தி.மு.க

“வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

மக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறது.

“வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதில், “வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட மாநில விவசாயிகள் ஒன்று திரண்டு 23 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகிறோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு விரோதமான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

மக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறது. விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்று தான். இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது தான். தற்போது இந்தியாவே கொதித்து போய் இருக்கிறது. மேலும் தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து உள்ளது.

விவசாயிகள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த சட்டங்கள் இருக்கிறது. எதற்காக இவ்வளவு அவசரம், யாரை பாதுகாக்க இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்? வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் வரையில் போராட்டங்கள் தொடரும். போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. இந்த அலட்சியப்போக்கை கண்டிக்கும் வகையில் தி.மு.க. தோழமை கட்சிகளின் உண்ணாநிலை போராட்டம் நடைபெறுகிறது.” எனக் கூறினார்.

டெல்லி போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு தி.மு.க. உண்ணாநிலை போராட்டத்தில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய விவசாயிகளுக்கு ஆதரவான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உண்ணாநிலை போராட்டத்தில், தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories