தி.மு.க

“இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?”- நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி!

2020-21ஆம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன என தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

File Image
File Image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2020-21ஆம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன என தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க பொருளாளரும், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று மக்களவையில், 2020-21ம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன என்று கேள்வி எழுப்பினார்.

கொள்ளை நோய்த் தொற்று தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதார வளர்ச்சி குறியீடு, முதல் காலாண்டில், 23.9 விழுக்காடு வீழ்ச்சியும், இரண்டாம் காலாண்டில், 7.5 விழுக்காடு வீழ்ச்சியும், 2020-21 நிதியாண்டில் 7.7 விழுக்காடு வீழ்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று விரிவான கேள்வியை, மக்களவையில் டி.ஆர்.பாலு, மத்திய நிதித் துறை இணையமைச்சர், அனுராக் சிங் தாகூரிடம் எழுப்பினார்.

அதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் மக்களவையில் அளித்த பதில் பின்வருமாறு:

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின், தேசிய வருமான மதிப்பீட்டின்படி 2020-21 ஆண்டின், பொருளாதார வளர்ச்சி குறியீடு, முதல் காலாண்டில், 24.4 விழுக்காடு வீழ்ச்சியும், இரண்டாம் காலாண்டில், 7.3 விழுக்காடு வீழ்ச்சியும், 2020-21 நிதியாண்டில் 8 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. கொள்ளை நோய்த் தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க, இந்தியாவின் சுயசார்பு திட்டங்களின் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் 27 இலட்சம் கோடிகள் அளவிற்கு பொருளாதரத்தை முடுக்கிவிட, திட்டங்களை அறிவித்துள்ளது. பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதியுதவித் திட்டம், தொழிற்சாலைகளுக்கான நில வங்கித் திட்டம், மற்றும் புதிய மின்சாரக் கட்டணக் கொள்கைகள், இவற்றின் மூலம், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில், கொள்ளை நோய்த் தொற்றினை தவிர்க்க, தடுப்பூசிக்காக ரூபாய் 35,000 கோடிகள் அளவிற்கும், தேசிய சுகாதாரத் திட்டம், சத்துணவுத் திட்டம், அனைவருக்குமான குடிநீர் திட்டம், ஆகியவற்றின் மூலம் கட்டமைப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.

13 துறைகளில் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டங்களும், 7400 தேசிய கட்டமைப்பு திட்டங்களும், ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மின்சார வசதிகளும், காப்பீட்டுத் துறையில், அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயங்களை வலுப்படுத்தவும், கூட்டுறவுத் துறைகளை மேம்படுத்தவும், தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய நிதித் துறை இணையமைச்சர் தனது விரிவான பதிலில் கூறியதாவது:

விளைபொருள்களின் உற்பத்தி விலையில், ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த தேவையான முதலீடுகளை அதிகரிக்கவும், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு, ரூபாய் 15,700 கோடிகள் அளவிற்கும், மத்திய அரசு உதவிகள் செய்துள்ளது என்றும், தேசியக் கல்விக் கொள்கையின்படி 15,000 பள்ளிக் கூடங்களை தரம் மேம்படுத்தவும், இந்திய உயர்கல்வி ஆணையம், இராணுவத்திற்கான 100 பள்ளிகள், 750 ஏகலைவன் மாதிரி பள்ளிகள், பட்டியலினத்தவர்களுக்கான கல்வி உதவித் திட்டம், ஆகிய திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

தேசிய ஆராய்ச்சி திட்டத்திற்காக, ரூபாய் 50,000 கோடிகள் நிதி உதவியும், ககன்யான் திட்டம், ஆழ் கடல் ஆராய்ச்சித் திட்டம், கணினி வழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு ரூபாய் 3,708 கோடிகள் ஒதுக்கீடு, தேயிலை தொழிலாளர்களின் நலத்திற்காக ரூபாய் 1,000 கோடிகள் என பல்வேறு திட்டங்களின் மூலம், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர், மக்களவையில், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர், டி. ஆர். பாலு, அவர்களுக்கு, விரிவான பதிலை அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories