எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து வரும் நிலையில், அதன் கொட்டத்தை அடக்கும் வகையிலான தீர்ப்பை பெற்று, ஒன்றிய பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் மொத்த நாட்டுக்கும் வழி காட்டியிருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. 414 பக்கங்களை கொண்டிருக்கும் தீர்ப்பு, கூட்டாட்சியை வலுப்படுத்தும் தி.மு.க.வின் வரலாற்றில் முக்கியப் பங்கை இனி வரும் காலங்களில் நிச்சயம் வகிக்கும்.
தீர்ப்பின் முக்கியமான கருத்துக்கள் இவை தான்:
1. இனி காலம் தாழ்த்த முடியாது:
அரசமைப்புச் சட்டத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கென ’as soon as possible’ என்பதற்கான கால வரையறையை நிர்ணயித் திருக்கிறது உச்ச நீதிமன்றம். மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதா இல்லையா என தீர்மானிப்பதற்கு என குடியரசு தலைவருக்கு மூன்று மாத கால வரையறையை நிர்ணயித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த கால வரையறை என்பது மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய நாளிலிருந்து தொடங்கும்.
2. உச்சநீதிமன்றத்துக்கு பொறுப்பு:
மசோதாக்களை முடக்கும் வகையில் ஆளுநரோ குடியரசுத் தலைவரோ காலம் தாழ்த்துவதை தடுக்கும் பொருட்டு, தேவைப்பட்டால் உச்சநீதிமன்றமும் தலையிடும் என தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகு, குடியரசு தலைவர் அந்த மசோதா குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டால், மாநில அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். இரு தரப்பிலிருந்தும் பதில் ஏதும் கிடைக்காத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட எல்லா நியாயங்களும் மாநில அரசுக்கு இருக்கிறது.
3.குடியரசு தலைவருக்கும் வரையறை:
ஆளுநரை போல குடியரசுத் தலைவரும் மாநில அரசின் செயல்பாட்டை குலைக்கும் வகையில் காலம் தாழ்த்தக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கான காரணங்களை வெளிப்படுத்த வேண்டுமென குடியரசு தலைவரின் பொறுப்பை விவரித்திருக்கும் உச்சநீதிமன்றம், இத்தகைய மசோதாக்களை ஆலோசிக்கும்போது, அவற்றின்சட்டத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தால் குடியரசு தலைவர், உச்சநீதிமன்றத்திடம் அறிவுரை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அதே நேரத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதற்காக இந்த நடைமுறையையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அது எச்சரித்திருக்கிறது.
4. ஆளுநருக்கு அறிவுறுத்தல்:
ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவித்து வரும் நிலையில், அவரது போக்கை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுநர் பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் சாசனத்தை பின்பற்றித்தான் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் குறுகிய கால அரசியல் ஆதாயங்களை கருதி, முடிவுகள் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் விமர்சித்திருக்கிறது. மேலும் தீர்ப்பில், மாநில அரசின் மசோதாவை தனிப்பட்ட அதிருப்தியாலோ, அரசியல் ஆதாயம் கருதியோ பிற காரணங்களுக்காகவோ குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க அரசியல் சாசனத்தில் அனுமதி கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
5. ஆளுநரின் தவறு:
தமிழ்நாடு சட்டசபை இரண்டாம் முறை ஆளுநருக்கு மசோதாக்களை அனுப்பிய பிறகு, அவற்றை அவர், குடியரசுத் தலைவருக்கு சட்டப்படி அனுப்பியிருக்கக் கூடாது என தீர்ப்பு குறிப்பிடுகிறது. எனவே அவற்றின் மீது குடியரசு தலைவர் என்ன முடிவு எடுத்திருந்தாலும் அது சட்டப்படி செல்லாது எனக் குறிப்பிட்டு, கடுமை காட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
6. மாநில அரசுக்கே அதிகாரம்:
ஆளுநர் உள்ளிட்ட எந்த அரசியல் சாசனப் பொறுப்புகளுக்கும் மாநில அரசின் மசோதாவை முழுமையாக நிராகரிக்கும் ‘Absolute Veto’ அதிகாரம் கிடையாது எனக் குறிப்பிடும் உச்சநீதிமன்றம், இது குடியரசு தலைவருக்கும் பொருந்தும் என்றும் அதிகார வரம்புகளை தெளிவுபடுத்தி இருக்கிறது. ஒருவேளை சட்டத்துக்கு புறம்பாக மசோதா இருப்பதாக கருதினாலும், அதற்கான முடிவெடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்குத் தான் உண்டு என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டி ருக்கிறது.
7. ஆளுநரின் மக்கள் விரோத நடவடிக்கை:
சட்டசபையின் அதிகாரத்துக்கு இத்தீர்ப்பு முக்கியத்துவம் அளித்திருக்கிறது. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உண்டு. மக்களின் நலன் கருதி சட்டசபை கொண்டு வரும் மசோதாக்கள், சட்டங்கள் ஆகவில்லை எனில், மக்கள் பிரதிநிதிகள் மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மசோதாக்கள் கிடப்பில் போடப்படுவது என்பது மக்கள் ஆட்சிக்கு எதிராக மாறும் சாத்தியம் கொண்டது,’ எனக் குறிப்பிடும் தீர்ப்பு, ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், வேண்டுமென்றே ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தால், அதை நாட்டின் கூட்டாட்சிக்கு எதிரான செயல்பாடாகதான் கருத வேண்டும்’என்றும் அழுத்தந்திருத்தமாக விளக்கியிருக்கிறது.
8.ஆளுநருக்கு கண்டனம்:
ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக கண்டித்திருக்கிறது உச்சநீதிமன்றம். ‘ஆளுநர் பொறுப்பு தொடர்பாக வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எதையும் தமிழ்நாடு ஆளுநர் மதிக்கவே இல்லை. இந்த மசோதாக்கள் மீது அவர் நடவடிக்கை எடுப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவேதான் சட்டப்பிரிவு 142 உச்சநீதிமன்றத்துக்கு அளித்திருக்கும் அதிகாரத்தைக் கொண்டு 10 மசோதாக்களுக்கும் நாங்களே ஒப்புதல் அளிக்கிறோம்,’ என உச்சநீதிமன்றம் கடுமையான முடிவை எடுத்துள்ளது.
9.அரசியல் சாசனத்துக்கே விரோதமாக செயல்படும் ஆர்.என்.ரவி.
ஆளுநர் பொறுப்பின் முக்கியத்துவம் மற்றும் தன்மை ஆகியவற்றை தீர்ப்பில் உச்சநீதிமன்றம் விவரித்திருக்கிறது. ‘பதவிப் பிரமாணத்தின்போது, ’அரசியல் சாசனத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் காத்து, மாநில மக்களின் நலனுக்காக உழைப்பேன்’ என்றுதான் ஆளுநர் உறுதிமொழி எடுப்பார். எனவே அரசியல் சாசனப்படிதான் அவர் நடக்க வேண்டும். மக்களின் நலனுக்காக உழைப்பதாக அவரை உறுதிமொழி எடுக்க செய்வதற்கும் காரணம் இருக்கிறது. மாநிலத்தை மக்களின் நலன் கருதிதான் அவர் செயல்பட வேண்டும். மாநில அரசுடன் இயைந்துதான் அவர் செயல்பட வேண்டும். இல்லையெனில், அவர் எடுத்த உறுதிமொழிக்கே புறம்பாக செயல்பட்டதாகி விடும்.’ என்கிறது இந்த தீர்ப்பு.
10.ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு குட்டு:
இறுதியாக அரசியல் சாசனத்தை பற்றி விவரிக்கையில், ‘எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் இதே அரசியல் சாசனத்தை நாம் பயன்படுத்துவதற்கு காரணம், அதுதான் நமக்கான உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. நமக்கான பொறுப்புகளை வரையறுக்கிறது,’ என தீர்ப்பில் குறிப்பிட்டு, அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்துக்கும் மறைமுகமான விமர்சனத்தை வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இன்னும் ஒரு படி மேலே சென்று, அரசியல் சாசனத்தை இயற்றிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின், ”நல்ல அரசியல் சாசனமாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால், அரசியல் சாசனமும் மோசமாகி விடும்,” என்ற கூற்றை மேற்கோள் காட்டியிருகிறது தீர்ப்பு. இதுதான் பாஜக அரசுக்கு வைத்த கொட்டு ஆகும்.
11. இது இறுதி எச்சரிக்கை:
‘’நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்பட வேண்டும்’’ என்ற இறுதி எச்சரிக்கையை இத்தீர்ப்பு செய்துள்ளது. ஆளுநர்கள் மூலமாக இரட்டையாட்சி நடத்தத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு ‘செக்’ வைக்கப்பட்டுள்ளது.
மேலும்மேலும் அதிகாரத்தை தன்னகத்தே குவித்துக் கொண்டு எதேச்சதிகாரத்தை நோக்கி விரைய முயற்சித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் ஆதிக்க ஆட்சிக்கு எதிராக ஜனநாயப்பூர்வமான கூட்டாட்சிக்கான போராட்டத்தில் முக்கிய மான மைல்கல்லை இத்தீர்ப்பு மூலம் தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது.
பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான போரில் மற்றுமொரு ஆயுதத்தை உருவாக்கி அளித்திருக்கிறது தி.மு.க. கண்ணாடிக் கோட்டையாக பா.ஜ.க. கட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் பாசிசத்தின் மீது இன்னொரு பாறாங்கல்லை உருட்டி விட்டிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.