்கள், ஒவ்வொரு முறை தேர்தல் அறிக்கை வெளியிடும் போதும், “சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்” என்று கூறுவார். அதைத்தான் அவருடைய மகன் ஸ்டாலினும் தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தி இருக்கிறான்.

நம்முடைய தேர்தல் அறிக்கையில் பெண்கள் நலனை அடிப்படையாக வைத்து, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் 1,000 ரூபாய், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம் என, எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம்.

அத்துடன் மானாமதுரை - கிருஷ்ணராஜபுரத்தில் வைகை ஆற்றின் மேல் மேம்பாலம், மானாமதுரை வட்டத்தில் உள்ள 16 கிராமங்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் நாட்டார் கால்வாய் திட்டம், சிவகங்கை மாவட்டத்தில் அரசு வேளாண்மைக் கல்லூரி, கணியன் பூங்குன்றனார் பெயரில் கலையரங்கம், காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும், காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் காரைக்குடி, சிங்கம்புணரி, இளையான்குடி மற்றும் சிவகங்கைக்கு நீட்டிக்கப்படும், சிவகங்கை மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி, தேவகோட்டையில் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும் – என பல வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.

இந்த உறுதிமொழிகளை எல்லாம் நிறைவேற்ற, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் நமது வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இவர்கள் பெரும் வெற்றி மாலையை நம்முடைய தலைவர் நினைவிடத்திற்குக் கொண்டு சென்று சூட்ட வேண்டும்.

நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆறடி நிலம் கூட இடம் கொடுக்க மறுத்த இந்த கயவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? தயாராகுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

“பழனிசாமி செய்த பாவங்களுக்கும், துரோகங்களுக்கும் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்” : மு.க.ஸ்டாலின் உறுதி !
Admin

திருப்பத்தூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பெரியகருப்பன் அவர்களுக்கும், சிவகங்கை தொகுதியில் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் குணசேகரன் அவர்களுக்கும், மானாமதுரையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழரசி அவர்களுக்கும், காரைக்குடி தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் மாங்குடி அவர்களுக்கும் பெருவாரியான வாக்குகளை வழங்கி மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தாருங்கள்.

அவர்கள் மட்டும் இப்போது வேட்பாளர் அல்ல நானும் வேட்பாளர் தான். முதலமைச்சர் வேட்பாளர் அதை மறந்து விடாதீர்கள். இந்த முதலமைச்சரை வெற்றிபெற வைக்க வேண்டுமென்றால் இந்த வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். ஆதரவு தாருங்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

புதுக்கோட்டை கடை வீதியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

உங்களை தேடி- நாடி, உங்களிடத்தில் ஆதரவு கேட்க, உங்களிடத்தில் உரிமையோடு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இங்கே நிற்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை உங்களிடத்தில் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

புதுக்கோட்டை தொகுதியில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் டாக்டர். முத்துராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருமயம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ரகுபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஆலங்குடி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் மெய்யநாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், விராலிமலை தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் பழனியப்பன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளர் எஸ்.டி. இராமச்சந்திரன் அவர்களுக்கு கை சின்னத்திலும், கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சின்னதுரை அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்க வந்திருக்கிறேன்.

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி தேரோட்டத்தை 22 ஆண்டுகள் கழித்து நடத்திய கலைஞருடைய மகனாக - புதுக்கோட்டை மாவட்டத்தை உருவாக்கிய கலைஞருடைய மகனாக - காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை வழங்கியவன் என்ற அந்த உரிமையோடு உங்களிடத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்,

இந்த மாவட்டத்திற்கு எவ்வளவு பெருமை இருந்தாலும் ஒரு அவமானச் சின்னம் இருக்கிறது. அது என்னவென்று புதுக்கோட்டையில் இருக்கும் உங்களுக்கு நன்றாக தெரியும். ‘குட்கா பாஸ்கர்‘ – ‘குவாரி பாஸ்கர்‘ – ‘சி.பி.ஐ. விசாரணைப் புகழ் பாஸ்கர்‘ – ‘ஐ.டி. புகழ் பாஸ்கர்‘ – ‘ஊழல் புகார் புகழ் பாஸ்கர்‘ இதெல்லாம் அவருக்கு கிடைத்த பட்டப்பெயர். அவர் யார்? மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர்.

குட்கா என்பது எவ்வளவு பெரிய கொடிய நோயை உருவாக்கக் கூடியது என்பது உங்களுக்கு தெரியும். அது தடை செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்துபவர்களுக்கு உயிரை காப்பாற்ற முடியாத கேன்சர் வரும். அப்படிப்பட்ட அந்தக் குட்காவை விற்பதற்கு துணைநின்ற அமைச்சர் தான் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர்.

மக்கள் நல்ல நலத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் நல்வாழ்வு துறை உருவாக்கப்பட்டது. அதற்கென்று இருக்கும் அமைச்சரே இந்த குட்காவை பயன்படுத்தி கேன்சரில் சாக காரணமான அதற்கு பேரம் பேசி, அதில் கமிஷன் வாங்கியிருக்கிறார். மக்கள் நலத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரே இதற்கு உடந்தையாக இருக்கிறார். இதைவிட கொடுமை, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளுக்கும் இதில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தேர்தல் கமிஷன் நிறுத்தியது. அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டது என்று ஒரு பட்டியல் கிடைத்தது. அதில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கிறது. அது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, 2017இல் அவர் வைத்திருக்கும் கம்பெனிகளில் சோதனை நடந்து பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் குவாரி தொடர்பாக சிக்கிய ஆவணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர் குடும்பமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது என்பது நாடறிந்த உண்மை. இதெல்லாம் போதாதென்று, கொரோனாவிலும் கொள்ளை அடித்து இருக்கிறார். கொரோனா கிட் வாங்கியதில், மாஸ்க் வாங்கியதில், மருந்து தெளிப்பான் வாங்கியதில், ப்ளீச்சிங் பவுடரில் என அனைத்திலும் கொள்ளையடித்த ஆட்சிதான் இந்த ஆட்சி.

அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு துரோகம் செய்திருப்பவர்கள் தான் இந்த பழனிசாமியும் - பன்னீர்செல்வமும். அந்த அம்மையார் மறைவதற்கு முன்னால் அவர் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த நேரத்தில், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி பிரதமராக இருக்கும் மோடி அவர்களிடம் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் ஜி.எ.ஸ்டி. சட்டத்தை எங்கள் ஆட்சி ஆதரிக்க முடியாது, உதய் திட்டத்தை ஆதரிக்க முடியாது, நீட் தேர்வை ஆதரிக்க முடியாது, உணவு பாதுகாப்பு சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்குப்பிறகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் செப்டம்பர் மாதம் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். அவர் இருந்த வரையில் இந்த திட்டத்தை ஆதரிக்க முடியாது என்று தெளிவாகச் சொன்னார்.

ஆனால் அவர் மறைந்ததற்குப் பிறகு, இப்போது பொறுப்பிலிருக்கும் பன்னீர்செல்வம் – பழனிசாமி பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள். அவர்கள் முடியாது என்று சொன்ன திட்டங்களை எல்லாம் இவர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டில் அனுமதித்திருக்கிறார்கள் என்றால் இதைவிட ஜெயலலிதாவிற்கு அவர்கள் செய்திருக்கும் பச்சை துரோகம் எதுவுமே இருக்க முடியாது.

இந்த நிமிடம் வரையில் பா.ஜ.க.வுக்கு அடிமையாக இருப்பவர்கள் தான் இந்த ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இப்போது தேர்தல் வரும் காரணத்தால் சிறுபான்மையினரை ஆதரிப்பது போல ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்யும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். முத்தலாக் தடை சட்டத்திற்கு வாக்களித்தவர்கள் இவர்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள்.

ஆனால் இப்போது தேர்தல் அறிக்கையில் அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் - அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – அதை திரும்பப் பெற முயற்சி எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகளை வாங்குவதற்காக அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள்.

அதேபோல, மூன்று வேளாண் சட்டங்களால் இன்றைக்கு விவசாயப் பெருங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அந்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டுப் போட்டுவிட்டு இப்போது விவசாயிகளுக்கான அரசு என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு, ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றியிருக்கிறார் - சாதனை படைத்திருக்கிறார். அதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது.

அதேபோல, தற்போதைய தேர்தல் அறிக்கையிலும் பெண்களுக்கு - மகளிருக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை நிறைவேற்றித் தந்திருக்கிறார். அதேபோல, குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய், மகளிருக்கு செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி – இது போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டத்தில், குண்டாறு – வெள்ளாறு இணைப்புத் திட்டம், புதுக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள புதிய ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து நிலையம், கோட்டைப்பட்டணத்தில் கடல் உணவு பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு, திருமயத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை - திருமயம் - ஆலங்குடி - ஜெகதாப்பட்டினம் - கீரனூர் - மீமிசல் - மணல்மேல்குடியில் குளிர்பதனக் கிடங்குகள், புதுக்கோட்டையில் கால்நடை மருத்துவக் கல்லூரி, விராலிமலை - பொன்னமராவதி – கீழத்தூர் - மாத்தூர் - திருமயம் - ஆலங்குடியில் தொழிற்பேட்டைகள், புதுக்கோட்டையில் வேளாண்மைக் கல்லூரி, புதுக்கோட்டை - பொன்னமராவதி - அறந்தாங்கி - கீரனூர் - ஆலங்குடி - விராலிமலை - திருமயம் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும், விராலிமலை - கீரனூர் - கந்தர்வகோட்டையில் உழவர் சந்தை உருவாக்கப்படும், அறந்தாங்கியில் பொறியியல் கல்லூரி உருவாக்கப்படும், ஆலவயல் கிராமத்தில் காய்கறிகள் குளிப்பதன நிலையம் ஏற்படுத்தப்படும், பொன்னமராவதி - ஆலங்குடி – இலுப்பூர் - பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நம்முடைய ஆட்சி உருவாக வேண்டும்.

அ.தி.மு.க.வாக இருந்தாலும் அது பா.ஜ.க. உறுப்பினர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே ஒரு அ.தி.மு.க. உறுப்பினரோ, ஓரே ஒரு பா.ஜ.க. உறுப்பினரோ வெற்றி பெற்று விடக்கூடாது. 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெற வேண்டும். எனவே பா.ஜ.க.வை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டிற்குள் வர விடக்கூடாது.

இந்த 234 தொகுதிகளிலும் பெறும் வெற்றியை கொண்டு சென்று நம்மை ஆளாக்கிய கலைஞரின் நினைவிடத்தில் வெற்றி மாலை சூட்ட வேண்டும். அந்த தலைவருக்கு இடம் கொடுக்க மறுத்த பாவிகள் தான் இவர்கள். அப்படிப்பட்ட கயவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா?

மீண்டும் நினைவுபடுத்துகிறேன். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, உங்கள் அன்பான உற்சாகம் மிக்க வரவேற்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

banner

Related Stories

Related Stories