தி.மு.க

முதலீடுகளை பெற அ.தி.மு.க ஆட்சி லாயக்கில்லை - க.பொன்முடி ஆவேச அறிக்கை

முதலீடுகளை பெற இந்த ஆட்சி லாயக்கில்லை என்பதற்கு 800 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அரியலூர் சிமெண்ட் விரிவாக்க ஆலை 17 மாதங்களாக உற்பத்தியை துவங்கவில்லை என்பதே உதாரணம் என பொன்முடி தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை பெற அ.தி.மு.க ஆட்சி லாயக்கில்லை - க.பொன்முடி ஆவேச அறிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

”அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் அமைச்சர் எம்.சி. சம்பத்திற்கு எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து, சுட்டு விரலை நீட்டும் தகுதி அறவே இல்லை” என முன்னாள் அமைச்சரும், தி.மு.க. விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலீடுகள் எங்கே” என்று கேட்டால் அதற்கு பதிலளிக்கத் தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ளாத தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் “எங்கள் கழகத் தலைவர் வெற்றுக் கூச்சல் போடுகிறார்” என்று கூறியிருப்பதற்கும், அரசு செய்தி வெளியீடு என்பதை அரசியலுக்காகப் பயன்படுத்தும் அதிகார அத்து மீறலுக்கும், துஷ்பிரயோகத்திற்கும், கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பும் போதெல்லாம், “பொய்” ஒன்றையே மூலதனமாக வைத்து, செயல்படுவதாகப் “பந்தா” காட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அவருடன் “வெளிநாடு சுற்றுலா” சென்று விட்டு வந்த தொழில்துறை அமைச்சரும், “தகவல் பஞ்சத்தில்” அடிபட்டு வீண் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழகம் அறியும்.

முதலீடுகளை பெற அ.தி.மு.க ஆட்சி லாயக்கில்லை - க.பொன்முடி ஆவேச அறிக்கை

அந்நிய முதலீடுகள் 25 சதவீதம் குறைந்து விட்டதாக மத்திய அரசின் “Director for Promotion of Industry and Internal Trade” நிறுவனமே கூறியிருப்பதை அமைச்சர் ஜமுக்காளம் போட்டு மூடி மறைக்க முயற்சிக்கிறார்.

வேலை வாய்ப்பு இல்லாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறியதையும், பல தொழிற்சாலைகள் மூடப்படுவதையும், சிறுகுறு தொழில்கள் நலிவடைந்து போனதையும்- ஏன் ஒரு கோடி இளைஞர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு இல்லாமல் காத்திருப்பதையும் மறைக்க “அறிக்கை” என்ற பெயரில் அமைச்சர் நாடகமாடுகிறார்.

தன் அறிக்கையில் “முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது” “புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கும் தொழில் துறை அமைச்சர், “அ.தி.மு.க ஆட்சியில் தனியார் துறை முதலீடு 1,02,772 கோடி ரூபாய்” என்றும், “2015 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல்வேறு நிலைகளில் உள்ள முதலீடு 104961 கோடி ரூபாய்” என்றும் “கற்பனைக் கதை” குதிரையைத் தட்டி விட்டு, சறடு திரித்திருக்கிறார்.

அவரது கற்பனையை அவர் தாக்கல் செய்த 2019-20 ஆண்டிற்கான தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பே தவிடு பொடியாக்கியுள்ளது. தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் “தொழில்துறையின் சார்பாக கையொப்பமிட்ட 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 28 நிறுவனங்கள்,19,228 கோடி ரூபாய் மதிப்பில் மட்டுமே வணிக உற்பத்தி தொடங்கியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வரியிலேயே “இந்த 19,228 கோடியிலும், 17 309 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளதாகவும், 23 353 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் நிறுவனங்கள் கூறியிருக்கின்றன” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அது கூட அரசின் தகவல் அல்ல. ஆகவே 104961 கோடி ரூபாய் முதலீடு பெற்று விட்டதாக அமைச்சர் கூறுவது வடிகட்டிய பொய்.

முதலீடுகளை பெற அ.தி.மு.க ஆட்சி லாயக்கில்லை - க.பொன்முடி ஆவேச அறிக்கை

சட்டமன்றத்தில் அமைச்சர் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பிலேயே “முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் இவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது” என்று எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, “முதலீடு செய்துள்ளதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவே” அமைச்சர் கூறியிருக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- அதன்படி வந்த முதலீடுகள் - கிடைத்த வேலை வாய்ப்புகள் குறித்து அரசிடம் நம்பகமான எந்தத் தகவலும் இல்லை என்பதை விட ஒரு கேவலம் இந்த ஆட்சிக்குத் தேவையா?

