அரசியல்

“நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன்” - தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு ஜெகத்ரட்சகன் எம்.பி பதிலடி!

தன்னைப் பற்றி பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளதாக தி.மு.க எம்.பி., ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

“நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன்” - தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு ஜெகத்ரட்சகன் எம்.பி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் உடன் மிரட்டி கூட்டணி சேர முயற்சித்து வருகிறது.

இதற்கிடையே, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பற்றியும் தவறான தகவல்களை பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் பரப்பி வருகின்றன. தேர்தல் நேரத்தில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.

தி.மு.க எம்.பி., ஜெகத்ரட்சகன் குறித்து சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரவிய நிலையில் அதுகுறித்து ஜெகத்ரட்சகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நேற்று முதல் சமூகவலைதளங்களில் சில தவறான செய்திகள் என்னைப் பற்றி பரப்பப்படுகிறது. எங்கள் கழகத் தலைவரும் குடும்ப தலைவருமாகிய தளபதி அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்று காலை தி.மு.க தலைவர் அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்டு புதுவை மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து எங்கள் தோழமைக் கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இருந்தேன்.

என் மீது சமூக வலைதளங்களில் வருகின்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories