தமிழ்நாடு

"முப்பாலூட்டிய பேராசிரியப் பெரியப்பா...!" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!

“அப்பா மறைந்தபோது, பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்.இன்று பெரியப்பாவும் மறையும்போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"முப்பாலூட்டிய பேராசிரியப் பெரியப்பா...!" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் காலமானார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியரின் இல்லத்தில் பேராசிரியர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடல் பின்வருமாறு :

“திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது.

சங்கப் பலகை சரிந்துவிட்டது!

இனமான இமயம் உடைந்துவிட்டது.

எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்!

என்ன சொல்லித் தேற்றுவது?

எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை?

பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்!

முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்!

எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்!

என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது?

தலைவர் கலைஞர் அவர்களோ என்னை வளர்த்தார்!

பேராசிரியப் பெருந்தகையோ என்னை வார்ப்பித்தார்!

எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர்.

எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்.

இந்த நான்கும் தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது.

'எனக்கு அக்காள் உண்டு. அண்ணன் இல்லை. பேராசிரியர் தான் என் அண்ணன்' என்றார் தலைவர் கலைஞர்!

எனக்கும் அத்தை உண்டு. பெரியப்பா இல்லை. பேராசிரியப் பெருந்தகையையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன்.

அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்லபெயர் வாங்குவதுதான் சிரமம்.

ஆனால் நானோ, பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன்.

அவரே என்னை முதலில்,

" கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர்'' என்று அறிவித்தவர்.

எனது வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைகிறது!

அப்பா மறைந்தபோது,

பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்.

இன்று பெரியப்பாவும் மறையும் போது

என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!

பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.

இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்?

இனி யாரிடம் பாராட்டுப் பெறுவேன்?

என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!

பேராசிரியப் பெருந்தகையே!

நீங்கள் ஊட்டிய

இனப்பால் - மொழிப்பால் - கழகப்பால் -

இம் முப்பால் இருக்கிறது.

அப்பால் வேறு என்ன வேண்டும்?!

உங்களது அறிவொளியில்

எங்கள் பயணம் தொடரும்

பேராசிரியப் பெருந்தகையே!”

- கண்ணீருடன் மு.க.ஸ்டாலின்

banner

Related Stories

Related Stories