தி.மு.க

“இனமானப் பேராசிரியர் எனும் தி.மு.கழகத்தின் பேராசான்” : திராவிடக் கருவூலத்தின் பொதுவாழ்வுப் பயணம்!

முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழனாகவும், தமிழக அரசியலின் முதுபெரும் அரசியல் தலைவருமாக விளங்கிய பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகனின் பொதுவாழ்வுப் பயணம் குறித்த தொகுப்பு.

“இனமானப் பேராசிரியர் எனும் தி.மு.கழகத்தின் பேராசான்” : திராவிடக் கருவூலத்தின் பொதுவாழ்வுப் பயணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் கல்யாண சுந்தரம் - சொர்ணம் இணையரின் மூத்த மகனாக 1922ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பிறந்தவர் இராமையா. திருவாரூரில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், இன்டர்மீடியேட்டில் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களை பயின்றார். 1939ம் ஆண்டு அண்ணாமலை பலகலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர், 1944ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராக பணியில் சேர்ந்தார். முன்னதாக, 1942ம் ஆண்டு மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் இராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.

துணைப் பேராசிரியராக பணியாற்றிய போதே, நீதிக்கட்சி மாநாடுகளில் பங்கேற்று ஊர்தோறும் திராவிடக் கொள்கைகளை எடுத்துரைத்த வண்ணம் இருந்தார். 1943ம் ஆண்டு சிந்து மாநில முதலமைச்சர் சிக்கந்தர் ஹயத்கான் நினைவுக் கூட்டத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் பங்கேற்று சொற்பொழிவாற்றினார் பேராசிரியர்.

“இனமானப் பேராசிரியர் எனும் தி.மு.கழகத்தின் பேராசான்” : திராவிடக் கருவூலத்தின் பொதுவாழ்வுப் பயணம்!

அதன் பின்னர், 1944ல், திருவாரூரில் நடந்த தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தில் பேராசிரியர் அன்பழகனை அழைத்து தலைவர் கலைஞர் மேடையில் பேசச் செய்தார். 1945ல் பேராசிரியர் அன்பழகனுக்கும், - வெற்றிச்செல்வி அம்மையாருக்கும் தந்தை பெரியார் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

1948ம் ஆண்டு புதுவாழ்வு இதழின் ஆசிரியரானார் பேராசிரியர். பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரது பாராட்டுகளை பெற்ற பேராசிரியர், 1949, செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட போது, அம்மாநாட்டில் உரையாற்றினார் பேராசிரியர்.

இதைத் தொடர்ந்து 1951ம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற தி.மு.கவின் மாநாட்டில் திராவிட இயக்கக் கொள்கைகளை முழங்கினார் பேராசிரியர். பல்வேறு மாநாடுகளில் பொதுக்கூட்டங்களிலும் ஆணித்தரமாக திராவிடக் கொள்கைகளை எடுத்துரைத்தார்.

1957ம் ஆண்டு முதன் முதலாக தி.மு.க தேர்தலில் களமிறங்கியபோது எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.

1959ல் தி.மு.கவின் தொழிற்சங்க செயலாளராக பொறுப்பேற்ற பேராசிரியர் 1961 வரை அப்பணியில் திறம்பட பணியாற்றினார். அதன் பிறகு, 1962ல் செங்கல்பட்டு ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பேராசிரியர்.

அதனையடுத்து, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 1964ம் ஆண்டில் 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார். 1967ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வானார். 1968 லண்டன் காமன்வெல்த் மாநாட்டில் தி.மு.க. சார்பில் பங்கேற்க மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

“இனமானப் பேராசிரியர் எனும் தி.மு.கழகத்தின் பேராசான்” : திராவிடக் கருவூலத்தின் பொதுவாழ்வுப் பயணம்!

1971 மற்றும் 1977ம் ஆண்டுகளில் சென்னை புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியில் எம்.எல்.ஏவானார். 1971ல், தி.மு.க ஆட்சியின் போது கலைஞர் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர், 1978ம் ஆண்டு ஜூன் 18 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் சுமார் 42 ஆண்டுகளாக தி.மு.க பொதுச்செயலாளராக பேராசிரியர் பெருந்தகை பணியாற்றி வந்தார்.

ஈழத் தமிழர்களுக்காக 1983ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞருடன் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

“இனமானப் பேராசிரியர் எனும் தி.மு.கழகத்தின் பேராசான்” : திராவிடக் கருவூலத்தின் பொதுவாழ்வுப் பயணம்!

அதற்கடுத்து 1984ல் நடந்த தேர்தலில் பூங்காநகர் தொகுதியிலும், 1989ல் நடந்த தேர்தலில் அண்ணாநகர் தொகுதியிலும் வெற்றி பெற்ற பேராசிரியர், 13 ஆண்டு காலம் கழித்து தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த போது, கலைஞரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார். அந்த ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பேராசிரியருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

1996, 2001, 2006 என தொடர்ந்து வந்த தேர்தலில் சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேராசிரியர் கலைஞரின் அமைச்சரவையில் கல்வி மற்றும் நிதியமைச்சராக பதவி வகித்தார்.

1957ம் ஆண்டு முதல் தி.மு.கவின் எம்.எல்.ஏவாக 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர், 2016ல் வந்த சட்டமன்றத் தேர்தலின் போது வயது முதிர்வின் காரணத்தால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொண்டார்.

2017ம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் உடல் நலிவுற்றிருந்த போது, ஜனவரி 4ம் தேதி நடந்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், தி.மு.கவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தார் பேராசிரியர். 2018ம் ஆண்டு தலைவர் கலைஞர் மறைந்த பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கழகத் தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தவர் பேராசிரியர் பெருந்தகை.

தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய பேராசிரியர், எழுத்தாளராகப் பல சமூக கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். அழகுராணி, இன-மொழி வாழ்வுரிமைப் போர், தமிழர் திருமணமும் இனமானமும், தமிழினக் காவலர் கலைஞர், தமிழ்க்கடல் என பலபத்து நூல்களை எழுதியுள்ளார் பேராசிரியர் பெருந்தகை.

banner

Related Stories

Related Stories