தி.மு.க

அரசியலில் ஆதவன் : இளைஞரணியைக் கையில் எடுக்கும் உதயநிதி ஸ்டாலின் !

கலைஞரால் முரசொலியின் நிர்வாகப் பொறுப்புக்கு அழைத்து வரப்பட்ட உதயநிதி, தனது கடின அரசியல் பணியால் இன்று தலைவர் ஸ்டாலின் கையால் இன்று கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் ஆக உருவெடுத்துள்ளார். 

அரசியலில் ஆதவன் : இளைஞரணியைக் கையில் எடுக்கும் உதயநிதி ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் ஆக உதயநிதி ஸ்டாலின் கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த வந்த பாதை உங்களுக்காக :

நடிகர் உதயநிதி. சில ஆண்டுகளுக்கு முன் தமிழக மக்களுக்கு இவர் இப்படித்தான் அறிமுகம் ஆனார்.

ஆம். கடந்த 2011ஆம் ஆண்டின் இறுதியில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமானார். 2012ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி சேலத்தில் உதயநிதி நற்பணி மன்றத்தை தொடங்கினார். இது இன்றைக்கு தமிழகம் முழுவதும் மாவட்டம், வட்டம், கிளை என பரவி மக்கள் பணியாற்றி வருகிறது.

வெறும் திரைப்படத்தை சார்ந்து மட்டுமே பயணிக்காமல், சமூகப் பணிகளிலும் சளைக்காமல் இம்மன்றங்கள் ஈடுபட்டு வருகிறது. உதாராணமாக ஆங்காங்கே உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகள் வழங்குவது தொடங்கி, கஜா புயல் நிவாரணம் வரை சொல்லிக் கொண்டே போகலாம். தான் ஈடுபட்ட திரைத்துறையையும் மக்களின் பிரச்சனையை பேசக்கூடிய களமாக அவர் மாற்றிக் கொண்டார். நீர் பறவை, மனிதன், கண்ணே கலைமானே போன்ற எதார்த்தமான படைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இளைஞர்களால் கொண்டாடப்படக்கூடிய நபராக இருந்த உதயநிதி, அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்த ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கெடுத்து, எளிய மக்களை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று சந்தித்தார். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு, தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதன்பின்பு நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். இதனை பிரச்சாரம் என்று சொல்வதை விட மக்களோடு மனம் விட்டு உரையாடினார் என்றே சொல்லலாம். உதயநிதி, மக்களிடம் கேள்வி கேட்டு, அதற்கு பதில் பெறும் காட்சிகளை பார்த்து ஆளுங்கட்சினர் அரண்டு போயினர். இதன் வெளிப்பாடு, அதிமுக கூட்டணியின் பிரச்சார மேடைகள் ஒவ்வொன்றிலும் தெரிந்தது. உதாரணமாக, ’உதயநிதி பொய் சொல்கிறார்’ என பல மேடைகளில் பதற்றத்துடன் பிதற்றினார் அன்புமணி. இந்த காட்சிகளை மக்களுக்கு திரையில் போட்டுக்காட்டி பதிலடி கொடுக்கும் புதிய உத்தியை கையாண்டார்.

அரசியலில் ஆதவன் : இளைஞரணியைக் கையில் எடுக்கும் உதயநிதி ஸ்டாலின் !

எளிமையான, மக்களை கவரும் வகையிலான பிரச்சாரம் திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.பொது மக்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.முதலமைச்சர் பழனிச்சாமியே உதயநிதிக்கு பதில் அளித்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளானர்.

’’லட்சோப லட்சம் உடன்பிறப்புக்கள் நிறைந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடைசித் தொண்டன் நான் என தன்னை அவர் அறிமுகம் செய்து கொள்வார். அவரின் நிர்வாகத் திறன் என்பது கலைஞரால் அங்கீகரிக்கப்பட்டது. இன்றல்ல நேற்றல்ல, 2007ஆம் ஆண்டிலேயே தன்னுடைய மூத்தபிள்ளையான ‘முரசொலி’’யை நிர்வகிக்கும் பொறுப்பினை உதயநிதிக்கு வழங்கினார் கலைஞர். அதனை சீரும் சிறப்புமாக உதயநிதி செயல்படுத்தி வருதற்கான சான்றுதான், 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற பவள விழா நிகழ்வு. அரசியல்வாதிகள் நடிகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் அழைத்து மாபெரும் நிகழ்வாக அவற்றை மாற்றிக் காட்டினார்.

“அரசியலோடு பிறந்தவன்; அரசியலைப் பார்த்தே வளர்ந்தவன்; எனக்கொன்றும் அரசியல் புதிதல்ல’’ என்று சொல்லும் உதயநிதி தாத்தா கலைஞருக்காகவும், தந்தை தளபதிக்காகவும், இந்த இருவரின் படைவீரர்களுக்காகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பித்திருக்கிறார். இதனை உணர்ந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்களும், இளைஞரணி நிர்வாகிகளும், மக்களும் ‘உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும்’ என கடந்த மாதமே தீர்மானம் நிறைவேற்றி வேண்டுகோள் வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து திராவிட முன்னேற்றக்கழகத்தின் ‘இளைஞரணி செயலாளர்’ என்ற பொறுப்பை பெற்றிருக்கிறார் உதயநிதி. அவரது பிரச்சார உத்திகளும் உழைப்பும் திமுகவுக்கு பெரும் பலமாக அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories