தி.மு.க

“மின்கட்டணம் என மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி அமைச்சருக்கு”-ஆதாரங்களுடன் செந்தில்பாலாஜி பதிலடி!

மின் கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பையும் பணத்தையும் உறிஞ்சும் அட்டைப்பூச்சி அமைச்சர் தங்கமணிக்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி.

“மின்கட்டணம் என மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி அமைச்சருக்கு”-ஆதாரங்களுடன் செந்தில்பாலாஜி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மின் கட்டணக் கொள்ளை குறித்து தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதிலளிக்காமல் பொய்களை வாரியிறைத்திருந்தார் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி. இந்நிலையில், மின் கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பையும் பணத்தையும் உறிஞ்சும் அட்டைப்பூச்சி அமைச்சருக்கு ஆதாரங்களுடன் பதில் அறிக்கை கொடுத்துள்ளார் செந்தில்பாலாஜி.

அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு :

"கொரோனா தொடங்கியதிலிருந்து சென்னை முழுக்கவும் பம்பரமாய் சுற்றி மும்முரமாய் சுழன்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியவர், தமிழக முழுவதும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க வைத்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் மக்களுக்கு உதவிக் கொண்டிருந்த போது ‘கொரோனாவே தமிழ்நாட்டுக்கு வராது’ என்று சட்டமன்றத்திலேயே எள்ளி நகையாடிய முதலமைச்சர், 25.03.2020 அன்று சட்டமன்றத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் கொரோனா வரும் என்றும், 16.04.2020 அன்று மூன்று நாட்களில் கொரோனா மறைந்து விடும் என்றும், 08.06.2020 அன்று தமிழகத்தில் சமூக பரவல் வராது என்றும், 20.06.2020 அன்று கொரோனா எப்பொழுது போகும் என்று இறைவனுக்குதான் தெரியும் என்று தன் இயலாமையால் கை விரித்தது, கமிஷன் மயக்கம் கண்ணை மறைத்ததனால் உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்களுக்கு எப்பொழுதும் நினைவில் இருக்கும்.

மின் கட்டணம் என்ற பெயரில் மக்கள் பணத்தையும், டாஸ்மாக் என்ற பெயரில் மனித உயிர்களையும் உறிஞ்சும் குமாரபாளையத்து ‘அட்டைப்பூச்சி தங்கமணி’, கேள்விகளைக் கேட்ட எனக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் கழகத் தலைவர் தளபதியைச் சீண்டுகிறார். எங்கள் தலைவரைப் பற்றிப் பேசுகிற தகுதியும் யோக்கியதையும் உமக்கு இருக்கிறதா?

வடநாட்டு ராஜாக்களின் அடிமைகளாக, அவர்கள் வீசும் ரொட்டித்துண்டுகளுக்காக வாலாட்டும் சுயமரியாதையற்றவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தையும், விழுப்புரத்தில் சிறுமியை எரித்துக் கொன்றதையும் மறந்துவிட்டுப் பேசலாமா? கோடிக்கணக்கான தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்படும் மின்கட்டணப் பிரச்சினையில் கேள்வி கேட்டால் மடைமாற்றம் செய்வதாகச் சொல்வதுதான் அமைச்சருக்கு அழகா?

“மின்கட்டணம் என மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி அமைச்சருக்கு”-ஆதாரங்களுடன் செந்தில்பாலாஜி பதிலடி!

கோயம்பேட்டுக்குள் இருந்த கொரோனாவை சென்னைக்குள் பரப்பி, சென்னைக்குள் இருந்த கொரோனாவை தமிழகம் முழுக்கப் பரப்பி, ஒவ்வொரு நாளும் நான்காயிரம் புதிய நோய்த் தொற்று, சராசரியாக தினசரி அறுபதுக்கும் அதிகமான இறப்பு என்று தமிழகத்தையும் அரசு இயந்திரத்தையும் சொப்பணசுந்தரி காரை போல எதில் இயங்குகிறதென யாருக்குமே புரியாமல் ‘தமிழகத்தில் சமூகப்பரவல் இல்லை’ என்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, கிடைத்ததைச் சுருட்டி மூட்டைகளைக் கட்டிக் கொண்டிருக்கும் அ.தி.மு.கவின் உளறுவாய் மருத்துவப்புலிகளும், விஞ்ஞானிகளும் தி.மு.கவை பார்த்து மடைமாற்றம் செய்வதாகச் சொல்வது வெட்கமாக இல்லையா? முதலமைச்சருக்கு அடங்காத அமைச்சர்கள், தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்று தலைமையே திண்டாட்டம்; கீழே இருப்பவர்களுக்கு கலெக்‌ஷன் கொண்டாட்டம் என்று தலையும் புரியாமல், வாலும் புரியாமல் தினசரி ஒவ்வொரு பிரச்சினையால் தமிழகத்தை திணறடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.கவுக்குத்தான் மடைமாற்றம் செய்ய ஆயிரம் காரணங்கள் தேவைப்படுகிறது.

சாத்தான்குளத்தில் தந்தையையும் மகனையும் காவல்துறையை ஏவிக் கொன்றுவிட்டு, பத்தாம்பசலியாய் ‘உடல் நலக்குறைவால்’ ‘மூச்சுத்திணறலால்’ இறந்தார்கள் என்று மொத்தப் பிரச்சினையையும் மடைமாற்றம் செய்ய முயன்றது யார்? ‘லாக்கப் மரணமே இல்லை’ என நிறுவ முயன்றது யார்? கொரோனா, சாத்தான்குளம் என நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், வெள்ளையும் சுள்ளையுமாக கோவைக்கும் திருச்சிக்கும், டாம்பீகத்துடன் பயணம் செய்து இடையில் காரை விட்டு வாய் நிறையப் பற்களுடன் இறங்கி கேமராவுக்கு ‘போஸ்’ கொடுத்து விளையாட்டுக் காட்டி மடை மாற்றம் செய்ய முயன்றது யார்?

கொரோனா மாநிலம் முழுவது பரவிக் கொண்டிருக்கும்போது, பொறுப்பான எதிர்க்கட்சியாய் தி.மு.க ஊரில் இருப்பவர்களுக்கெல்லாம் உணவு தரும்போது, நீங்கள் ஊர்களின் பெயர்களை மாற்றிக்கொண்டும், கண்டபடி கிறுக்கி வைத்துக்கொண்டும், திரும்ப அதை இரண்டே நாளில் வாபஸ் பெற்று கொரொனா பிரச்சினையை மடை மாற்ற முட்டாள்தனமாய் முயற்சி செய்தீர்கள். உங்களின் தகிடுதத்தங்களை, குளறுபடிகளை ஒவ்வொன்றாக, வரிசையாக பட்டியலிட முடியும்.

ம.தி.மு.கவில் நான் இருந்தேன் என்கிறார் ‘பாட்டில் பிசினஸ் பாடிசோடா'. ‘விடிந்தால் போச்சு’ என நீங்கள் விட்டாந்தியாக பேசும் உங்கள் பேச்சையே, ‘தெளிவான’ பிறகு நீங்களே நிரூபிக்க தயாரா? அப்படி ம.தி.மு.கவில் நான் இருந்தேன் என்று நிரூபிக்க முடியவில்லை என்றால் என்ன செய்யப் போகிறீர்கள்? மக்கள் மன்றத்தில் அவமானப்படுகிறவர்கள் நீதிமன்றத்திலும் அவமானப்பட நேரிடும். என் மீது பதியப்படும் வழக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார் யோக்கியசிகாமணி ரொக்கமணி தங்கமணி. என் மீது வழக்குகள் பதியப்படுகின்றன. காவலர்களால் பதியப்படும் வழக்குகளில் எத்தனை நேர்மையற்ற நெஞ்சங்களின் வஞ்சமும், காழ்ப்புணர்வும், அரசியல் அதிகாரமும் இருக்கின்றன என்பதை கரூர் மாவட்ட மக்கள் அறிவார்கள். இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் நேர்மையும், நெஞ்சுரமும் என்னிடமுண்டு. ஆனால் விசாரணைகளுக்கு பயந்து நீதிமன்றத்தை நாடும் உங்கள் முதலமைச்சரைப் பார்த்து அதே கேள்வியைக் கேளுங்கள். அடிக்கும் கொள்ளைகளுக்காக அடுத்த வருடம் இந்நேரம் ஜெயில் வாசலை மிதிக்கப்போகும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். கிடைத்தால் சுருட்டும் நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தில் கொஞ்சம் ஊதுவத்தி சுருட்டி பழகுங்கள்.

அரிசி கொடுக்கிறோம் என்று ரேஷன் அரிசியை பாலிஷ் போட்டும், சமையல் எண்ணெய் என்று பாமாயிலையும், கோதுமை மாவு என்ற பெயரில் மைதா மாவையும் தந்ததை கிண்டல் செய்து சிரித்த மக்கள் என்றும் மறக்கப்போவதில்லை. ஆதலால், நீங்கள் கண்டதையும் உளறிக்கொண்டிருக்காமல் எதிர்க்கட்சியினர் தரவுகளுடன் விமர்சனத்தை முன்வைத்தால் அதற்கு நாகரிகமாக பதிலைச்சொல்ல பழகுங்கள். தமிழக மக்கள் உங்கள் செயல்களை கண்டு காறித்துப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியுமா? தெரியாதா?

அமெரிக்காவின் நாசா முதல் ஈஷா வரைக்கும் அமாவாசையின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் அறிவர். என்னை அமாவாசையென்று அடைமொழி வைத்து அறிக்கை விட்ட அட்டைப்பூச்சி அவர்களுக்கு, அமாவாசை என்பது இந்துக்களின் புனித நாளாகும், அனைத்து இறை வழிபாட்டிற்கும், முன்னோர்கள் வழிபாட்டிற்கும் சிறந்த நாளாக புனித நூல்கள் கூறுகின்றன. இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் சகாதேவன் வெற்றிக்கான நாளாக அமாவாசையையே குறிப்பிட்டுள்ளார். அறிவியல்படி அமாவாசைக்கு பிறகு வரும் ஒவ்வொரு நாளும் சந்திரன் வளர்ச்சியை கூறுகிறது. அதன்படி அமாவாசை என்பது புனிதமானதாகவும் வெற்றிக்கானதாகவும் வளர்ச்சிக்கானதாகவும் உள்ளபடியால் என்னை புனிதமானவன், வெற்றியானவன், வளர்ச்சியானவன் என்று மறைமுகமாக வாழ்த்தியதற்கு நன்றி.

மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்டத்தைச் சார்ந்த குடும்பம் ஒன்றினை ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றுப் பதமாக’ சுட்டிக் காட்டியிருந்தேன். மின்சாரக் கட்டணம் எப்பொழுதைக் காட்டிலும் அதிகம் என பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கதறுவதையும், கணக்கீட்டு முறைகளில் நடைபெற்றிருக்கும் தவறுகளையும், மின் கட்டணம் கட்டுவதற்கு வருமானமில்லை, அதனால் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று வருந்தும் ஆயிரக்கணக்கான தொழில் முனைவோரையும் ஆதாரத்துடன் அழைத்து முன்னால் நிறுத்த முடியும். அவர்களுக்காக குரல் எழுப்பினால் ஜன்னி கண்டவரைப் போல பிதற்றுகிறார் சாராய அமைச்சர் தங்கமணி. மாஸ்க் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், வரைமுறையற்ற மின் கட்டணத்தால் மக்கள் படும் இன்னல்களை கரூர் மாவட்டத்தில் கூட்டிச்சென்று காட்ட விரும்புகிறேன், உண்மையை மட்டுமே பேசும் அமைச்சர் ஒப்புக்கொண்டு வர தயாரா?

“மின்கட்டணம் என மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி அமைச்சருக்கு”-ஆதாரங்களுடன் செந்தில்பாலாஜி பதிலடி!

கரூர் மாவட்டத்தில் டிசம்பர் மாத மின் கட்டணமாய் ரூபாய் 270/- செலுத்திய எளிய குடும்பம், ஜனவரி, பிப்ரவரி மாதம் வெறும் 80 யூனிட் மட்டுமே பயன்படுத்தி, கட்டணம் ஏதும் வராத அளவிற்கு சிக்கனமாய் பயன்படுத்திய குடும்பத்திற்கும் இந்த மாதம் பில் தொகையாக ரூபாய் 2,030/- வந்திருக்கிறது. கரூரில் சிறுகுறு தொழில் நிறுவனம் ஒன்று, ஜனவரி, பிப்ரவரி மாதம், மொத்தமாக 59 நாட்கள் செயல்பட்ட நிலையில் மின் கட்டணமாக மார்ச் மாதம் செலுத்திய தொகை 22,101/- ஆனால், மார்ச், ஏப்ரல் மாதங்களில், இந்த தொழில் நிறுவனம், வெறும் 20 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. 40 நாட்கள் லாக்டவுனில் செயல்படாத நிலையில், மே மாதம் வந்த பில் தொகை 32,530/- ஆகும். இந்த அரசு மட்டும், பெட்டைக்கோழி இல்லாமல் முட்டை எடுப்பது எப்படி?

அன்றாடங்காய்ச்சிகள் முதல் ஆயிரக்கணக்கான யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் சிறு, குறு தொழிற்சாலைகள் வரை, இப்படி லட்சக்கணக்கானவர்களுக்கு எவ்வளவு வந்திருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். ‘கலெக்‌ஷனில்’ மட்டுமே குறியாக இருக்கும் அமைச்சர் தங்கமணி மின்வாரியக் கட்டணத்தில் இருக்கும் படிமுறையை (Slab) முறைப்படி கணக்கிட்டு இருந்திருந்தால் மின் கட்டணம் ஏழை எளிய மக்களுக்கு வெகுவாக குறைந்திருக்கும். அமைச்சர் அட்டைப்பூச்சி சொன்னது போல ‘அரிசியில் ஒரு கல் இருந்தால் தூக்கி எறிந்துவிடலாம்’ ஆனால் அரிசி என்ற பெயரில் முழுவதுமே கல்லாக கிடந்தால் என்ன செய்வது? எங்கள் மாவட்டமான கரூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். அதை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து வந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார் அமைச்சர். அறிக்கைகள் தருவதில் காட்டும் வேகத்தை, முறையற்ற மின்கட்டணத்தால் மக்கள் படும் அவலத்தை களைய காட்டலாம் அமைச்சர் அட்டைப்பூச்சி.

நாளொன்றுக்கு ஆறு லட்சம் பேருக்கு உணவு வழங்கியதாக சொல்லிய அட்டைப்பூச்சி அமைச்சர், இன்னொன்றும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சென்னையில், கொரோனா சிகிச்சைக்காக, தனியார் உணவகங்களில் நாளொன்றுக்கு 60,000 உணவு பொட்டலங்களை வாங்குகிறது அரசு. ஒரு உணவு பொட்டலத்துக்கு 140/- ரூபாயென விலை பேசி, ரூபாய் 260/- என பில் போடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் 60,000 x 120/- என மொத்தம் 72 லட்ச ரூபாய் கட்டிங் அடிக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 72 லட்சம் என்றால் 30 நாட்களுக்கு மொத்தமாக 21 கோடியே 60 லட்ச ரூபாய் மக்கள் பணம் கொரோனா என்ற பெயரில் கொள்ளைபோகிறது.

தனிமனித தாக்குதலை விட்டுவிட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு கொஞ்சமாவது நேர்மையாய் பணிபுரியுங்கள். பொறுப்பாகவும் பணியாற்றாமல், பொறுப்பை உணர்ந்தும் பணியாற்றாமல், பிரஸ் மீட் என்ற பெயரில் போட்டோக்களுக்கு மட்டும் பற்களை காட்டி போஸ் தரும் உங்களிடம் நாகரீகம் கருதி, தலைமையின் சொற்களுக்கு கட்டுப்பட்டு, கேட்க வேண்டியதை மட்டுமே கேட்கிறேன். தனிமனித தாக்குதலை விட்டுவிட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு கொஞ்சமாவது நேர்மையாய் பணிபுரியுங்கள். பதில் சொல்லுங்கள் ‘மாண்புமிகு’ அமைச்சரே! கடந்த நூறு நாட்களாக முடங்கிக் கிடக்கும் தொழிலுக்கு என்ன செய்தீர்கள் நீங்கள்? ஊரடங்கு, ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று திட்டமில்லாமல் திட்டமென்ற பெயரில் செய்த குழப்பங்களால், குளறுபடிகளால் கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற தொழில்நகரங்களே பிழைக்க வழி தெரியாமல் மூச்சுத் திணறுகின்றனவே, அதற்கு என்ன வழிவகைகளை வைத்திருக்கிறீர்கள்? இருக்கும் பத்து மாதங்களில் இருப்பதையெல்லாம் சுரண்டிக் கொழிப்பதைத் தவிர எதை உருப்படியாகச் செய்திருக்கிறீர்கள்? சிறு, குறு தொழில் முனைவோர் மீண்டெழ என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது இந்த அரசாங்கம்? கடன் வாங்கி மின் கட்டணம் கட்டியிருக்கும் வருமானமில்லாத தொழில் முனைவோருக்கு என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறீர்கள்? கட்டணத்தைச் செலுத்த கால அவகாசமாவது கொடுங்கள் என்று கண்ணீரோடு நிற்கும் மக்களை பற்றி சிறிதாவது சிந்தியுங்கள். அடிமைகள் அரசால், ஏழைகள் விடும் கண்ணீரை துடைக்கும் முதல்வராக, இன்னமும் பத்து மாதங்களில் மாண்புமிகு தளபதி அவர்கள் பதவியேற்பார். மக்கள் நலன் காப்பார்.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories