தேர்தல் 2026

”தமிழ்நாட்டிற்கு பாஜக அடிமை பழனிசாமி.. புதுச்சேரிக்கு ரங்கசாமி” : புதுச்சேரியில் முதலமைச்சர் ஆவேச பேச்சு!

சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் இன்று திமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, ஆளும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியின் அவலங்களை கூறி உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

”தமிழ்நாட்டிற்கு பாஜக அடிமை பழனிசாமி.. புதுச்சேரிக்கு ரங்கசாமி” : புதுச்சேரியில் முதலமைச்சர் ஆவேச பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (06-04-2026) புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் தீரமிகு வீரர்கள் வாழ்ந்த புதுச்சேரிக்கு நான் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் சகோதர மாநிலமான புதுச்சேரியின் புது வளர்ச்சிக்காக உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டுக்கும் – புதுச்சேரிக்கும், எப்போதும் ஒன்றாகத்தான் தேர்தல் நடக்கும்! ஆனால், இந்த முறை மாற்றி, புதுச்சேரிக்கு முன்கூட்டியே நடத்துகிறார்கள்... தேதியை மாற்றினால், நம்முடைய உணர்வுகளை மாற்றிவிட முடியுமா?

“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு” என்று பாடிய, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மண்ணில் நின்று, புதுச்சேரியை நாசமாக்கியுள்ள சங்கிப்படையை விரட்டியடிக்க - தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

கடந்த ஒரு வாரமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து, வாக்கு கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வு என்பது, மீண்டும் திராவிட மாடல் அமைய வேண்டும்! அதைத்தான் விரும்புகிறார்கள்! டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்குத் தலையாட்டும் அடிமைகள் கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை. அதே உணர்வுதானே புதுச்சேரி மக்களான உங்களிடமும் இருக்கிறது? இருக்கிறது (மக்கள்). என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் தயாரா?

தயார்

(மக்கள்).

புதுவை நிலம், புதுமையான நிலமாக மாற - இந்த மேடையில் இருக்கும் நம்முடைய முப்பது வேட்பாளர்களையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன்! சாதாரண மண்ணா இது? புகழ்பெற்ற புதுச்சேரி! இந்த மண்ணை பா.ஜ.க.வும் - என்.ஆர்.காங்கிரசும் என்ன நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்?

எப்படிப்பட்ட தலைவர்களைக் கொடுத்த மண் இது?

புதுச்சேரி விடுதலைக்கு வித்திட்ட மக்கள் தலைவர் வ. சுப்பையா – போற்றுதலுக்குரிய வெங்கட சுப்பா ரெட்டியார் – புதுவை விடுதலைப் போரில் கலந்துகொண்டு, மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்து, முதலமைச்சராக முத்திரை பதித்த ஃபரூக் மரைக்காயர் – புதுச்சேரியின் குரலை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த புதுவை சிவம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், தன்னுடைய திட்டங்களால் மக்கள் மனதை வென்ற எம்.டி.ஆர். ராமச்சந்திரன் – தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் உருவாக்கிய உழவர் சந்தைகளை, புதுச்சேரிக்கும் கொண்டுவந்த ஆர்.வி. ஜானகிராமன் - நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்த தலைவர் ப. சண்முகம் – புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிய ப. கண்ணன், வைத்திலிங்கம் என்று, இங்கு தோன்றிய மாண்புமிக்க அரசியல் தலைவர்கள் ஏராளம்!

ஆனால், இன்றைக்கு - பாரதீய ஜனதா கட்சி, அரசியல் மாண்புகளையே குழிதோண்டி புதைத்துக் கொண்டு இருக்கிறது!இவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளால் புதுச்சேரி மண், தன்னுடைய பாரம்பரிய பெருமைகளை இழந்து கொண்டிருக்கிறது!

