தி.மு.க

“சமூக நீதியை கட்டிக் காத்து, அடகு வைத்த சுயமரியாதையை மீட்போம்” - முனைவர் ஜெயரஞ்சனின் அனல் பறக்கும் பேச்சு

திருச்சியில் நடந்த திமுகவின் விடியலுக்கான முழக்கம் பொதுக்கூட்டத்தில் முனைவரும் பொருளாதார அறிஞருமான ஜெயரஞ்சன் ஆற்றிய உரையின் விவரம்.

“சமூக நீதியை கட்டிக் காத்து, அடகு வைத்த சுயமரியாதையை மீட்போம்” - முனைவர் ஜெயரஞ்சனின் அனல் பறக்கும் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கும் சமூக நீதியைக் கட்டிக் காப்போம் என்றும், அடகு வைக்கப்பட்ட சுயமரியாதையை மீட்டெடுப்போம் என்றும் திருச்சியில் நடைபெற்ற தமிழக விடியலுக்கான சிறப்புக்கூட்டத்தில் ‘பொருளாதாரம்’என்ற தலைப்பில் முனைவர் ஜெயரஞ்சன் வலியுறுத்தினார்.

இது குறித்து முனைவர் ஜெயரஞ்சன் பேசியது வருமாறு :-

“உரையாற்றுவதற்கு வாய்ப்பளித்த கழகத்தின் தலைவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய மாநிலத்தின் பொருளாதார நிலைமை எப்படி இருக்கிறது; நாட்டினுடைய பொருளாதார நிலைமை எப்படி இருக்கிறது; இரண்டையும் இணைத்துப் பார்த்தால் நமக்கு என்ன புரிகிறது என்பதை எடுத்துச் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள்.

மேற்கண்டவற்றைப் பார்க்கும் பொழுது, நாம் மிகப்பெரிய ஓர் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். அது என்ன அபாயம் என்றால், எந்தக் கொள்கைக்காக இந்த இயக்கம் தோற்று விக்கப்பட்டதோ -அந்த இயக்கத்தினுடைய அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கக் கூடிய ஏற்பாடுகள் ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது கைகோர்த்து வருகிறது . அதுதான் இன்றைய நிலவரம்!

அனைவருக்கும் வளர்ச்சியை கொண்டு செல்லும் சமூக நீதி!

அப்படியென்றால், நம்முடைய இயக்கத்தின் தனித்தன்மையையும், நம்முடைய மக்களின் வாழ்வையும் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு எதிராக நாம் போராட வேண்டிய காலம் இப்பொழுது வந்திருக்கிறது. எதற்காக இப்படிச் சொல்கிறேன் என்றால், நம்முடைய இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. ஒன்று, சமூகநீதி இன்னொன்று சுயமரியாதை.

நம்முடைய பொருளாதாரக் கொள்கைகள் - தமிழகத்தினுடைய, தி.மு.கவினுடைய பொருளாதார கொள்கைகள் என்பதை எடுத்துப் பார்த்தோமேயானால், மேற்கண்ட இரண்டும்தான் நம்மை வழி நடத்தியிருக்கின்றன. சமூகநீதி என்று சொன்னால், பொதுவாக எப்படி நாம் புரிந்துகொள்வோம் கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்று தான் நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், அதுமட்டுல்ல சமூகநீதி என்பது. சமூகநீதி என்பது, வளர்ச்சியை எல்லோருக்கும் கொண்டு சேர்த்தல். எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்குவது.

வாய்ப்பு என்பது படிப்பாக இருக்கலாம், மருத்துவமாக இருக்கலாம், வேலை வாய்ப்பாக இருக்கலாம், உணவாக இருக்கலாம். எல்லாவற்றிலும் எல்லோருக்கும் வாய்ப்பு வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அதைத்தான் நாமும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதுதான் நம்மை இவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பீகார் எப்படி இருந்ததோ, அதுபோன்றுதான் நாமும் இருந்தோம். 30 ஆண்டுகளில் நாம் அடைந்திருக்கின்ற வளர்ச்சி, மாற்றம் என்பது எதன் அடிப்படையில் நடந்திருக்கிறது என்றால், சமூக நீதிதான்!

அந்த சமூக நீதியை ஒழித்துக் கட்டுவதுதான் அவர்களுடைய முதற்பணியாக மேற்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, சுயமரியாதை! சுயமரியாதை என்பது எப்படி வருகிறது என்று கேட்டால், ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர் இல்லை என்பதை நாம் கொள்கை அளவில், உணர்வு அளவில் மட்டும் சொல்வதில்லை. பொருளாதார அடிப்படையில் நாம் என்ன செய்திருக்கிறோம் என்றால், எல்லோருக்கும் வாய்ப்பளிப்பதன் மூலமாக யாரையும், யாரும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். அதற்கு மிகப்பெரிய அளவில் வித்திட்டவர் நமது தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

உலகளவில் போற்றப்படும் கலைஞரின் திட்டங்கள்!

அதை எப்படி அவர் செய்தார் என்றால், எல்லோருக்கும் உணவு சுலபமாகக் கிடைப்பது எப்படி என்பதை யோசித்து, அவர் செயல்படுத்திய பல திட்டங்கள், இன்றளவும் உலகளவில் போற்றப்படுகிறது. இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில்தான் எல்லோருக்குமான உணவு கிடைக்கிறது. அதுதான் தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் எப்படி என்று கேட்டீர்களேயானால், வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும்தான் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியில்லை; உணவு என்பது கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் வேண்டும் என்கிற முன்யோசனையோடு கலைஞர் செயல்படுத்திய திட்டம்தான் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற பொதுவிநியோகத் திட்டமாகும்.

இந்தப் பொது விநியோகத் திட்டமாக இருக்கட்டும் 1974 இல் தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் மின்சார வசதி கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஸ்பெஷல் ஸ்கீம் போட்டு யூனியன் கவர்ன்மெண்ட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு இருந்த முன்னேற்றப் பாதையை குழி தோண்டிப் புதைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை நம் மாநிலத்திற்கான நிதி ஆதாரங்களை உரிமைகளைப் பறிக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வரிவிதிப்பு முறையில் அடிமைச் சாசனம்!

எந்த மாநில அரசுக்கும் வரி விதிக்கும் உரிமை கிடையாது. மத்திய அரசு என்ன கொடுக்கிறதோ, அதை வாங்கிக் கொண்டுவர வேண்டியதுதான். அந்த மாதிரியான அடிமைச்சாசனம் போன்று ஒரு வரி விதிப்பு முறையில், கையெழுத்துப் போட்டுவிட்டு நம் மாநிலத்திற்கு எவ்வளவு நிதி வேண்டுமோ அதைப் பெற முடியாத அளவிற்கு ஒரு சூழலை உருவாக்கி கையெழுத்துப் போட்டு இருப்பது இன்றைக்கு இருக்கக் கூடிய ஆளும் அண்ணா தி.மு.க. அரசு. அதை செயல்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு.

இப்படிப்பட்ட மாநிலத்தின் சுயமரியாதையை இழந்து மாநிலத்தை ஒருஅன்னக்காவடியாக காவடி தூக்குபவர்களாக மாற்றியதுதான் இவர்கள் செய்த ஒரு பெரிய சாதனை! இப்பொழுது முதலில் நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், அடகு வைக்கப்பட்ட மானத்தை, நம்முடைய சுயமரியாதையை மீட்க வேண்டும். மாநிலத்தினுடைய சுயமரியாதையை மீட்பதன் மூலமாக, நம்முடைய சுயமரியாதையை மீட்க முடியும்.

மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள்!

இதுவரையில், மத்திய மாநில ஆட்சிகள் செய்திருக்கக்கூடிய மக்கள் விரோத மாநில விரோதக் கொள்கைகளையெல்லாம் மீட்டெடுப்பதற்கும், அதைச் சரியான பாதையில் செல்ல வைப்பதற்கும் முக்கியம் என்னவென்றால், நம்முடைய திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூக நீதி மற்றும் சுயமரியாதையை மீட்டெடுத்து, இருக்கின்ற திட்டங்களையெல்லாம் காப்பாற்றியாக வேண்டும்; அதுமட்டுமல்ல, புதிய திட்டங்களை யோசித்து செயல்படுத்த வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தக் காலகட்டம் எப்படி இருக்கிறது என்றால், எந்த அமைப்பையும், எந்தக் கூட்டணியையும் எதிர்க்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். இந்தக் கூட்டம் முடிந்து அவரவர்களும் அவரவர் ஊருக்குச் சென்று, உங்கள் சுற்றத்தாரிடமும், நண்பர்களிடமும், இன்றைய ஆட்சி, மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதையும், அதையெல்லாம் நாம் எப்படி மீட்டெடுக்க முடியும் என்பதையும், அதற்குண்டான வாய்ப்பு ஏப்ரல் 6ஆம் தேதி வரவிருக்கிறது. அந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்ல வேண்டும். அப்பொழுதுதான், சரியான பாதையில் தமிழகம் செல்லும் என்பது என்னுடைய கருத்தாகும்.” இவ்வாறு அவர் பேசினார்.

banner

Related Stories

Related Stories