தி.மு.க

“தமிழக மக்களின் விடியலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியீடு” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்தோங்கிய தமிழ்நாட்டைக் கவனமுடன் கட்டமைப்பதற்கான தி.மு.க.வின் மாபெரும் திட்ட அறிக்கையாக இது அமையும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழக மக்களின் விடியலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியீடு” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாழ்த்து மலர்கள்,வெற்றி மாலையாகட்டும் எனக் குறிப்பிட்டு தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மக்கள் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும்பொறுப்பைச் சுமந்திருக்கும் நான், உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் வழங்கிடும் ஊக்கத்தாலும் உணர்வுமிக்க ஒத்துழைப்பாலும் ஓய்வு பற்றி நினைக்காமல் களப்பணியே கண்ணான பணியென்று, கடிகாரம் ஓடும்முன் ஓடி, கழகத்தின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடும்பாதை - நெடும்பயணம் இதுதான் தேர்தல் களம் என்பதை அறிவேன். உறுதி குலையாத பயணத்தில் களைப்பு தோன்றாதபடி ஊக்கமும் உத்வேகமும் அளிக்கின்ற வகையில், மார்ச் 1-ஆம் நாள் என்னுடைய பிறந்தநாளில் உங்களிடமிருந்து குவிந்த இதயபூர்வமான வாழ்த்துகள் மனதிற்கு இதமளிக்கின்றன.

இன்று, நேற்றல்ல… இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் பொழுதிலிருந்தே என் பிறந்தநாளைக் கொண்டாட்டமாக மாற்ற வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்து வருகிறேன். பதாகைகளைத் தவிர்த்து, மக்களுக்குப் பயனுள்ள உதவிகளைச் செய்ய வேண்டுமென கழகத் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து வருகிறேன். அதனையேற்று, நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திடும் கழகத்தினரின் கட்டுக்கோப்பான பணிக்குப் பெருமையுடன் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளே என் பிறந்தநாளின் பெரும்பலம். “தந்தை” என்பதைவிட “தலைவர்” என்பதே உங்களைப் போல எனக்கும் பேரனுபவம். அந்த வகையில் தந்தையும் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில், அவரது உணர்வுபூர்வமான வாழ்த்துகளையும், அன்னையார் தயாளு அம்மையாரின் வாழ்த்துகளைப் பெற்று, கழக முன்னோடிகள், குடும்பத்தினர், உறவினர்கள், கழகம் எனும் பெரும் குடும்பத்தின் சொந்தங்களான உடன்பிறப்புகள் ஆகியோரின் அன்பு நிறைந்த வாழ்த்துகளால் என்னை மேலும் ஊக்கப்படுத்திக் கொண்டு, மேலும், மேலும் தொடர்ந்து உழைப்பதற்கு உறுதி கொள்ளும் நாளாகவே பிறந்தநாளைக் கருதுகிறேன்.

தலைவர் அவர்கள் நம்முடன் இல்லாத நிலையிலும், அவர் இல்லையென்ற எண்ணம் சிறிதுமின்றி, இதயமெங்கும் நிறைந்திருக்கிறார்; அவர்தான் இயக்குகிறார்; இன்முகத்துடன் வழிநடத்துகிறார்; இனம் - மொழி ஏற்றத்திற்காக அறிவுறுத்துகிறார்; பண்பட்ட அரசியல் பயிற்சியைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அந்த உணர்வுடன் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும், அவரது இதயத்தை இரவலாகப் பெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்திலும், இருவரையும் ஆளாக்கிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவிடத்திலும், இனமானப் பேராசிரியர் இல்லத்திலும், தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திலும் மரியாதை செலுத்தி, உங்களில் ஒருவனான என்னை ஊக்கப்படுத்திக் கொண்டேன்.

“தமிழக மக்களின் விடியலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியீடு” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஊக்கம் நிறைந்த உணர்வலைகளுடன் கழகத் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்குக் கழக உடன்பிறப்புகளைக் காண்பதற்கு ஆவலாக வந்தபோது, என்னைவிட ஆர்வமாக ஊடகத்தினர் அங்கே திரண்டிருந்தனர். உடன்பிறப்புகளும் ஊடகத்தினரும் அறியும் வகையில், தமிழக மக்கள் அனைவருக்குமான அந்த அறிவிப்புதான் என் பிறந்தநாளின் மிகுந்த மகிழ்ச்சியான தருணமாகும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு ஆயத்தமாகிவிட்ட வாக்காளர்கள், தங்களின் ஒரே நம்பிக்கையான தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணியிடம் மிகுந்த எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கிறார்கள். அதனைக் கருத்தில்கொண்டே, ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற தீர்மானத்துடன் ஊராட்சிகள் தோறும் மக்களைச் சந்திக்கும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தி.மு.கழகம் வெற்றிகரமாக நடத்தியது. ஒரு கோடிக்கும் மேலான மக்கள் அ.தி.மு.க.வை நிராகரிக்கும் தீர்மானத்தை நேரில் வந்து நிறைவேற்றித் தந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களின் குறைகளைத் தீர்த்துவைப்பேன் என்ற உறுதியினை வழங்கி-அதற்கான பொறுப்பினையும் நான் ஏற்றுக்கொண்டு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’எனும் செயல்திட்டத்துடன் ஒவ்வொரு தொகுதி மக்களையும் சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதற்கான ஒப்புகைச் சீட்டையும் வழங்கி, அவர்களின் குறைகளையும் - ஆட்சியின் அவலங்களையும் நேரில் கேட்டறிந்தேன். கழகத்தின் முன்னோடிகளும் தமிழகம் முழுவதும் பயணித்து, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் மக்களை நேரடியாகச் சந்தித்து, உரையாற்றி, அவர்களின் எண்ணங்களைக் கண்டறிந்துள்ளனர். இவையனைத்தையும் முழுமையாகத் தொகுத்து, கவனமாக ஆலோசித்து, செயல்வடிவமாக்கிடும் பணிகள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டன.

பத்தாண்டுகாலமாக தமிழகத்தை இருளில் தள்ளிய அ.தி.மு.க. ஆட்சியிடமிருந்து தமிழகத்தை விடுவித்து, புதிய விடியலை உருவாக்கவும், எதிர்வரும் அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குப் புது வாழ்வு தரும் திட்டங்களை முன்வைக்கும் வகையிலும் இலட்சியப் பிரகடனம் ஒன்று, தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 7 அன்று மாநாடு போல நடக்கவுள்ள சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்படும் என்பதை அறிவாலயத்தில் திரண்டிருந்த ஊடகத்தினரிடம் தெரிவித்தேன்.

அந்தப் பிரகடனத்தின் இரண்டு முக்கிய அம்சங்களில் ஒன்று, தமிழக வளர்ச்சிக்கான ஏழு முக்கிய வழிகாட்டுதலை விளக்குதல். மற்றொன்று, தமிழகத்திற்கான தொலைநோக்குத் திட்ட ஆவணம் வெளியிடுதல். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்தோங்கிய தமிழ்நாட்டைக் கவனமுடன் கட்டமைப்பதற்கான தி.மு.க.வின் மாபெரும் திட்ட அறிக்கையாக இது அமையும். இது கனவு அறிக்கையாக இல்லாமல், தமிழகத்தை மீட்டெடுக்கும் செயலை நிறைவேற்றும் செயல்திட்டமாக்கப்படும் என்ற உறுதியினை வழங்கி, அதற்கான பொறுப்பையும் மகிழ்வுடன் சுமந்திட நான் தயாராக இருக்கிறேன்.

தமிழக மக்களை நேரில் சந்தித்து, கழக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்களுடன் பலகட்டங்களாக நடத்திய செறிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில், பத்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் எட்ட வேண்டிய இலக்கு துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

“தமிழக மக்களின் விடியலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியீடு” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அதனைத் திருச்சிச் சிறப்புக் கூட்டத்தில் வெளியிட்டதும், 20 நாட்களுக்குள் இந்தத் தொலைநோக்கு ஆவணத்தை தி.மு.கழகத் தொண்டர்களும் முன்னணி நிர்வாகிகளும் வீடு வீடாக கொண்டு போய்ச் சேர்த்து, தமிழகத்திலுள்ள இரண்டு கோடிக் குடும்பங்களிடமும் இந்தத் தொலைநோக்குப் பார்வை குறித்து விரிவான பரப்புரைகள் செய்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் தலையாய பணியும் காத்திருக்கிறது.

இந்தப் பணி மட்டுமல்ல, ‘சொன்னதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம்’ என்ற தலைவர் கலைஞரின் வழியில், கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையும் இறுதி வடிவம் பெற்று வருகிறது. இந்தப் பணியை மேற்கொள்வதற்காக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் தமிழகம் முழுவதும் பொதுமக்களை நேரிலும், அதிலும் குறிப்பாக, வணிகர்கள், இளைஞர்கள், பெண்கள், விளிம்புநிலைச் சமூக மக்கள் என அனைத்துத் தரப்பினரைத் தனித்தனியாகவும் சந்தித்து, அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் விரிவாகக் கேட்டறிந்தனர். அவற்றைத் தொகுத்து, அதிலிருந்து மக்களின் குறைகளை தீர்க்கவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகைகளிலும் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மக்களாட்சி எனப்படும் ஜனநாயகத்தின் மாண்பினை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை – 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூறியதைப் போலவே தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும்; தமிழக மக்களின் மனங்களைக் கவரும். கழகத்தின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மார்ச் 11-ம் தேதி வெளியிடவிருக்கிறேன்.

அதற்கு முன்பாக, களத்தில் நிற்கும் ஆர்வத்துடன் கழகத்தினர் ஆயிரக்கணக்கில் விருப்பமனு தந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் சந்திக்கும் வகையில் மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை அதற்கென அமைக்கப்பட்ட குழு சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் களத்தில் இவை இரண்டும் பெரும்பணி மட்டுமல்ல, தி.மு.கழகத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு நாம் நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்புமாகும். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிட, தேர்தல் களத்தில் இமைப்பொழுதும் சோர்ந்திடாமல் பணியாற்ற வேண்டிய கடமை உடன்பிறப்புகளாகிய உங்களுக்கும் இருக்கிறது. உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. சோர்வின்றி உழைத்திடுவதற்கான அருமருந்தாகத்தான் என் பிறந்தநாளில் உங்களிடமிருந்து அன்பு தவழக் கிடைத்த வாழ்த்துகளைக் கருதுகிறேன்.

அறிவாலயத்திலும் இல்லத்திலும் நேரில் வந்து வாழ்த்திய கழக உடன்பிறப்புகள், கழக நிர்வாகிகள், தோழமைக் கட்சித் தலைவர்கள், அலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்த இந்திய ஒன்றியத்தின் மதிப்பிற்குரிய அரசியல் தலைவர்கள், கலையுலகத்தினர், பல்வேறு துறையினர், சமூக வலைதளங்களை வாழ்த்துகளால் நிரப்பிய கழக ஆதரவாளர்கள் - பொதுமக்கள் என எல்லோருடைய உளப்பூர்வமான வாழ்த்துகளால் கூடுதல் உற்சாகத்துடன் உழைப்பினைத் தொடர்கிறேன். அத்தகைய வாழ்த்துகளை வழங்கிய அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே, உங்கள் வாழ்த்துப் பூக்களை தேர்தல் களத்தில் வெற்றிமாலையாகத் தொடுத்து, தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்குவதற்காக உங்களில் ஒருவனான நான் காத்திருக்கிறேன். களைப்பின்றிக் கடமையாற்றுகிறேன்.

மார்ச் 1 எனக்குப் பிறந்தநாள் என்றாலும், தமிழகத்தின் விடியலுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய கழகத்தின் இலட்சியப் பிரகடனத்தை வெளியிடும் மார்ச் 7 நமக்கான சிறந்த நாள். ஏப்ரல் 6-ல் மக்கள் எழுதப்போகும் வெற்றித் தீர்ப்பையும், மே 2 அன்று கழகம் அதனை அதிகாரபூர்வமாகப் பெறப் போவதையும் கட்டியம் கூறும் நாள்.

தி.மு.கழக வரலாற்றில் திருப்புமுனைகள் பலவற்றைத் தந்த தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 7 அன்று திரண்டிடுவோம். தமிழகத்தைப் பத்தாண்டுகளாகப் பிடித்து ஆட்டுகின்ற அ.தி.மு.க எனும் காரிருளை விரட்டி, உதயசூரியக் கதிரொளி பரப்பிடும் பிரகடனத்தை வெளியிடுவோம். தமிழக மக்களின் கைகளில் அதனை ஒப்படைத்து, வெற்றியினை உறுதிப்படுத்திடச் சூளுரைப்போம்!

banner

Related Stories

Related Stories