2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முகத்திரையை அதிமுக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பின் பக்கம் 18-ல் உள்ள தகவல்களே கிழித்துத் தோரணமாக தொங்க விட்டிருக்கிறது. “தொழில்துறையால் போடப்பட்ட 147 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்று கூட இன்னும் அமலுக்கு வரவில்லை” என்பது அதில் தெளிவாக உள்ளது. அதை மீண்டும் ஒரு முறை அமைச்சரே படித்துப் பார்த்து “அறிந்து” கொள்வது நல்லது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் இரண்டிலும் வெளியிடப்பட்ட பத்திரிக்கை குறிப்புகளில் இருக்கும் தகவல்களைச் சேகரித்து- அவற்றை அமைச்சர் ஒரு அறிக்கையாக வெளியிட்டு விட்டால் “முதலீடுகள் வந்து விட்டது” என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்ததில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க அரசின் ஒவ்வொரு கொள்கை விளக்கக் குறிப்புகளிலும், “புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 64 திட்டங்கள் வெவ்வேறு செயல்பாட்டில் இருந்து வருகிறது” என்று கூறிக் கொண்டே வருகிறார்களே தவிர, இன்றுவரை ஒரு முதலீடும் வரவில்லை; ஒரு தொழிற்சாலையும் வரவில்லை என்பதே உண்மை.

முதலீடுகளை பெற அ.தி.மு.க ஆட்சி லாயக்கில்லை - க.பொன்முடி ஆவேச அறிக்கை

இந்நிலையில், “கமிஷனில்” மூழ்கிக் கிடக்கும் எம்.சி. சம்பத், எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து கண்டன அறிக்கை விடுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஆகவே இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு “சொந்தக் கட்சி மாநாடுகள்” போலவும், “வெளிநாட்டுப் பயணம்” ஒரு சுற்றுலா போலவும் உல்லாசமாக நடத்தி, தொழில்துறையை படு பாதாளத்தில் தள்ளி விட்டது அதிமுக ஆட்சி.

முதலீடுகளைப் பெற இந்த ஆட்சி “லாயக்கில்லை” என்றால், “இந்த ஆட்சி எதற்குமே லாயக்கில்லை” என்பதைத்தான் வங்கிக் கடனில் 800 கோடி மதிப்பில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷனின் (TANCEM) விரிவாக்க ஆலை மூடிக் கிடப்பதில் தெரிகிறது. அரியலூர் சிமென்ட் விரிவாக்க ஆலை பணிகள் முடிந்து 17 மாதங்களாக உற்பத்தியைத் துவங்கவில்லை. இதனால் பாரத வங்கியில் வாங்கிய 600 கோடி ரூபாய் கடனுக்கு 68 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி கட்டியாகி விட்டது.

முதலீடுகளை பெற அ.தி.மு.க ஆட்சி லாயக்கில்லை - க.பொன்முடி ஆவேச அறிக்கை

சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான மைனிங் லைசென்ஸுகளை புதுப்பிக்கத் தவறியதால் மத்திய அரசுக்கு 50 கோடி ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட கொடுமையாக ஒரு டன் சுண்ணாம்புக்கல் 300 ரூபாய் மதிப்பில் தன் கைவசமே வைத்திருக்கும் “டான்செம்” நிறுவனம், இப்போது வெளிநாட்டிலிருந்தும் டன் ஒன்றிற்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்து இறக்குமதி செய்கிறது என்றால், இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது.

ஆகவே அதிமுக ஆட்சியில் வெளியிலிருந்தும் முதலீடுகளைப் பெற முடியாது. மாநிலத்தில் உள்ள ஆலை விரிவாக்கத்தையும் செய்ய முடியாது என்ற “கையாலாகத்தனத்தின் மூலதனமாக” அமைச்சர் திரு எம்.சி சம்பத்தும், அவருடைய முதலமைச்சரும் இருக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

தி.மு.க. ஆட்சியில், தொழில்துறை “வளர்ச்சியின் நட்சத்திரமாக” இருந்தது. “ஆக்ஸ்போர்டு அனால்டிகா” என்ற நிறுவனம் இந்திய அளவில் ஆய்வு நடத்தி, “இந்தியாவிலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏற்ற முதன்மை மாநிலம் தமிழகம்” என்று பாராட்டியது.

2006 முதல் 2011 வரை 62,349 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று, அதன் மூலம் 2,35,464 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கியது கழக அரசு. அமைச்சர் தன் சொந்த ஊருக்குச் செல்லும் போது வழி நெடுகிலும் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையுள்ள தொழிற்சாலைகள் கழக ஆட்சியில் துவங்கப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முதலீடுகளை பெற அ.தி.மு.க ஆட்சி லாயக்கில்லை - க.பொன்முடி ஆவேச அறிக்கை

அமைச்சர் வீட்டிலிருந்து மத்திய கைலாஷைத் தாண்டிச் சென்றார் என்றால், அவர் கண்ணில் படும் “டைடல் பார்க்” கழக ஆட்சியின் சாதனை. ஏன் “ஒற்றைச் சாளர முறையில் விரைந்து தொழில் தொடங்கும் அனுமதி வழங்க” தனியாகச் சட்டமே கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவும், எங்கள் கழகத் தலைவர் தொழில்துறையைக் கவனிக்கும் துணை முதலமைச்சராகவும் இருந்த கழக ஆட்சி.

இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமல் “அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும்”, “பூனை கண்ணை மூடிக்கொண்டால்” என்ற நிலையில் இருக்கும் அமைச்சர் எம்.சி. சம்பத்திற்கு எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து, சுட்டு விரலை நீட்டும் தகுதி அறவே இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories