தி.மு.க

“இன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்துவிடக்கூடாது” - சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி உருக்கம்!

பள்ளிக்கரணையில் அ.தி.மு.க பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

“இன்னொரு சுபஸ்ரீயை  நாம் இழந்துவிடக்கூடாது” - சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் செப்டம்பர் 12ம் தேதி அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மகனின் திருமணத்துக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, தி.மு.க சார்பில் இனிமேல் பேனர்கள் வைக்கப்படமாட்டாது என நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற இன்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு சென்றார். சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அவர், சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாய் கீதாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மக்ளுக்கு இடையூறாக பேனர் வைக்கமாட்டோம் என நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கட்அவுட், பேனர்கள் வைக்கமாட்டோம் என உறுதி அளித்துள்ளோம். இதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு சுபஸ்ரீயை இதுபோல் நாம் இழந்துவிடக்கூடாது.

சுபஸ்ரீயின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. எனவே பொதுமக்களும் சரி, தி.மு.க.வினரும் சரி ஃப்ளக்ஸ் பேனர் உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது. அனைத்து கட்சியினரும் இனி ஃப்ளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என தீர்மானம் செய்யவேண்டும். இந்தச் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories