கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை சரோஜா தேவி. இளம்வயதிலேயே நடனத்தின் ஆர்வம் உள்ள இவர், நடிப்பதிலும் ஆர்வம் காட்டினார். தனது 18-வது வயதில் 1955-ம் ஆண்டு கன்னட திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர், தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார்.
அதன்பிறகு தமிழில் 'திருமணம்' என்ற படத்தின் மூலம் தமிழ் மக்கள் முன் தோன்றினார். ஆனாலும் 1958-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த 'நாடோடி மன்னன்' மூலம் தமிழ் மக்கள் முன் பெருமளவு பாராட்டப்பட்டார். அதனை தொடர்ந்து சிவாஜி கணேசனுடன் 'பாகப்பிரிவு', ஜெமினி கணேசனுடன் 'கல்யாணப் பரிசு' என அடுத்தடுத்து உச்சபட்ச நடிகர்களுடன் நடித்தார்.
குறிப்பாக எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் நடித்த அன்பே வா, பாலும் பழமும், இருவர் உள்ளம், எங்க வீட்டுப் பிள்ளை என பல படங்கள் இவருக்கு பெருமளவு ஹிட் கொடுத்தது. இதில் இருவர் உள்ளம் திரைப்படம் கலைஞர் கைவண்ணத்தில் உருவானது குறிப்பிடத்தக்கது. சரோஜா தேவியின் கோபால் வசனமும், 'லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்' பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்றாகவே இருக்கிறது.
ஒரு நாளில் 18 மணி நேரம் நடித்து வந்த சரோஜா தேவி, இதற்காவே இவரை திரைத்துறையினருக்கும் பிடிக்கும். சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆருடன் அதிக பாடங்களில் நடித்த நடிகை என்ற பெருமை இவரையே சாரும். காலையில் சிவாஜியுடனும், மாலையில் எம்.ஜி.ஆருடனும் நடித்து வந்த இவர், எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.
இப்படியாக தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்த இவரை ரசிகர்கள் 'கன்னடத்து பைங்கிளி' என்றும், 'அபிநய சரஸ்வதி' என்றும் அன்போடு அழைப்பர். இதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து திரைத்துறையில் பெருமளவு வாய்ப்புகள் குறையவே, 1997-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'Once More' படத்தில் விஜய்க்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர் பல ஆண்டுகள் திரையில் பெரிய அளவில் தோன்றாமல் இருந்த இவர், ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஆதவன்' படத்தில் சூர்யாவுக்கு பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கூட தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார் சரோஜா தேவி.
இதனிடையே நாட்டின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பல அரசு விருதுகளும் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, பெங்களுருவில் உள்ள மல்லேஸ்வரம் என்ற பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது 87 வயதாகும் இவர், வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் காலமானார். நடிகை சரோஜாதேவியின் மறைவு தற்போது இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று (ஜூலை 13) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் மறைந்த நிலையில், இன்று நடிகை சரோஜா தேவி காலமானார். இப்படியாக அடுத்தடுத்து சோகம் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.