இதை சரிசெய்யத்தான் நம்முடைய திராவிட ஆழ்வார் அன்புக்குரிய ஜெகத்ரட்சகன் அவர்களை தலைமைக் கழகத்தின் சார்பில் நான் அனுப்பி வைத்தேன். அவரும், புதுச்சேரியை வளர்த்தெடுக்கத் தேவையான வளர்ச்சி அரசியலை பேசி - கடுமையாக உழைத்து - என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கொட்டத்த அடக்கும் வகையில், ஒரு கூட்டணியை உருவாக்கினார். புதுச்சேரியை அழிவில் இருந்து காக்க - புதுச்சேரியை வளர்க்க - நமது கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அன்போடும் உரிமையோடும் நான் கேட்கிறேன். வெற்றி உறுதியா?

அழகான புதுச்சேரியில், N.D.A. கூட்டணியின் அலங்கோலமான ஆட்சி நடக்க நீங்கள் அனுமதிக்கலாமா? நம்முடைய டிமாண்ட் என்ன? ஒட்டுமொத்த புதுச்சேரியின் கோரிக்கை என்ன? புதுச்சேரி - மாநிலம் ஆக வேண்டும்! பதினாறு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டோம். ஆனால், ஒன்றிய அரசுக்கு மனமில்லை! இல்லை என்று சொல்லி கையை விரித்துவிட்டார்கள்! ஏன் என்றால், பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும் - தமிழ்நாடு போன்ற மாநிலங்களை முனிசிபாலிட்டிகளாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோன்று, புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்காமல், ஊராட்சி அளவுக்கு ட்ரீட் செய்கிறார்கள். இங்கு இருக்கும்

உங்கள் அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டசபைக்கு மாண்பு இருக்கிறதா? உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மரியாதையாவது இருக்கிறதா? இங்கு ஆல்-இன்- ஆல் யார்? ஆளுநர்! ஆளுநர் மூலமாக ரங்கசாமி அவர்களை பொம்மை முதலமைச்சராக வைத்திருப்பவர்கள், சாமானிய மக்களையா வாழ விடுவார்கள்? இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! அதற்கான அருமையான வாய்ப்புதான் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி! புதுச்சேரியின் புதிய விடியலுக்கான நாள், ஏப்ரல் 9. விடியலுக்குப் புதுச்சேரி தயாரா? தயார் (மக்கள்). புதுச்சேரியை மட்டுமல்ல; மக்களாட்சியையும் காக்க வேண்டிய கடமை உங்கள் கையில் இருக்கிறது! நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரசு, உங்களுக்காக செயல்படும் அரசாக இருக்க வேண்டும். டெல்லியின் கட்டளையை நிறைவேற்றும் அரசாக இருக்கவே கூடாது.

இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் பல தியாகதிருவுள்ளங்களை கொடுத்தது, இந்த புதுச்சேரி. எப்போதுமே எதிரிகள் என்ன செய்வார்கள்? ஒரு இனத்தை வீழ்த்த வேண்டும் என்றால், அவர்களின் மொழியை அவர்களிடம் இருந்து அப்புறப்படுத்துவார்கள்.

தாய்மொழியை இழந்த இனங்கள் வாழ்ந்ததில்லை. இதுதான் வரலாறு! நம்முடைய தாய்மொழியையும் - தமிழினத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்! புதுச்சேரியில் இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது? ஆரம்பக் கல்வி நிலையங்களிலேயே C.B.S.E. கல்வியை கொண்டுவந்து, தாய்மொழிக் கல்வியை அழித்திருக்கிறது, என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசு! இப்போது சொல்லுங்கள்... இந்த N.D.A. கூட்டணி, தமிழுக்கும் - தமிழருக்கும் எதிரான கூட்டணிதானே? இவர்களை மறுபடியும் ஆள அனுமதிக்கலாமா? 

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு இங்கு வந்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், பெஸ்ட் புதுச்சேரியாக ஆக்குவோம் என்று சொன்னார்.

”தமிழ்நாட்டிற்கு பாஜக அடிமை பழனிசாமி.. புதுச்சேரிக்கு ரங்கசாமி” : புதுச்சேரியில் முதலமைச்சர் ஆவேச பேச்சு!

ஆனால், என்ன ஆகியிருக்கிறது? வொர்ஸ்ட் புதுச்சேரியாக ஆக்கியிருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி! சில நாட்களுக்கு முன்பு, இங்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், “டபுள் எஞ்சின் ஆட்சியால் வளர்ச்சி அதிகமாகியிருக்கிறது” என்று பேசியிருக்கிறார். எங்கு வளர்ந்திருக்கிறது புதுச்சேரி? ஒருவேளை, கடலுக்கு அந்தப் பக்கம் இருக்குமோ?

அப்படி வளர்ந்த புதுச்சேரி இதுதான் என்றால், நான் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் இருக்கிறதா? வில்லியனூரில் ஒரு அமைச்சருக்கு சொந்தமான குடோனில் இருந்து, ட்டவிரோதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கல்காரர்களின் புகலிடமாக புதுச்சேரியை உருவாக்கியதுதான், என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க.வின் வளர்ச்சியா?

ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிப்பிடத்தில் விஷவாயு தாக்கி அப்பாவிகள் இறந்தது எப்படி? புதுச்சேரி அரசின் மெகா ஊழல்தானே இதற்கு காரணம்! இதைப் பற்றி விசாரித்தார்களா?இதையெல்லாம்விட கொடுமையாக, தரமற்ற மருந்துகளை கொள்முதல் செய்து, மக்களின் உயிரில் விளையாடி இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்து தயாரித்த வழக்கில், முக்கிய குற்றவாளிகள் சிக்கினார்கள். ஆனால், அந்த விசாரணை முடக்கப்பட்டது. இதுதான், டபுள் எஞ்சினின் லட்சணம்!

நம்முடைய புதுச்சேரியின் நீண்ட கால கோரிக்கை என்ன? மாநிலதகுதி வேண்டும்! அதைப்பற்றி அவர்கள் பேசவில்லை. அவர்களுக்கு தேவை என்றால், ஒரு மாநிலத்தையே உடைத்து, புது மாநிலத்தை உருவாக்குவார்கள்! அது போன்று, புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்க முடியாதா? இவ்வளவு நடந்த பிறகும் - புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

இல்லை என்று, துரோகம் இழைத்த பிறகும் - பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லி, அதே வாக்குறுதியை கொடுத்து, மக்களை ஏமாற்ற வருகிறார்கள் என்றால், அவர்கள் புதுச்சேரி மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்! எந்த முகத்தை வைத்துக் கொண்டு, பிரதமர் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்? இப்படிப்பட்ட டப்பா எஞ்சினை மறுபடியும் கொண்டு வருவோம் என்று பேசலாமா? இவ்வளவு அவலங்களை புதுச்சேரி சந்தித்ததற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான் காரணம்.

முதலமைச்சராக இருந்த ஐந்தாண்டுகளில், ரங்கசாமி அவர்கள்உள்ளாட்சித் தேர்தலை நடத்த கொஞ்சமாவது முயற்சி செய்தாரா? ஏன் நடத்தவில்லை? ஆளுநரை வைத்து, தன்னையே ஊராட்சி மன்றத் தலைவர் போன்று ட்ரீட் செய்கிறார்கள் என்று நடத்தாமல் விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை. தனக்காக கூட குரல் கொடுக்க முடியாதவராக இருக்கும் அவர், எவ்வாறு உங்களுக்காக குரல் கொடுப்பார்?

இந்த என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி என்ன செய்து கொண்டிருக்கிறது? மின்துறையை தனியார்மயமாக்க துடிக்கிறது! கள்ளச்சந்தை வியாபாரிகள் கையில் புதுச்சேரி சிக்கி சீரழிந்து

கொண்டிருக்கிறது! போதைப் பொருட்களை தாராளமாக இன்றைக்கு சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள்! சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஒப்பந்த பணி ஆசிரியர்கள் குடும்பத்துடன் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இவ்வளவு பிரச்சினைகளை தீர்க்காமல், கொஞ்சமும் வெட்கமில்லாமல் பிரதமரை அழைத்து வந்து ரோடு-ஷோ

நடத்திக் கொண்டு இருக்கிறார்களே! வெட்கமாக இல்லையா?தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி போன்றுதான், புதுச்சேரியில் ரங்கசாமி அவர்களும் இங்கு இருக்கிறார்.

தன்னுடைய அரசு பற்றி, ரங்கசாமி அவர்களே கொடுத்த ஓப்பன்ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா? கடந்த பிப்ரவரி மாதம், புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் என்ன சொன்னார் என்றால், “அதிகாரமே இல்லாத அரசு இது. தேர்தலில் போட்டியிடுவதில் அர்த்தமே இல்லை” என்று தன் வாயாலேயே விரக்தி அடைந்து

ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரா? இல்லையா? இன்னொரு விஷயத்தையும் நன்றாக கவனிக்க வேண்டும்... இந்தியா கூட்டணியை விமர்சித்து பேசிக் கொண்டு இருந்த ரங்கசாமி அவர்கள், இப்போது தன்னுடைய முதுகை பார்க்கிறாரா? இங்கு புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் ஒரு கட்சியை, NDA கூட்டணியில் சேர்த்தால், கூட்டணியைவிட்டு வெளியேறிவிடுவேன் என்று சொன்ன ரங்கசாமி அவர்கள், 24 மணிநேரத்தில் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார். இதற்கான கட்டாயம் ஏற்பட்டது எப்படி? இதுதான் அடிமை மனோபாவம்! இந்த லட்சணத்தில் இவர் இந்தியா கூட்டணியை விமர்சிக்கிறார்! தனி மனிதர்கள் ‘வீக்’ ஆகிவிடுவார்கள்!

கருத்தியல்கள்தான் என்றைக்கும் ஸ்ட்ராங்காக நிலைத்து நிற்கும்! முதலமைச்சர் ரங்கசாமி அவர்களே... பீகாரில் நிதிஷ்குமார் அவர்களை நினைத்துப் பாருங்கள்... அவரின் நிலை உங்களுக்கு வராது என்று என்ன நிச்சயம்? ஒன்றுமில்லை, ஃபிளாஷ்பேக்கில், கடந்த சட்டமன்றத் தேர்தலை எண்ணிப் பாருங்கள்... புதுச்சேரியில் 30 எம்.எல்.ஏ. எலக்‌ஷன் ரிசல்ட் வந்து, அந்த எம்.எல்.ஏ.க்கள் பொறுப்பேற்பதற்கு முன்பே, மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு நியமித்தது. இவர்களுடன் சேர்த்து 33 எம்.எல்.ஏ.க்களாக ஆக்கி, நீங்கள் அனைவரும் போட்ட வாக்குகளையே அவமானப்படுத்தியதுதான் பா.ஜ.க. அப்போதே, கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்கநினைத்தவர்கள் அவர்கள்! பா.ஜ.க.விற்கு தெரிந்த இந்த ரூட்டில் ரங்கசாமி அவர்களை எப்போது - எப்படி கவிழ்க்கலாம் என்றுதான் பா.ஜ.க. சிந்தித்துக் கொண்டு இருக்கிறது.

இது, ரங்கசாமி அவர்களுக்கும் தெரியும்! அவரென்ன சாமானியப்பட்டவரா? எவ்வளவு நாட்கள் சர்வீஸ்… பதவிக்காக எப்படியெல்லாம் மாறி மாறி போவார்.

எனவே அவருக்கும் தெரியும். அதனால்தான், தன்னுடைய அரசு அதிகாரமே இல்லாத அரசு என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். இந்த லட்சணத்தில், ஒன்றிய அரசுடன் கூட்டணி வைத்தால், புதுச்சேரிக்கு எல்லாம் கிடைக்கும் என்று பிரசாரம் செய்கிறார்கள்!

முதலமைச்சர் ரங்கசாமி அவர்களே... மனதில் கையை வைத்துசொல்லுங்கள்... நீங்கள் கேட்டதையெல்லாம் ஒன்றிய அரசு செய்ததா? தலைமைச் செயலாளரை மாற்றுவதற்குகூட உங்களுக்கு அதிகாரம் இல்லையே… எத்தனை ஃபைல்கள் துணைநிலை ஆளுநர் மாளிகையில் தூங்கிக் கொண்டு இருக்கிறது? கடந்த ஐந்தாண்டுகளில் புதுச்சேரிக்காக நீங்கள் கேட்ட பட்ஜெட் தொகையை ஒன்றிய பா.ஜ.க.

அரசு முழுமையாக கொடுத்திருக்கிறதா? இப்படியெல்லாம் மக்களை வஞ்சித்துவிட்டு, கவர்ச்சி வாக்குறுதிகளால் அவர்களை ஏமாற்றலாம் என்று ரங்கசாமி அவர்கள் நினைக்கிறார். பா.ஜ.க. மீது இருக்கும் பாசத்தில், புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமி துரோகம் செய்வது நியாயமா?

”தமிழ்நாட்டிற்கு பாஜக அடிமை பழனிசாமி.. புதுச்சேரிக்கு ரங்கசாமி” : புதுச்சேரியில் முதலமைச்சர் ஆவேச பேச்சு!

ஆனால், புதுச்சேரி மக்கள் இந்த முறை நிச்சயமாக ஏமாற மாட்டார்கள். புதுச்சேரி மக்கள் மாற்றத்திற்கு - புதிய விடியலுக்குதயாராகிவிட்டார்கள். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவது மாதிரியான, திராவிட மாடல் அரசின் முற்போக்குத் திட்டங்கள் இங்கேயும் செயல்படுத்தப்பட வேண்டுமென்றால், நீங்கள் அனைவரும், தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும். புதுச்சேரிக்காக தி.மு.க. வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால், புதுச்சேரிக்கு மாநில தகுதி பெற்றுத்தர பாடுபடுவோம்.

துணைநிலை ஆளுநரின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, உங்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்தான் முழு அதிகாரம் பெற்றவராக இருப்பது உறுதி செய்யப்படும்.

நீதியரசர் சுசீந்திரன் ஆணைய அறிக்கையின் வழிகாட்டுதல்படி,பெண்கள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

A.F.T., சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மீண்டும் திறந்து நவீனப்படுத்தி ஜவுளி பூங்கா துவங்கப்படும். உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்படும்.

புதுச்சேரியை ஒன்றிய நிதிக் குழுவின் வரம்புக்குள் கொண்டு சென்று, மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது போன்று, 41 விழுக்காடு வரிப் பங்கீடு வழங்க வலியுறுத்துவோம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். மோட்டார் வாகன உற்பத்தி தொடர்பான தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூரைப் போன்று பின்னலாடைத் தொழிற்சாலைகளும், லுங்கிகள் மற்றும் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு தொழில் மையங்களும் உருவாக்கப்படும். அந்த ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, உரிய உதவிகள் செய்யப்படும்.

அரசு ஃபேஷன் தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்படும். MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்கள் வடிவமைக்கப்படும்.

நலிவடைந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படுவதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கவும்,

காரைக்காலில் மீன் பதப்படுத்தப்படும் நவீன பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். "1000 ஸ்டார்ஸ்" என்ற திட்டத்தின்கீழ், ஒவ்வொரு துறையிலும் ஆயிரம்

பேருக்கு, அவரவர் படிப்பிற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப பயிற்சி

வழங்கப்படும்.

முழுமையான பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.

ஒருங்கிணைந்த திடக்கழிவு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

கிராமச்சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு, முறையாக பராமரிக்கப்படும்.

ஆதரவற்ற முதியோர் நலமுடன் வாழ ‘மகிழ்ச்சி இல்லம்’ திட்டம்உருவாக்கப்படும்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய இடங்களில் டிஜிட்டல் வசதியுடன் கூடிய நூலகங்கள் அமைக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், உலகத்தரம் வாய்ந்த,கடல்வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும்.

விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், சந்தன மரப் பயிரிடுதல் ஊக்கப்படுத்தப்படும்.

காரைக்கால் பகுதியை நெற்களஞ்சியமாக அறிவித்து, நவீன அரிசி ஆலைகள் மற்றும் தானிய கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் உறுதியாக சொல்கிறேன்... இந்த ஸ்டாலினின் குரல்,

தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல; இந்தப் புதுச்சேரிக்கும் சேர்த்தேதான் எப்போதும் ஒலிக்கும்! மீண்டும் சொல்கிறேன். இந்த ஸ்டாலினின் குரல், தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல; இந்தப் புதுச்சேரிக்கும் சேர்த்தேதான் எப்போதும் ஒலிக்கும்! திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியாக, புதுச்சேரி விளங்கும்!

அந்த வகையில், வில்லியனூர் தொகுதியில் இரா. சிவா அவர்களுக்கும், மங்கலம் தொகுதியில் எஸ்.எஸ். ரங்கன் அவர்களுக்கும்,

திருபுவனை தொகுதியில் பி. அங்காளன் அவர்களுக்கும், பாகூர் தொகுதியில் ஆர்.ஆர். செந்தில்குமார் அவர்களுக்கும், முதலியார்பேட்டை

தொகுதியில் லி. சம்பத் அவர்களுக்கும், உப்பளம் தொகுதியில் அனிபால் கென்னடி அவர்களுக்கும், உருளையன்பேட்டை தொகுதியில்

எஸ். கோபால் அவர்களுக்கும், நெல்லித்தோப்பு தொகுதியில் வே.கார்த்திகேயன் அவர்களுக்கும், ராஜ்பவன் தொகுதியில் விக்னேஷ் கண்ணன் அவர்களுக்கும், காலாப்பட்டு தொகுதியில் ஏ. செந்தில் அவர்களுக்கும், கதிர்காமம் தொகுதியில் ப. வடிவேலு அவர்களுக்கும், காரைக்கால் தெற்கு தொகுதியில் ஏ.எம்.எச். நாஜிம் அவர்களுக்கும், நிரவி திருமலைராயன் பட்டினம் தொகுதியில் எம். நாக தியாகராஜன் அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

அதேபோன்று, மண்ணாடிப்பட்டு தொகுதியில் டி.பி.ஆர். செல்வம்அவர்களுக்கும்,

ஊசுடு தொகுதியில் கார்த்திகேயன் அவர்களுக்கும்,

இந்திரா நகர் தொகுதியில் ராஜாகுமார் அவர்களுக்கும், தட்டாஞ்சாவடி தொகுதியில் வைத்திலிங்கம் அவர்களுக்கும், காமராஜ் நகர் தொகுதியில் தேவதாஸ் அவர்களுக்கும், லாஸ்பேட்டை தொகுதியில் வைத்தியநாதன் அவர்களுக்கும், முத்தியால்பேட்டை தொகுதியில் ராஜேந்திரன் அவர்களுக்கும், அரியாங்குப்பம் தொகுதியில் விஜயலட்சுமி அவர்களுக்கும், மணவெளி தொகுதியில் அனந்தராமன் அவர்களுக்கும், ஏம்பலம் தொகுதியில் கந்தசாமி அவர்களுக்கும், நெட்டப்பாக்கம் தொகுதியில் அன்பரசன் அவர்களுக்கும், நெடுங்காடு தொகுதியில் தினேஷ்குமார் அவர்களுக்கும், திருநள்ளாறு தொகுதியில் கமலக்கண்ணன் அவர்களுக்கும், காரைக்கால் வடக்கு தொகுதியில் ரஞ்சித் அவர்களுக்கும், மாஹே தொகுதியில் ரமேஷ் பரம்பத் அவர்களுக்கும், ஏனாம் தொகுதியில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் அவர்களுக்கும், நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோன்று, உழவர்கரை தொகுதியில் செல்வ புஷ்பலதா அவர்களுக்கு கரும்பலகை சின்னத்தில் உங்களுடைய பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அன்புடனும், பண்புடனும் கேட்டுக் கொள்கிறேன்.

புதுச்சேரி புது விடியலையும், புது எழுச்சியையும் பெற, தி.மு.க.-

காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள். புத்துணர்வு கொண்ட புதுச்சேரியை உருவாக்குவோம். 

வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

banner

Related Stories

Related Stories