
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் 6 ஆம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 7 ஆவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த மக்களவை தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு காரணம் 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளன.
தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து பா.ஜ.கவினர் மன உணர்வுகளை தூண்டி வருகிறார்கள். பிரதமர் மோடியே இந்து - முஸ்லிம் பிரிவினையை தொடர்ந்து பேசி வருகிறார்.
தற்போது கூட முஜ்ரா நடனத்துடன் எதிர்க்கட்சிகளை ஒப்பிட்டு பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மோடியின் பேச்சுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகார் மக்களை அவமதித்துள்ளார். முஜ்ரா நடகம் அதிகமாக பீகாரில்தான் ஆடப்படுகிறது. மோடி பீகாரையும், வாக்காளர்களையும் அவமதிப்பு செய்துள்ளார்." என தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிரியங்கா காந்தி, ”பிரதமர் மோடியின் முஜ்ரா நடன பேச்சை கேட்டு தான் வெக்கப்படுகிறேன். பணவீக்கம் , வேலையின்மை குறித்து நாடு கவலைப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி மட்டும் இந்து, முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி விடுவதில் மிகவும் ஆவலாக இருக்கிறார்.” என கண்டித்துள்ளார்.
மேலும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, பிரதமர் மோடிக்கு முஜ்ரா விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், ”பரந்த இதயங்களை கொண்ட இந்தியாவில் ஒரு பிரதமரின் பேச்சு இப்படியா இருப்பது?. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மனதில் வைத்து தாங்கள் பேசவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
முஜ்ரா நடனம் என்பது முகலாய மன்னர் சபையில் பெண்கள் ஆடிய கவர்ச்சி நடனம் என்று கூறப்படுகிறது.








