தி.மு.க

"மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாடாக மாறிவிட்டது" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை!

தி.மு.கழகத்தின் மூத்த நிர்வாகிகள் ஜி.சுகுமாரன், மாரியய்யா ஆகியோரது திருவுருவப் படங்களை திறந்து வைத்து, புகழஞ்சலி உரையாற்றினார் தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (10-08-2020) மாலை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த மறைந்த ஜி.சுகுமாறன் அவர்களது திருவுருவப் படத்தினையும், இன்று (11-08-2020) காலை, 'கந்தர்வகோட்டையின் கட்டபொம்மன்' என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் புகழப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த மாரியய்யா அவர்களது திருவுருவப் படத்தினையும் திறந்து வைத்து, புகழஞ்சலி உரையாற்றினார்.

ஜி.சுகுமாறன் அவர்களது திருவுருவப் படத்தினை திறந்து வைத்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு :

"காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும் காஞ்சி மாவட்டத்தில் கழகம் வளர்த்த தீரருமான ஜி.சுகுமாறன் அவர்களின் திருவுருவப் படத்தை இன்று உங்கள் முன்னால் திறந்து வைத்துள்ளேன். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றியதன் காரணமாக நம்முடைய சுகுமாறன் அவர்களை நாம் இழந்துள்ளோம்.

காஞ்சிபுரம் என்றால் நினைவுக்கு வருகின்ற முகங்களில், பெயர்களில் ஒன்றாக சுகுமாறன் அவர்கள் இருந்தார்கள்.

எப்போதும் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்கும் சுகுமாறன் அவர்கள் இன்று இல்லை என்பதை நம்புவதற்கு மனம் மறுக்கிறது.

சுகுமாறன் குடும்பம் என்று சொல்வதை விட, கழகக் குடும்பம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

சுகுமாறன் அவர்களது தந்தையார் கங்காதரன் அவர்கள், காஞ்சிபுரத்தில் கழகத்தை விதைத்த தீரமிகு தொண்டர்களில் ஒருவர்.

இரண்டு முறை அய்யம்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்கள். அதிலும் ஒருமுறை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு, மக்கள் செல்வாக்குப் பெற்றவராக இருந்தார்கள். அத்தகைய மக்கள் செல்வாக்கை கழகத்துக்கு பெற்றுத் தருபவராகவும் இருந்தார்கள்.

1973 - ஆம் ஆண்டே முதல்வர் கலைஞர் அவர்களை அய்யம்பேட்டைக்கு அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல் - அவரது கரத்தால் பள்ளிக் கட்டத்தைத் திறக்கவும் வைத்துள்ளார்கள்.

"மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாடாக மாறிவிட்டது" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை!

அந்த அளவுக்கு தலைவர் கலைஞர் மீதும், கழகத்தின் மீதும் பற்றுக் கொண்டவராக பாசம் கொண்டவராக இருந்தவர் கெங்காதரன் அவர்கள். அது மட்டுமல்ல, துணிச்சல் மிக்கவராகவும் இருந்துள்ளார்.

1991 -ஆம் ஆண்டு தேர்தலில் அரசியல் சூழ்ச்சி காரணமாக நாம் தோற்கடிக்கப்பட்டோம். ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருந்த நேரம் அது. பல்வேறு இடங்களில் நம் கழகத் தொண்டர்கள் தாக்கப்பட்டார்கள். கழகத் தொண்டர்களது உடைமைகள் தாக்கப்பட்டன. அப்போது துணிச்சலாக தலைவர் கலைஞர் அவர்களை - ஒரு வார இடைவெளியில் - காஞ்சி மாநகரத்துக்கு அழைத்து வந்தவர் கங்காதரன் அவர்கள். அத்தகைய உழைப்பாளி, போராளி, உண்மைத் தொண்டருக்குப் பிறந்த பிள்ளைதான் சுகுமாறன்.

2005 -ஆம் ஆண்டு நடைபெற்ற காஞ்சிபுரம் இடைத்தேர்தலின் போது, அத்தொகுதியின் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது சுகுமாறன் அவர்களது வீட்டில்தான் தங்கியிருந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது நாள்தோறும் அவரது வீட்டில் ஒரு சகோதரனைப் பார்த்துக் கொள்வதுபோல், உணவு உபசரிப்புகளால் என்னை கவனித்துக் கொண்டார். அவரைத்தான் கொரோனா காவு வாங்கி விட்டது.

அவரது மறைவு என்பது, சுகுமாறன் சுப்பிரமணியன் அவர்களது குடும்பத்துக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு, கழகக் குடும்பங்களுக்கே ஏற்பட்ட இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். சுகுமாறன் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையுமே நான் அறிவேன். ஏனென்றால் அவரது குடும்பத்தில் ஆறு திருமணங்களை நானே நடத்தி வைத்திருக்கிறேன். ஜி. சுகுமாறன் - தேன்மொழி திருமணத்தை இனமானப் பேராசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார்கள். ஜி.பாலச்சந்திரன் - திருமணத்தை புலவர் கோவிந்தன் அவர்கள் நடத்தி வைத்தார்கள். அடுத்து நடந்த - ஜி. முத்து பச்சையப்பன் - கலைவாணி, ஜி.சுந்தரமூர்த்தி - எழிலரசி, எஸ்.கொடிமலர் - தணிகைவேல்முருகன், எஸ்.அண்ணாதுரை - மகாலட்சுமி, எஸ்.அன்புதுரை - சரண்யா, பா.ராஜதுரை - பிரியங்கா - ஆகிய ஆறு திருமணங்களை நடத்தி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். அதனால்தான் அவர்களது குடும்பத்தினர் அனைவரையும் அறிவேன் என்று சொன்னேன்.

சுகுமாறன் அவர்களது குடும்பத்தில் நடந்த அனைத்து நல்ல நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட நான் - இன்றைய தினம் சுகுமாறன் அவர்களது படத்தைத் திறந்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து - அவரது குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

தனது பிள்ளைகளுக்கு அழகு தமிழ்ப் பெயர்களைச் சூட்டியது மட்டுமல்ல, தனது தம்பி பிள்ளைகளுக்கும் அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டியுள்ளார் சுகுமாறன். ஆண் பிள்ளைகள் பெயர்களையும் - பெண் பிள்ளைகள் பெயர்களையும் பார்த்தேன். ஆண் பிள்ளைகளுக்கு அண்ணாதுரை, அன்புதுரை, ராசதுரை, செல்வதுரை, தம்பிதுரை என்று பெயர் வைத்திருக்கிறார். பெண் பிள்ளைகளுக்கு கொடிமலர், குறிஞ்சிமலர், உதயமலர், கனிமலர் என்று பெயர் சூட்டி உள்ளார். குடும்பத்தில் மட்டுமல்ல, பெயரிலும் ஒற்றுமை இருக்க வேண்டும் என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டப் பிரதிநிதி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொருளாளர் - ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்டப் பொருளாளர் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டப் பொருளாளர் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் - எனப் பல்வேறு பொறுப்புகளில் சுகுமாறன் இருந்துள்ளார். பொதுவாக ஒரு மாவட்டச் செயலாளரிடம் நல்ல பெயர் வாங்குவதே கஷ்டம்.

ஆனால் சுகுமாறன் அவர்கள் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டச் செயலாளர்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அதற்குக் காரணம், கழகத்தில் வடக்கு - தெற்கு பேதத்தை சுகுமாறன் பார்க்கவில்லை. அதனால்தான் அவரும் வளர்ந்தார். கட்சியையும் வளர்த்தார்.

சுகுமாறைப் போன்ற பரந்த உள்ளம் கொண்ட தொண்டர்களாக, செயல்வீரர்களாக அனைவரும் மாற வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தவர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இது கொரோனா காலம் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை நாம் இழந்துள்ளோம். இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். 'மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்' என்ற நிலையில்தான் இன்றைக்கு மத்திய மாநில அரசுகள் செயல்படுகின்றன.

கொரோனா வெகுவாகப் பரவி வருகிறது, மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த நாட்டின் பிரதமரும் மறந்துவிட்டார். தமிழக முதலமைச்சரும் மறந்துவிட்டார். அவர்கள் வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள். ஆனால் மக்கள்தான் கொரோனாவோடு யுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க தங்களது உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அதுதான் உண்மை. மருத்துவர்களின் மரணங்களே மறைக்கப்படுகின்றன. ஐ.எம்.ஆர். அறிக்கையையே, இந்த நாட்டின் அமைச்சர் தவறான தகவல் என்கிறார். மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாடாக இது மாறிவிட்டது. அதேபோல் இறப்புகள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன. சும்மா குத்துமதிப்பாக எண்ணிக்கை சொல்கிறார்களே தவிர, இவை உண்மையான எண்ணிக்கைகள் அல்ல. மொத்தத்தில் தனது தவறுகளை மறைக்கும் அரசாக - ஊழல்களை மறைக்கும் அரசாக - மக்களின் மரணங்களை மறைக்கும் அரசாக - அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. கொரோனாவோடு சேர்ந்து இந்த ஆட்சியும் எப்போது முடியும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அனைவரும் உடல்நலனைப் பேணிக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே அனைவரும் உங்களது ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். மூத்த நிர்வாகிகள் இன்னும் கவனமாக இருங்கள்! வேறு உடல்நலக் குறைபாடு இருப்பவர்கள் மிகமிக எச்சரிக்கையாக இருங்கள்!

உடல்நலம் - கழகப் பணி - மக்கள் சேவை ஆகிய மூன்றையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த காணொலிக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன். மறைந்த சுகுமாறன் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலட்சோப லட்சம் தொண்டர்களைக் கொண்ட கழகம், உங்களுக்கு எல்லா வகையிலும் துணைநிற்கும் என்று உறுதியளித்து விடை பெறுகிறேன்.

"மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாடாக மாறிவிட்டது" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை!

மாரியய்யா அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

" 'கந்தர்வகோட்டையின் கட்டபொம்மன்' என்று தலைவர் கலைஞர் அவர்களால் போற்றிப் புகழப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரியய்யா அவர்களின் திருவுருவப் படத்தினை இன்றைய தினம் நான் திறந்து வைத்துள்ளேன்.

இது கொரோனா காலம் என்பதால் கந்தர்வகோட்டை வந்து நான் திறந்து வைத்திருக்க வேண்டிய திருவுருவப் படத்தைக் காணொலிக் காட்சி மூலமாகச் சென்னையில் இருந்து திறந்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

கொரோனா காலம் மட்டுமல்ல; எத்தகைய சோதனைக் காலமாக இருந்தாலும் கழகத்துக்காகப் பாடுபட்ட - உழைத்த - தொண்டு செய்த தளகர்த்தர்களைக் கழகம் எந்நாளும் மறக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தப் படத்திறப்பு விழா நடந்து கொண்டு இருக்கிறது.

சட்டமன்றமாக இருந்தாலும் - கழகத்தின் பொதுக்குழுவாக இருந்தாலும் - கழகப் பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் - பச்சைச் சால்வை அணிந்து கம்பீரமாக வருவார் மாரியய்யா அவர்கள்.

அவரது கம்பீரத்தைப் பார்த்துத்தான் 'கந்தர்வகோட்டையின் கட்டபொம்மன்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அழைத்தார்கள். அவரும் அப்படித்தான் வாழ்ந்து வந்தார்.

1978-ஆம் ஆண்டு கோமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் தான் அவரது திருமணம் நடைபெற்றது. அத்தகைய பெருமையைப் பெற்றவர் மாரியய்யா.

கழகத்தில் இருந்து மாரியய்யாவைப் பிரிக்க முயற்சிகள் நடந்தபோதும் அவர் மாறவில்லை. அதனால் தான், அவரது இல்லத் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசும்போது, 'இவர் மாரியய்யா மட்டுமல்ல மாறாத அய்யா' என்று குறிப்பிட்டேன்.

கழகத்தில் இருந்து மாறாதவர் மட்டுமல்ல; மனதால் கூட துரோகச் சிந்தனை இல்லாதவராக மாரியய்யா அவர்கள் இருந்தார்.

கழகத்தில் மட்டுமல்ல; கழகத்தின் கொள்கையிலும் மாறாத பற்றுக் கொண்டவராகவும் மாரியய்யா அவர்கள் இருந்தார்.

அத்தகைய கொள்கை வீரரை நாம் இழந்திருக்கிறோம்.

"மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாடாக மாறிவிட்டது" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை!

மிக இளம் வயதிலேயே திராவிட இயக்கக் கொள்கைகளின் மீது ஈடுபாடு உள்ளவராக மாரியய்யா அவர்கள் இருந்துள்ளார்.

அவர் பள்ளிப் பருவத்திலேயே திராவிடர் கழக மாணவர் அமைப்பில் அங்கம் வகித்தவர். அதன்பிறகு சுமார் 18 வயதில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கோமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக 1965-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாரியய்யா, சுமார் 15 ஆண்டு காலம் அந்தப் பதவியில் இருந்திருக்கிறார் என்பதே அவருக்கு அந்த வட்டாரத்தில் எத்தகைய மக்கள் செல்வாக்கு இருந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கந்தர்வகோட்டை வட்ட கூட்டுறவு சங்கத் தலைவராக இருமுறை தேர்வு செய்யப்பட்டார்.

விராலிப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இத்தகைய பொதுப்பதவிகளில் இருக்கும்போது அவர் ஆற்றிய மக்கள் சேவை காரணமாக கழகத்துக்குப் பெருமை சேர்த்தவர் மாரியய்யா அவர்கள்.

அதேபோல் கழகத்திலும் படிப்படியாக பொறுப்புகளை அடைந்துள்ளார். ஒரத்தநாடு வட்ட கழகத்தில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் உதயமான நாளில் இருந்து கந்தர்வகோட்டை ஒன்றிய கழக செயலாளராக தொடர்ந்து 40 ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார்.

நமது இயக்கத்தின் 13-வது உட்கட்சி தேர்தலில் தலைமைச் செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.

14-வது உட்கட்சி தேர்தலில் மாவட்ட அவைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

1997-ஆம் ஆண்டு அண்ணன் பெரியண்ணன் அவர்கள் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது. அதில் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு மாரியய்யா வெற்றி பெற்றார். நான்கு ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். தனது தொகுதிக்கு வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் போராடி வாதாடிப் பெறுபவராக மாரியய்யா செயல்பட்டு வந்தார்.

2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவராகப் பொறுப்பு வகித்தார். அந்த ஐந்தாண்டுக் காலமும் மக்கள் சேவை ஆற்றுவதில் சளைக்காத போராளியாக இருந்தார்.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம், சட்ட நகல் எரிப்புப் போராட்டம், ஈழத் தமிழர்க்கு ஆதரவான போராட்டம் போன்ற கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றார்.

இப்படிப்பட்ட சளைக்காத போராளியாக இருந்த மாரியய்யா கடந்த ஜுலை 25-ஆம் நாள் மறைவு எய்திய செய்தி கிடைத்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன்!

கழகத்தால் தனக்கு என்ன லாபம் என்று கருதாமல், தன்னால் இயக்கத்துக்கு என்ன லாபம் என்று கருதிச் செயல்பட்ட தொண்டர்களில் ஒருவர் மாரியய்யா.

இவரைப் போன்ற ஏராளமான மாரியய்யாக்களால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் கோட்டை கட்டப்பட்டது.

மாரியய்யாவைப் போன்றவர்கள் ஏராளமாக புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருப்பதால் தான் கழக கோட்டையானது என்றைக்கும் புதுக்கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது.

இத்தகைய மாரியய்யா போன்றவர்களால் தான் நான் உற்சாகம் அடைகிறேன். அவரது இல்லத்தில் நடந்த இரண்டு திருமணங்களை நடத்தி வைக்க நான் சென்றபோதும் என்னை உற்சாகமாக வரவேற்று அன்பாக நடத்தியதை நினைக்கும் போது எத்தகைய ஆருயிர்ச் சகோதரரை நான் இழந்துள்ளேன் என்ற வருத்தம் எனக்கு ஏற்படுகிறது.

மாரியய்யாவின் வாழ்க்கை என்பது கழகத்தவர் அனைவருக்கும் ஒரு வகையான பாடம்.

திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.

துரோகச் சிந்தனை கொஞ்சமும் இல்லாத மனிதராகக் கழகத்தில் இருந்தார்.

கழகப் பொறுப்புகளை வகித்துத் திறம்பட பணியாற்றினார்.

பொதுப் பொறுப்புகளுக்கு வந்தபோது மக்கள் போற்றும் வகையில் செயல்பட்டார்.

கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்தார். - இப்படி 100-க்கு 100 மதிப்பெண் வாங்கும் மனிதராக மாரியய்யா இருந்தார்.

அத்தகைய மனிதரை முன்னோடியாகக் கொண்டு நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கொரோனா காலத்திலும் மக்கள் பணியாற்றுவதில் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மற்ற மாவட்டங்களைப் போலவே புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகத்தினர் அனைவரும் செயல்பட்டீர்கள் என்பதை நான் அறிவேன்.

இந்தச் செயல்வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அந்தப் பெரும்பணிக்கு அனைவரும் தயாராக வேண்டும்.

மக்கள் பிரச்சினைகள் அனைத்தையும் அடையாளம் கண்டு அவர்களுக்காகக் குரல் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுதான் மாரியய்யாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமைய முடியும்.

கொரோனா காலம் என்பதால் அனைவரும் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

மூத்த தோழர்கள், அதிக கவனமாக இருங்கள்.

வேறு உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மேலும் கவனமாக இருங்கள். கழகத் தலைவர் என்கிற முறையில் நான் இடும் முதல் கட்டளையாக இதுதான் இருக்கும்.

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், கழகம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மாரியய்யா அவர்களது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டக் கழகத்தவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories